செவ்வாய், 15 நவம்பர், 2011

எம்.ஜி.ஆரைத் திமுகவில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம். எப்படித் தெரியுமா?


கலைஞர் தலைமையில் வழிநடப்போம்! தமிழக அரசைக் காப்போம்! என்று பேசிய எம்.ஜி.ஆர் திடுதிப்பென கருணாநிதிக்கு எதிராகப் பேசத் தொடங்கியது ஏன்? கருணாநிதி உள்ளிட்ட கட்சிக்காரர்கள் அத்தனை பேருடைய சொத்துக்கணக்கையும் எதற்காக பகிரங்கமாகக் கேட்கவேண்டும்? என்பன போன்ற கேள்விகள் எல்லோருக்குமே எழுந்தது.
இருவருக்குமே அரசியல் ரீதியாக நிறைய உயரங்கள் காத்துக்கொண்டிருந்தன. அவற்றை அடைவதற்கு பரஸ்பரம் உதவிசெய்துகொள்ளவேண்டும் என்பதில் இருவருமே கவனமாக இருந்தனர். அதன் விளைவுதான் கருணாநிதியை எம்.ஜி.ஆர் புகழ்வதும் எம்.ஜி.ஆரை கருணாநிதி பாராட்டுவதும்.
அமைச்சர் பதவி தரவில்லை. அவருக்குப் பிடிக்காத ஆதித்தனாரை அமைச்சராக்கினார். மு.க. முத்துவை சினிமாவில் நுழைத்தார் என்று எம்.ஜி.ஆருக்கு கருணாநிதி மீது கசப்புகள் இருந்தபோதும் அவருக்குத் தனிப்பட்ட முறையில் சில பிரச்னைகள் இருந்தன. வேறொன்றுமில்லை. நடிகர்களுக்கே உரித்தான கறுப்பு – வெள்ளை பிரச்னைதான். சாதாரண நடிகர்களே கொஞ்சம் வெள்ளை, நிறைய கறுப்பு கொடுங்கள் என்று கேட்டுவாங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் உச்சநட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர் மட்டும் விதிவிலக்காக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

கறுப்புப்பணம் வாங்குகிறார்கள் என்றால் ஏன் வாங்குகிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சட்டத்தை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம். வேறு வழியில்லை என்பதால்தான் வாங்குகின்றனர். சட்டமும் அரசும்தான் எங்களை இந்த நிலைமைக்கு மாற்றியிருக்கின்றன. அப்படிப் பார்த்தால் நாங்களும் திருடர்கள் தான்… லட்ச ரூபாய் ஊதியம் பெற்றால் அதில் அதிகபட்ச அளவாக 97 சதவீதம் டாக்ஸ் கட்டுகின்றனர். . இதில் இப்போது சூப்பர் டாக்ஸ், அது இது என்று வரி வசூலிக்கின்றனர். இதில் எப்படி நேர்மையாக வாழ முடியும்… நேர்மையாக நடக்க சட்டம் இடம்தராதபோது மனம் குறுக்கு வழியில் செல்கிறது. அதனால்தான் நல்லவர்களும் திருடர்களாக மாறுகின்றனர் என்று பிலிமாலயா இதழில் கருத்து தெரிவித்தவர் எம்.ஜி.ஆர்.
ஆக, சம்பாதிக்கும் பணத்தில் பெருமளவு பணத்தை வருமான வரியாகக் கட்டுவதில் எம்.ஜி.ஆருக்கு அதிருப்திகள் இருந்தன என்பது நிதர்சனம். இந்த இடத்தில் 23 மார்ச் 1992 தேதியிட்ட ஜூனியர் விகடன் பத்திரிகையில் இடம்பெற்ற தகவல் ஒன்றைப் பதிவுசெய்வது பொருத்தமாக இருக்கும்.
அந்தப் பத்திரிகையில் அப்போது போலீஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் ஒன்று வெளியாகிக் கொண்டிருந்தது. உயர்பதவியில் இருந்த காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் அனுபவக் குறிப்புகளே அந்தத் தொடர். அதன் பதிமூன்றாவது அத்தியாயத்தில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தனது பணிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள் மட்டும் இங்கே:
எம்.ஜி.ஆரைத் திமுகவில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம். எப்படித் தெரியுமா?
1971. அப்போது திமுக பதினைந்து எம்.பிக்களை வைத்திருந்தது. திமுக எம்.பிக்களின் ஆதரவு இந்திரா காந்தியின் அரசுக்குத் தேவைப்பட்டது. அதே சமயத்தில் கருணாநிதி தன் கைக்குள் இருக்கவேண்டும் என்று நினைத்தார் இந்திரா காந்தி. இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தார். திமுகவை உடைத்துவிட்டால்தான் அந்தக் கட்சி காங்கிரஸ் உதவியைத் தமிழ்நாட்டில் நாடும் என்று முடிவெடுத்தார். அதற்கான வேலைகளைச் செய்ய இண்டலிஜென்ஸ் உயர் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்.
திமுகவில் முக்கியப் புள்ளிகள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது எம்.ஜி.ஆர்தான் முன்னணியில் இருந்தார். அதனால்தான் அவரைத் திமுகவிலிருந்து இழுக்க முயற்சி செய்தோம். அப்போது ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். வருமானமும் அவருக்கு அதிகமாக இருந்த நேரம்.
இதைக் கருத்தில்கொண்டு வருமான வரி அதிகாரிகள், வருவாய் கண்காணிப்பு அமலாக்கப் பிரிவு என்று எல்லா அதிகாரிகளும் எம்.ஜி.ஆர் வீட்டை முற்றுகையிட்டு அவரைக் குடைந்தெடுத்தார்கள். அப்போது அவர் ஒரு சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்று வந்திருந்தார். அதற்கான கணக்கு வழக்குகளையும் விசாரித்தார்கள். ஆனால் இதற்கெல்லாம் பெரும் பின்னணி இருப்பது அவருக்குத் தெரியாது!
இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆருடன் பேச என்னை அனுப்பினார்கள். நான் போனபோது எம்.ஜி.ஆர் மிகவும் சோர்வாக இருந்தார். நானே வலியப் பேசி, ‘பிரச்னைகளை சமாளிக்க டெல்லிக்குப் போய் அம்மாவை (இந்திரா காந்தி) பாருங்க.. எல்லாம் சரியாகப் போய்விடும்’ என்று யோசனை சொன்னேன்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் எம்.ஜி.ஆர். பிறகு நானே, முக்கியமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் மூலமாக அம்மாவை (இந்திரா காந்தி) மீட் பண்ணுங்க என்று கூறி,வழிகாட்டிக் கொடுத்தேன். அதன்படியே எம்.ஜி.ஆர் அந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தன்னுடைய வழக்கறிஞர், ஆடிட்டருடன் சென்று பிரதமர் இந்திராவைச் சந்தித்தார். சந்திப்பு முடிந்து எம்.ஜி.ஆர் உற்சாகமாகத் திரும்பினார்.
இப்படித்தான் மெதுவாகத் தொடங்கி, திமுகவில் உட்பூசல் உண்டாக்கிக் கடைசியில் 1972-ல் எம்.ஜி.ஆரைத் திமுகவில் இருந்தே வெளியேற வைத்தோம்.
கருணாநிதி மீதான அதிருப்திகள் ஒருபக்கம். வருமானவரிப் பிரச்னைகள் ஒருபக்கம். இந்திரா காந்தி கொடுத்த நெருக்கடிகள் ஒரு பக்கம். அழுத்தம் தாங்கமுடியாமல் தவித்தார் எம்.ஜி.ஆர். புரட்சி வெடிப்பதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? வெடித்துவிட்டது. நிற்க.
கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அதை 14 அக்டோபர் 1972 அன்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெளிவுபடுத்தினார் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து நான் அறவே விலகிவிட்டேன். இரண்டொரு நாளில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க இருக்கிறேன்.
15 அக்டோபர் 1972 அன்று சென்னை கடற்கரையில் திமுக சார்பாக பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆரின் நீக்கம் பற்றிய பொதுக்குழுவின் முடிவுக்கு விளக்கம் கொடுப்பதுதான் அந்தக் கூட்டத்தின் நோக்கம்.
சட்டமன்ற உறுப்பினர்கள் சொத்துக் கணக்கு காட்டவேண்டும் என்று 1969ல் சட்டம் கொண்டுவந்தவர் கலைஞர். அப்படி நாங்கள் மூன்றாண்டுகளாகத் தந்துவருகிற கணக்கில் தவறு இருந்தால் சொல்லட்டும்; ஆனால் எம்.ஜி.ஆர் முதலாண்டு மட்டுமே கணக்கு தந்தாரே தவிர கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கணக்கு தரவில்லை. 13 தடவை நோட்டீஸ் அனுப்பியும்கூட தரவில்லை என்று பேசினார் நாவலர் நெடுஞ்செழியன்.
பிறகு அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசினார். ஒரு கனி மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன். அதுதான் எம்.ஜி.ஆர் – என்று ஒருமுறை நீ கூறினாய். நீ மறைந்தபிறகு உன் இதயத்தை எனக்குக் கொடு என்று கேட்டேன். நீயும் தந்துவிட்டாய்! ஆம், அந்தக் கனியோடுதான் இதயத்தைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் இன்று அந்தக் கனியை வண்டு துளைத்துவிட்டது. இனியும் வைத்திருந்தால் நீ கொடுத்த இதயத்தையும் துளைத்துவிடும் என்பதற்காகத்தான் அந்தக் கனியை எடுத்து எறிந்து விடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்! என்னை மன்னித்துவிடு அண்ணா! என்னை மன்னித்துவிடு அண்ணா!
எம்.ஜி.ஆரின் விலகல் திமுகவை செங்குத்தாகப் பிளந்துவிடும்; பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் எம்.ஜி.ஆருடன் ஐக்கியமாகிவிடுவார்கள் என்று ஏகப்பட்ட கற்பனைகள். கணிப்புகள். எதிர்பார்ப்புகள். ஆனால் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேலும் சில முக்கியப் பிரமுகர்களும் மட்டுமே எம்.ஜி.ஆருடன் சென்றனர். எம்.ஜி.ஆரின் உண்மையான பலம் அவருடைய ரசிகர்கள். அவர்கள் அவருடனேயே இருந்தனர், சில விதிவிலக்குகள் தவிர.
பலத்த ஆலோசனைகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.
கட்சிக்குள் இருக்கும்போதே போர்க்கொடி உயர்த்தியவர் எம்.ஜி.ஆர். இப்போது புதுக்கட்சி வேறு தொடங்கி விட்டார். போதாக்குறைக்கு, கருணாநிதியின் எதிரிகளான ஈ.வெ.கி. சம்பத், கம்யூனிஸ்ட் கட்சியின் எம். கல்யாண சுந்தரம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆருக்குப் பக்கபலமாக இருந்தனர். தனக்கு எதிராக எதையோ செய்யப்போகிறார் எம்.ஜி.ஆர் என்பது கருணாநிதிக்குப் புரிந்துவிட்டது. அநேகமாக ஊழல் புகார் எழுப்புவார் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு. அதைத்தான் எம்.ஜி.ஆரும் செய்தார்.
திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை ஆளுநர் கே.கே. ஷாவிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். கூடவே, கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் ஒரு புகார் பட்டியலைக் கொடுத்தார். அதுவும் கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் பற்றிய ஊழல் புகார்களே. புகார்ப்பட்டியலை வாங்கிய ஆளுநர் எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றைக் கொடுத்தார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி என்னிடம் வந்துள்ள புகார்ப்பட்டியல் முதலமைச்சரிடமே தரப்படும் என்றார் ஆளுநர். அதில் எம்.ஜி.ஆருக்கு விருப்பமில்லை. நேரே டெல்லிக்குக் கிளம்பிவிட்டார் ஜனாதிபதி வி.வி.கிரியைச் சந்திக்க. இந்தக் கையில் வாங்கிய புகார் பட்டியலை அந்தக் கையால் இந்திரா காந்தியிடம் கொடுத்துவிட்டார் கிரி. பின்னாளில் உதவக்கூடும் என்பதாலோ என்னவோ அவற்றைப் பத்திரமாக வாங்கி வைத்துக்கொண்டார் இந்திரா!
(தொடரும்)
0
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக