ஞாயிறு, 13 நவம்பர், 2011

சோரம்போதலுக்கு பிரதியுபகாரமாக, புலிகள் தமது ஆதிக்க காலத்தில்

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (22)
22. நள்ளிரவில் அச்சகப் பொருட்கள் கொள்ளை!
காந்தி திரும்பவும் எமது அச்சகப் பொருட்களைப் பற்றி கேள்வி எழுப்புவதனால், அதை அவன் எப்படியும் கைப்பற்றி விடுவது எனத் திட்டம் தீட்டியுள்ளான் எனப் புரிந்து கொண்டேன். பொதுவாகப் புலிகள் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் எனத் தீhமானித்தால், அதை என்ன விலை கொடுத்தும் சாதித்துவிடுவார்கள் என எனக்குத் தெரியும். எனவே இந்த விடயத்தில் பொய் ஏதாவது சொல்லப்போனால், அது எனக்குத்தான் ‘வில்லங்கமாக’ முடியும் என எண்ணினேன். அத்துடன் அச்சகப் பொருட்களை வைத்திருப்பது, புலிகளின் அகராதியைப் பொறுத்த வரையிலும்கூட சட்டவிரோதமானது அல்ல என்பதால், ஒளிவுமறைவின்றி  அவனது கேள்விக்குச் சாதாரணமாகப் பதிலளித்தேன்.

“அந்தப் பொருட்கள் முகமாலையில் இருக்கின்றன” எனக் கூறினேன்.

“என்ன முகமாலையிலா?” என ஆச்சரியப்பட்டு வினாவெழுப்பிய அவன், “அங்கை ஏன் கொண்டுபோய் வைச்சிருக்கிறாய்?” எனக் கேட்டடான்.“கொடிகாமத்தில் ஒரு ‘பிரஸ்’ (Press) போடுவதற்காக, அங்கு ஒரு சிநேகித ஆளின் வீட்டிலை கொண்டுபோய் வைச்சிருக்கிறேன்” எனக் கூறினேன்.
அவன் கண்களை உருட்டி என்னைப் பார்த்தான். பின்னர் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்துவிட்டு, “ எல்லாரும் நல்லாச் சுத்தப்பழகீட்டியள்” எனச் சொன்னான்.
நான், “உண்மையாகத்தான் அங்கை பிரஸ் போடலாம் என யோசிச்சனான்” எனக் கூறினேன்.
“இஞ்சை எவ்வளவோ இடமெல்லாம் கிடக்க, அந்தக் குழைக்காட்டுக்குள்ளை கொண்டுபோய் போடுறத்துக்கு ஏதோ திட்டம் இருக்கு. அதை என்னெண்டு சொல்லு. இல்லாட்டில் இந்தப் பொல்லுக்குத்தான் வேலை குடுப்பன்” என அவன் என்னை மிரட்டினான். அத்துடன் அந்தப் பொல்லையும் தூக்கி, அதனால்  எனது தோளில் தட்டிக் கொண்டிருந்தான்.“அப்பிடி ஒரு திட்டமும் இல்லை. யாழ்ப்பாணத்தில் எக்கச்சக்கமான பிரசுகள் இருக்கு. அதோடை வேலையாக்களைப் பிடிக்கிறதும் கஸ்டம். சம்பளமும் கூட. அதோடை யாழ்ப்பாணத்துக்கு அடுத்ததாக சாவச்சேரியிலைதான் ஒரு பிரஸ் இருக்கு. அதுக்கங்காலை கிளிநொச்சி வரையும் ஒரு பிரசும் இல்லை. அதனாலைதான் கொடிகாமத்திலை போட எண்ணினனான். அதோடை முகமாலையிலை நான் பிரஸ் சாமான் வைச்சிருக்கிற வீட்டுக்காரப் பொடியன் நல்லாப் பிரஸ் வேலை தெரிஞ்சவர். எனக்கு நல்ல நம்பிக்கையானவர்” என விளக்கினேன்.

ஆனால் அவன் மீண்டும் சிரித்துவிட்டு, “காரணங்கள் நல்லா யோசிச்சுத்தான் வைச்சிருக்கிறாய். உதை வேறையாருமெண்டால் நம்புவினம். நாங்கள் உங்களைப்போலை ஆயிரக்கணக்கான ஆக்களைக் கரைச்சுக் குடிச்சனாங்கள். எங்களுக்கு முந்தி ஐயர்மார் காது குத்தினவை. பிறகு பத்தர்மார் காது குத்தினவை. இப்ப புதிசாக உங்களைப் போலை ஆக்கள் காது குத்த வெளிக்கிட்டிருக்கறியள். உது நடக்காது. நீ எங்களுக்குப் பயந்துதான் அங்கை கொண்டுபோய் சாமானை வைச்சிருக்கிறாய். ஆனா இப்ப ஆப்பிட்டுப் போனாய். அதுதான் சமாளிக்கப் பார்க்கிறாய்” என அவன் பிரசங்கம் செய்தான்.

நான் அதற்கு, “ நான் ஒண்டும் ஒளிக்கல்லை. வைச்சிருக்கிற இடத்தைச் சொல்லிறன் தானே?” என்றேன்.

“பொத்தடா வாயை! களவும் செய்துபோட்டு, கதையும் விடுறாய்” எனச் சொல்லிக்கொண்டே, எனது தோளில் அந்தக் கொட்டனால் ஓங்கி ஒரு அடி விட்டான். அந்த அடி தோள் எலும்பில் பட்டு ‘நாதம்’ எழுப்பியது. நான் அதன்பின்னர் எதுவும் பேசாது அமைதியாக இருந்தேன்.

அதன்பின்னர் அவன், “முகமாலையிலை சாமான் வைச்சிருக்கிற இடம் உனக்கு நல்லாத் தெரியும் தானே?” என்று என்னிடம் வினவினான்.

நான் “ஓம்” என்று சொல்லித் தலையாட்டினேன்.

பின்னர் அவன் அங்கிருந்த ஒருவனை அழைத்து, “இவனை உள்ளை கொண்டுபோய் விடு” என உத்தரவிட்டான். மீண்டும் நான் சிறைக்குள் சென்றேன். உள்ளிருந்த அனைவரும் என் முகத்தை உற்றுப் பார்த்ததுடன், உடற் பகுதிகளையும் ஆராயத் தொடங்கினர். ஆனால் எனது இருப்பிடத்தில் அமர்ந்துகொண்ட நான் வேறு சிந்தனையில் ஆழ்ந்தேன்.

அதாவது ‘எம்மிடம் அச்சகப் பொருட்கள் இருக்கிறது என்பதை இவங்களுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?’ என எண்ணினேன். ஏனெனில் நாம் அச்சகம் போடும் எண்ணத்துடன் சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் அந்தப் பொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருந்தாலும், அது கைகூடும்வரை அதை இரகசியமாகவே வைத்திருந்தோம்.

இந்திய அமைதிப்படை அங்கு நிலை கொண்டிருந்த காலத்தில், அவர்களுக்கு புலிகளுடன் மோதல் ஆரம்பகாகப் போகின்றது என்பதை ஊகித்திருந்த நாம், இந்திய இராணுவத்தால் எமது புத்தகக்கடைகளுக்கும் அச்சகப் பொருட்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் எனக் கருதி, (எதிர்பார்த்தபடியே யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்னாலிருந்த எனது கடை யுத்தத்தின் ஆரம்ப நாட்களிலேயே இந்திய இராணுவத்தின் பீரங்கித்தாக்குதலில் சுக்கு நூறாகியது) அச்சகப் பொருட்களை இடம் மாற்றியிருந்தேன்.

புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் யுத்தம் ஆரம்பிப்பதற்குச் சில நாட்கள் இருக்கையில், நண்பர் ஒருவரின் உதவியுடன் மாட்டு வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திய நான், எனது நண்பருக்கும் எனக்கும் தெரிந்த யாழ்ப்பாணக் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் நாவலர் வீதியில் இருந்த அவரது வீட்டில் எமது அச்சகப் பொருட்களைக் கொண்டு சென்று வைத்தோம். அந்த ஆசிரியர் யாழ்ப்பாணக் கல்லூரியை நடாத்திய கிறிஸ்தவ மிசனில் முக்கிய பொறுப்புகளை வகித்ததால், மிசனுக்குச் சொந்தமான சில அச்சகப் பொருட்கள் ஏற்கெனவே அவர் வீட்டில் இருந்தன. அந்தப் பொருட்களுக்கு மத்தியில் எமது பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. (எமது வேண்டுகோளை தனது கடமையாக ஏற்று, அச்சமின்றி உதவி புரிந்த அந்த அற்புதமான ஆசிரியரின் உதவியை என்றென்றும் மறக்க முடியாது)

1990ல் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையிலான யுத்தம் பிரேமதாச – புலிகள் உடன்படிக்கையின் மூலம் நிறுத்தப்பட்டு, இந்திய இராணுவத்திடமிருந்து புலிகள் ‘பிணை’ எடுக்கப்பட்டு, இந்திய இராணுவம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், மீண்டும் ஒரு மாட்டு வண்டி மூலம் எமது அச்சகப் பொருட்களைப் புத்தகக்கடைக்கு எடுத்து வந்து வைத்திருந்தேன். இந்த நிலைமையில் இப்பொருட்கள் இருப்பதை புலிகளுக்கு யார் சொல்லியிருப்பார்கள் என்பதை ஆழமாக யோசித்தேன்.

சில மாதங்களுக்கு முன்னர் புலிகளின் பத்திரிகையான ‘ஈழநாதம்’ தினசரியின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் தற்செயலாக என்னைச் சந்தித்தபோது, “என்ன பெரிய பிரஸ் ஒண்டு போடுறதுக்கு எக்கச்சக்கமான சாமான்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவந்து வைச்சிருக்கிறியளாம்?” என வினவியிருந்தார். அவர் முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த ஒருவராவார். பின்னர் அவர் பொலிசாருடன் சந்தேகத்துக்கிடமான சில தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். பின்னர் அவர் பல்வேறு இயக்கங்களுக்கும் சுத்தியடித்துவிட்டு, புலிகள் ஆதிக்கம் பெற்றதும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். (யாழ்ப்பாணம் 1995 ஒக்ரோபர் 30ம் திகதி  புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் ஈ.பி.டி.பி கட்சியினருடன் ஒட்டிக்கொண்டதாக அறிய வந்தது)

ஆனால் அவர் எம்முடன் நெருக்கமான தொடர்புகள் எதுவும் கொண்டிருக்காததால், அவருக்கு நாம் அச்சகம் தொடங்குவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருப்பதை வேறு யாரோதான் சொல்லியிருக்க வேண்டும். அந்தத் தகவல் கிடைத்ததும், புலிகளிடம் ‘நல்ல’ பெயர் எடுப்பதற்காக, எமது அச்சகப் பொருட்களைக் கைப்பற்ற வேண்டும் என அவர் ஆலோசனை சொல்லியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அவருக்கு இந்தத் தகவல் எப்படிக் கிடைத்தது என்பது முக்கியமான ஒரு விடயம்.

அவருக்கோ அல்லது நேரடியாகப் புலிகளுக்கோ எமது அச்சகம் பற்றிய தகவல் எவ்வாறு கிடைத்திருக்கும் என்பது பற்றிப் பின்னர் எமக்கு ஏற்பட்ட ஊகம் திட்டவட்டமானது என நிரூபிப்பதற்குப் போதிய சான்றுகள் இல்லாவிடினும், தர்க்கரீதியாக அந்த முடிவை அடைவதில் சில காரணிகள் உள்ளன. பெரும்பாலும் அதுதான் நடந்திருக்க வாய்ப்புண்டு.

அதாவது நாம் அச்சகம் ஒன்றைத் தொடங்க இருக்கும் விடயம் எமது நெருக்கமான தோழர்கள் தவிர்;த்து, எம்முடன் அரசியல் ரீதியாக முரண்பட்ட ஒருவருக்கும் தெரிந்திருந்தது. கந்தர்மடத்தைச் சேர்ந்த அவர் அடிக்கடி எமக்கு அருகிலிருந்த ஒரு புத்தகக்கடைக்கு வந்து செல்பவர். அந்தப் புத்தகக்கடையை நடாத்தியவர்கள் எம்முடன் முரண்பாடு கொண்ட அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எமது தோழர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து வந்ததால், நாமும் அவர்களும் பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவர்களில் இந்த ஒருவர் மட்டும் இடையிடையே எமது புத்தகக்கடைக்கு வந்து எம்முடன் கதைத்து எமது அரசியல் நிலைப்பாடுகளை அறிய முயற்சி செய்வார். (எம்மை உளவு பார்க்கிறோம் என்ற எண்ணத்தில் போலும்!)

அந்த அரசியல் கட்சியினர் தம்மை இடதுசாரிகள் என்று சொல்லிக்கொண்ட போதிலும், புலிகளை ஆதரிப்பவர்கள். இலங்கையிலுள்ள அனைத்து இடதுசாரிக் (கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன நீங்கலாக) கட்சிகளும் புலிகளை சந்தேகத்துக்கு இடமின்றி பாசிசவாதிகள் எனக் கருத்துக் கொண்டிருக்கையில், இவர்கள் மட்டும் புலிகளை தேசிய விடுதலைவாதிகள் எனச் சொல்லி வந்தவர்கள். புலிகள் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் வகை தொகையின்றி நரவேட்டையாடி வந்த நேரத்தில், அதைப்பற்றி எதுவும் பேசாது, அரசாங்கத்தின் ஒடுக்குமுறையைப்பற்றி மட்டும் பேசி வந்தவர்கள்.

அவர்களது இந்த சோரம்போதலுக்கு பிரதியுபகாரமாக, புலிகள் தமது ஆதிக்க காலத்தில் இந்தக் கட்சியினரை மட்டும் யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்திருந்தனர். அவர்கள் அரசியல் ரீதியாகப் புலிகளை ஆதரித்தது மட்டுமின்றி, நடைமுறைரீதியாகவும் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்பதற்குப் போதிய சான்றுகள் உண்டு. (அது தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று)

அந்தக் கட்சியினரின் புத்தகக்கடைக்கு வந்து போகும் அந்தக் கந்தர்மட நபர், எதிர்பாராதவிதமாக எமது அச்சக முயற்சிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டதுண்டு. ஒருமுறை எமது அச்சகத்துக்காக எழுத்து பெட்டிகள் வைக்கும் தாங்கிகள் கொண்டுவரப்பட்டு, அதை நாம் உள்ளே எடுத்துச்சென்ற போது, அவர் அழையா விருந்தாளியாக எமக்குப் பின்னால் திடீரென உள்ளே நுழைந்து, மரப்பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்த அச்சகப் பொருட்களைப் பார்த்துவிட்டார். பின்னர் அதுபற்றி விசாரித்துத் தெரிந்தும் கொண்டார். அவர் அதைப் பார்த்துவிட்டுப் போன சில நாட்களில் அவர்கள் அணியிலுள்ள அரியாலையைச் சேர்ந்த இன்னொருவர்,  நாம் அச்சகம் தொடங்கவிருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாக என்னிடம் கூறினார்.

எனவே எமது அரசியல் ரீதியான விரோதிகளும், புலிகளுடன் கூடிக்குலாவியவர்களுமான அவர்களுக்கு நாம் அச்சகம் தொடங்குவது தெரிந்துவிட்டதால், நிட்சயம் அவர்கள் மூலம் புலிகளுக்கு அந்தத் தகவல் தெரிந்துவிடும் என்பது எமக்கும் தெரியும். எனவே நாம் அந்த அச்சகப் பொருட்களை அங்கிருந்து முகமாலைக்கு இடம் மாற்றியதுக்கான காரணங்களில் அதுவும் ஒன்று.

நாம் இந்தப் பொருட்களை ஒரேநாளில் முகமாலைக்கு இடமாற்றாமல், படிப்படியாகவே இடமாற்றினோம். முகமாலையைச் சேர்ந்த எனது நண்பரும் அவரது மைத்துனரும் சுமார் இரண்டு மாதங்களாக சைக்கிள்களில் அந்தப் பொருட்களை கட்டம் கட்டமாக இடம் மாற்றினர். என்னைக் கைதுசெய்யப்பட்ட தினத்தன்றுதான், அவர்கள் கடைசிக்கட்டமாக அந்தப் பொருட்களை எடுத்துச் சென்றனர். எதிர்பாராதவிதமாக அன்றைய தினமும் அந்த கந்தர்மட நபர் அங்கு வந்ததுடன், நாம் அச்சகப் பொருட்களை இடமாற்றுவதையும் அவதானித்துவிட்டுச் சென்றார். எனவே இத்தகைய சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் மூலமாகவே இந்த விடயம் புலிகளுக்கு எட்டியிருக்கலாம் என்ற சந்தேகம், எமக்கு இன்றுவரையும் உண்டு.

எனது சிந்தனைகளில் இந்த விடயம் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், காந்தியும் அவனது சகாக்களும் அந்த அச்சகப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தமை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இரவானதும் அவர்களில் சிலர் சிறைக்கு வந்து என்னை வெளியே அழைத்து, முன்னர் நான் இங்கு வரும்போது உடுத்துவந்த வெள்ளைச் சாரத்தையும் சேர்ட்டையும் தந்து, அவற்றை அணிந்து கொள்ளச் சொன்னபோது, என்னை விடுதலை செய்யப் போகிறார்களோ என்ற ஒரு சிறு நப்பாசைதான் எனக்கு முதலில் உண்டானது.

அதன்பின்னர், அவர்கள் எனது கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிட்டு, ஒரு வாகனத்தில் முன்பக்கம் ஏற்றிக் கொண்டனர். எனக்கு இருபக்கமும் காந்தியும் உதயனும் உட்கார்ந்து கொண்டனர். வாகனத்தின் பின்னால் துணைக்காக ஐந்தாறு புலிகள் ஏறிக்கொண்டனர். எங்கே போகிறோம் என்பதை அவர்கள் எனக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் எனக்குள் இது சம்பந்தமாக ஒர் ஊகம் இருந்தது. எமது வாகனம் இரவின் அந்தகாரத்தை ஊடறுத்துக்கொண்டு, சுமார் ஒரு மணித்தியாலம் ஓடிய பின்னர், எங்கேயோ நின்றது. எனது கண்களை மூடிக் கட்டப்பட்டிருந்த கறுப்புத் துணிகள் அகற்றப்பட்டன. எமது வாகனம் முகமாலைச் சந்தியில் கண்டி வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு முன்னால் நின்றிருப்பது தெரிந்தது.

நான் பல தடவைகள் வந்து சென்ற அந்த இடத்தைப் பார்த்த போது, பழைய நினைவுகள் மனதில் தோன்றி அந்த இனிமையான நாட்களுக்கு என்னை இட்டுச் சென்றன.

காந்தி என்னைப் பார்த்து, “எந்தப் பக்கம் போக வேணும்” எனக் கேட்டான்.

நான் அவனிடம், “தெற்குப் பக்கமாகப் போக வேணும்” என்று சொல்லவிட்டு, கைகளை அந்தப் பக்கம் காட்டினேன்.

வாகனம் புகையிரதப்பாதையைக் கடந்து தெற்கு நோக்கிய கிரவல் பாதையில் குலங்குpக் குலுங்கிப் பயணிக்கத் தொடங்கியது. மழை பெய்திருந்தபடியால், வீதியின் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்தப் பாதையில் சிறிது தூரத்தில் புலிகளின் பெண்கள் அணியின் ஒரு முகாம் இருப்பது எனக்குத் தெரியும். அந்த முகாமின் முன்னே நாம் பயணித்த வாகனம் சென்றபோது, சில பெண் புலிகள் துப்பாக்கிகளுடன் முன்னே வந்து எமது வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். உடனும் பின்னால் இருந்து பயணித்துக்கொண்டிருந்த புலி உறுப்பினன் ஒருவன் துள்ளிக்குதித்து ஓடிவந்து, அந்தப் பெண் புலிகளிடம் வாகனத்தில் பயணிப்பது யார் (காந்தி) என்பதை விளக்கியதும், அவர்கள் மரியாதையுடன் விலகிக் nஅகாண்டனர்.

அதன்பின்னர் நான் வழிகாட்ட, வாகனம் எமது அச்சகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் போய் நின்றது. காந்தியின் உத்தரவுக்கிணங்க நான் வீட்டுக்காரரின் பெயர் சொல்லி அழைத்தேன். வந்திருப்பது நான்தான் என அறிமுகப்படுத்தி அழைத்ததால், அந்த வீட்டுக்காரர் ‘இந்த அகால வேளையில் என்னத்துக்காக வந்திருக்கிறார்?’ என்ற பதைப்புடன், நித்திரையைவிட்டு எழுந்தோடி வந்தார். ஆனால் புலிகள் அவரை என்னை அணுக அனுமதிக்கவில்லை. என்னுடன் சுதந்திரமாகக் கதைக்கவும் விடவில்லை. அவர்கள் சொல்லித்தந்தபடி அச்சகப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தைக் காட்டும்படி அவரிடம் நான் கூறினேன்.

அதன்பின்னர் அந்த வீட்டுக்காரரிடம் பெற்ற சாக்குகளின் உதவியுடன், மிகக் கனதியான அந்தப் பொருட்களை அவர்கள் தூக்கி வந்து வாகனத்தில் ஏற்றினர். அதில் சில பொருட்கள் புலிகளின் கண்களில் படாது தப்பிவிட்டதாகவும், அவற்றை அந்த வீட்டுக்காரர் சில மண் பானைகளில் போட்டு (அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்து விக்கிரகங்களை இவ்வாறு பானைகளுக்குள் ஒளித்து வைத்து தமிழ் மக்கள் வணங்கியமை நினைவுக்கு வந்தது) நீணடகாலமாக மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததாகவும் பின்னர் அறிந்து கொண்டேன். அதன் தற்போதைய நிலை எனக்குத் தெரியவில்லை.

அதன்பின்னர் அந்த வாகனம் ‘கொழுத்த வேட்டை’யுடன் சிறைச்சாலை வளாகம் நோக்கிப் பயணித்தது. இவ்வாறு அரும்பாடுபட்டு, உயரிய நோக்கங்களுக்காக நாம் வாங்கியிருந்த, பெறுமதிமிக்க (அன்றைய நிலையில் அதன் பெறுமதி 15 இலட்சம் ரூபா வரை இருக்கும்) அந்த அச்சுச் சாதனங்கள், இந்தக் கொள்ளைக்காரப் புலிகளால் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த எழுத்துக்களே பின்னர் புலிகளால் வெளியிடப்பட்டு வந்த ‘ஈழநாதம்’ தினசரியில் பல்வேறு அழகு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டன என அறிந்தேன்.

நான் சிறைக்குத் திரும்பி வந்து, எனது சிறை உடுப்புக்கு மாறி, உள்ளே சென்றபோது, உள்ளேயிருந்த சிறிய அறைக்குள்ளிலிருந்து ஒரு கைதி மிகவும் பெருத்த குரலில் ஓலமிட்டு அழுவது கேட்டது. அவர் அடிக்கடி “ஐயோ என்னைச் சுட்டுக் கொல்லுங்கோ” என கூக்குரலிட்டு அழுதுகொண்டிருந்தார். அதைக் கேட்க எனக்கு பெரும் அதிர்ச்சியாகவும், பயமாகவும், அந்தரமாகவும் இருந்தது. சிறிது நேரத்தில் சில புலிகள் சிறையைத் திறந்து உள்ளே வந்து, சில கைதிகளின் உதவியுடன் அந்த ‘சீவனை’த் தூக்கிக்கொண்டு வெளியே போயினர்.

என்னே கொடுமை! அவரது வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும், இரத்தம் இரத்தமாக வடிந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக