வியாழன், 3 நவம்பர், 2011

அன்று யாழ்ப்பாணம் நூலகம்: இன்று அண்ணா நூலகம்: சுப.வீரபாண்டியன் ஆவேசம்


1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் நூலகம் ஒன்று சிங்களர்களால் கொளுத்தப்பட்டது. இதோ தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது. இதனைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதுடன், இச்செயலை எதிர்த்துப் போராடத் தன்மானமுள்ள தமிழர்களையும், அறிவாளர்களையும் பேரவை அறைகூவி அழைக்கின்றது.திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை கோட்டூபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விரைவில் மருத்துவமனையாக மாற்றப்படும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு, தமிழர்களின் நெஞ்சங்களில் அதிர்ச்சி நெருப்பை அள்ளிக்கொட்டியிருக்கிறது.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாகவும், நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டு அறிவுத் தாகத்தைத் தீர்க்கும் அரங்கமாகவும் எழுந்து நிற்கும் அதனை, எந்த நியாயமான காரணமும் இன்றி இடம் மாற்றுவது ஏற்கத்தக்கதன்று. இடமாற்றம் என்பது கூட இடப்போதைக்குச் சொல்லப்படும் ஒரு சமாதானமாகவே தெரிகிறது.
கலைஞரால் உருவாக்கப்பட்டது என்னும் ஒரே காரணத்திற்காக, அதனை இழுத்து மூடிவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு இருக்கக்கூடும். ஏற்கனவே கோட்டையில் இருந்து அகற்றப்பட்ட, புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்திருந்த செம்மொழி ஆய்வு நூலகத்தின் நூல்கள் எல்லாம் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியவில்லை.
தமிழ் இனத்தை அறிவார்ந்த கல்வித்துறையில் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நூலகம் முடக்கப்படுவது அந்த நோக்கத்தையே சிதைக்கும் முதல் படியாக உள்ளது.
ஒவ்வொரு துறை சார்ந்த கட்டிடத்திற்கும் ஒவ்வொரு விதமான உள்கட்டமைப்பு உள்ளது. திடீரென்று ஒரு மருத்துவமனையைத் தொடர்வண்டி நிலையமாகவோ, ஒரு பள்ளிக் கூடத்தை பேருந்து நிலையமாகவோ மாற்றிவிட முடியாது. அப்படி மாற்ற முயல்வதால் கட்டிட ஒழுங்கின்மையும், தேவையற்ற பொருட்செலவுமே ஏற்படும். இவை குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல், செம்மொழி, கலைஞர் போன்ற பெயர்களே இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் செயல்படுவது ஓர் அரசின் கொடூர முகத்தையே காட்டுகிறது.
இதனைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதுடன், இச்செயலை எதிர்த்துப் போராடத் தன்மானமுள்ள தமிழர்களையும், அறிவாளர்களையும் பேரவை அறைகூவி அழைக்கின்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக