செவ்வாய், 22 நவம்பர், 2011

எந்தக் கல்லூரியிலும் நன்கொடைக்கான ரசீது வழங்கப்படுவதில்லை

தொழில்நுட்ப, மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்க்கும்போது நன்கொடை பெற்றால் ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகைசெய்யும் சட்டமுன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை சென்ற வாரம் அனுமதி அளித்துவிட்டது. இந்த சட்டமுன்வரைவு இப்போது தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும்.  பல மாதங்களாகத் தூங்கிக் கொண்டிருந்த மசோதாக்களில் இதுவும் ஒன்று. தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் முறையற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் மசோதா என்று இருந்ததை, இப்போது சிறு மாற்றங்களுடன் உயர் கல்வி நிறுவனங்கள் மசோதா 2011 என்று மாற்றியிருக்கிறார்கள். முந்தைய மசோதாவில் நன்கொடை வசூலித்தால் ரூ.50 லட்சம் அபராதம் என்றிருந்ததை இப்போது இரட்டிப்பாக்கி, ரூ.1 கோடி அபராதம் என்று திருத்தப்பட்டுள்ளது.  இது நல்ல நடவடிக்கை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஏறக்குறைய 90 விழுக்காடு கல்வி நிறுவனங்கள் அரசியல்வாதிகளால் அல்லது அவர்தம் பினாமிகளால் நடத்தப்படும் கல்லூரிகளாக இருப்பதால், இந்தச் சட்டம் வெறும் காகிதப் புலியாக இருக்குமா அல்லது நிஜமாகவே பாயும்புலியாக இருக்குமா என்பதை சற்று ஐயத்துடன்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.  கல்வி நன்கொடையைப் பொருத்தவரை எந்தக் கல்லூரியிலும் அதற்கான ரசீது எதுவும் வழங்கப்படுவதில்லை. மாணவனின் பெற்றோரின் வசதி, அவரது தொழில், அரசியல் செல்வாக்கு என்பதைப் பொருத்துக் கல்வி நன்கொடை மாறிக்கொண்டே இருக்கும். இதில் ஒரு மாணவர் எப்படி தனது புகாரை, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்க முடியும்? லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் முன்னதாகவே புகார் சொல்லி, அவர்கள் எண்கள் குறித்துத் தரும் பணத்தைக் கொடுத்து, கையும்களவுமாகப் பிடிக்கும் நடைமுறை தற்போது அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. இதேபோன்ற நடைமுறை தனியார் கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்த இந்தச் சட்டம் வகைசெய்யுமா?  அப்படியே புகார் செய்யும் மாணவர் தனது புத்திசாலித்தனத்தால் (செல்போன், ரகசிய கேமரா உதவியுடன்) ஆதாரத்தை உருவாக்கி, கல்வி நன்கொடையை நிரூபித்தாலும், அந்த மாணவர் அக்கல்லூரியில் தொடர்ந்து படிக்க இயலுமா? பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்தப் புகாரில் வெற்றியடையும் ஒரு மாணவர் தான் விரும்பும் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க, இந்தச் சட்டம் உறுதி செய்யுமா? புகார் தரும் மாணவர், அவரது பெற்றோருக்குப் பாதுகாப்பு உறுதியளிக்க இந்தச் சட்டத்தில் வழிகோலப்படாததால், எந்த அளவுக்கு இந்தச் சட்டம் பயனளிக்கும்?  எல்லா கல்லூரிகளும் நன்கொடை வாங்குவதில்லை. தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம்போல நன்கொடை வசூலிக்காமல் வெளிப்படைத்தன்மையுடன் மாணவர் சேர்க்கை நடத்தும் கல்வி நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. புகழ் பெற்ற கல்லூரிகள், பெரிய நிறுவனங்கள் வளாக நேர்காணல் நடத்தி ஆள்தேர்வு செய்யும் கல்லூரிகளில்தான் நன்கொடை பல பெயர்களில் வசூலிக்கப்படுகிறது. பெற்றோர்களும், போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் கல்வி நன்கொடையை வழங்குகிறார்கள். இதில் சில பெற்றோர் தங்களிடம் இருப்பது கறுப்புப் பணம்தானே என்று கேட்டதையெல்லாம் கொடுக்க, பல நடுத்தர வகுப்புப் பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் வேதனையான ஒன்று.  ஏற்கெனவே பல மாநிலங்களில் நன்கொடை வசூலுக்குத் தடை உள்ளது. மீறி வசூலித்தால் அங்கீகாரம் ரத்து, பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற முடியாது என்றெல்லாம் அச்சுறுத்தல் உள்ளது. ஆனாலும், தனியார் கல்லூரிக் கட்டடங்கள் வானுயர வளர்கின்றன. அதன் உரிமையாளர்களும் மேலும் பல கல்லூரிகளைத் தொடங்கியவண்ணம் இருக்கிறார்கள்.  இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததற்கு அடிப்படையான காரணம், அவர்கள் தாங்கள் வசூலிப்பது, கல்வி நன்கொடை (கேபிடேஷன்) அல்ல என்றும், மாணவர்களும் பெற்றோர்களும் தாங்களாகவே அளிக்கும் பொதுநன்கொடை (வாலன்டரி டொனேஷன்) என்றும் வகைப்படுத்துவதுதான். இப்போதெல்லாம் இந்த டொனேஷனைக்கூட, நேரிடையாக கல்லூரிக் கணக்கில் வரவு வைக்காமல், தாங்கள் நடத்தும் கல்வி அறக்கட்டளைக்கு வரவு நன்கொடைக்கான வைக்கிறார்கள்.  இன்று இந்தியாவில் அறக்கட்டளை என்பது பெரும்பாலும் கறுப்புப் பணத்திற்கான பாதுகாப்புப் பெட்டகம் போல ஆகிவிட்டநிலையில், நிறைவேற்றப்பட இருக்கும் மசோதாவால் நன்கொடை வழங்குவதை எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என்கிற கேள்வி எழுகிறது.  ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் படித்த மாணவர் நல்ல நிலைமைக்கு உயர்ந்த பின்னர், தான் மனமுவந்து அந்தப் பள்ளி அல்லது கல்லூரிக்கு சில லட்சம் ரூபாய் அல்லது கோடி ரூபாய்கூட அளிக்கலாம். அதுதான் உண்மையான நன்கொடை. அப்படியில்லாமல், ஒரு மாணவர் ஒரு கல்லூரியில் சேருவதற்கோ அல்லது சேர்ந்து படிப்பை முடிக்கும் இடைப்பட்ட காலத்திலோ, அந்தக் கல்லூரி அல்லது அந்த கல்லூரி உரிமையாளர் அங்கம் வகிக்கும் எந்தவொரு அறக்கட்டளைக்கும் எந்தப் பெயரில் பணம் செலுத்தினாலும் அது கல்வி நன்கொடை (கேபிடேஷன்) என்றே கருதி, அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்கின்ற நிலைமையை இந்த மசோதா உருவாக்குமானால், அப்போது மட்டும்தான் இந்தச் சட்டத்தால் இந்தியாவின் கல்விச் சூழலில் மாற்றம் ஏற்படுத்த முடியும்.  இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளின் உரிமையாளர்கள் தங்களுக்குள் சங்கம் வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தச் சங்கத்திலிருந்து இதுவரை, இந்த அபராதத் தொகை அதிகம் என்றோ, இந்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றோ சிறிய அறிக்கைகூட வரவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சட்டத்தை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது வெளிப்படை.  மசோதாவின் நோக்கம் நல்லதாகவே இருந்தாலும், சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கும்போல் இருக்கிறதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக