சனி, 5 நவம்பர், 2011

தொலைபேசி இணைப்பு: தயாநிதியிடம் வசூலிக்க வலியுறுத்தல்

முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி, 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய புகார் தொடர்பாக, சி.பி.ஐ., விரைந்து விசாரணையை நடத்தி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை, அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

"2 ஜி ஸ்பெக்ட்ரம்' விவகாரம் சூடு பிடிப்பதற்கு முன், கடந்த 2004ம் ஆண்டு, தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதிக்கு வழங்கப்பட்ட, சென்னை தொலைபேசியின் 323 இணைப்புகளை, முறைகேடாக "சன் டிவி' நிறுவனத்திற்கு பயன்படுத்தியதாக, சி.பி.ஐ., கண்டுபிடித்து, கடந்த 2007 செப்.,ல் தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்திற்கு தெரிவித்தது. ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை, "போர்ட் கிளப்'பில் உள்ள அவரது வீட்டிலிருந்து, 3.4 கி.மீ., தொலைவில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செயல்பட்ட "சன் டிவி' நிறுவனத்திற்கு, அந்த 323 இணைப்புகளும்,"ஆப்டிக் பைபர் கேபிள்' மூலம் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதோடு, இணைப்புகள் அனைத்தும் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் என்ற பெயரில் வழங்கப்பட்டிருந்தது எனவும், சி.பி.ஐ., அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த இணைப்புகள், ஐ.எஸ்.டி.என்., (Integrated Switching Digital Network) அதாவது பெரிய அளவிலான படக்காட்சிகள் மற்றும் தகவல்களை பெறவும், அனுப்பவும் பயன்படுத்தக்கூடியவை. இந்த முறைகேட்டால், 440 கோடி ரூபாய் அளவிற்கு பி.எஸ்.என்.எல்.,க்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.இந்த முறைகேடு குறித்து, தயாநிதி மீது விசாரணை நடத்தவேண்டும் என, பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து ஆவணங்களைப் பெற்று அவற்றை தற்போது, சி.பி.ஐ., பரிசீலித்து வருகிறது. இந்த ஆய்வு நடவடிக்கைகளுக்கு பின், முறையான வழக்குகள் பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தயாநிதியின் வீட்டிற்கு எப்படி அதிக அளவில் ஐ.எஸ்.டி.என்., தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன; அவை எப்படி சன் "டிவி'க்கு இணைக்கப்பட்டன என்ற விவரங்களைத் தருமாறு தகவல் தொடர்புத் துறையை சி.பி.ஐ., கேட்டிருக்கிறது. அவர் வீட்டிற்கு வழங்கப்பட்ட இணைப்புகள், எப்படி சன் "டிவி'யால் பயன்படுத்தப்பட்டன. எந்த தொழில்நுட்பம் அதற்கு பயன்படுத்தப்பட்டது போன்றவை குறித்தும் சி.பி.ஐ., விசாரணை நடத்தவுள்ளது.

இந்நிலையில், தயாநிதிக்கு ஆதரவாக, ஆவணங்களை அழிக்கும் முயற்சி நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த அக்.20ம் தேதி, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுப்ரமணியன் அறையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் கூறியதாவது: சென்னை தொலைபேசியின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய தொடர்பாக, தற்போது சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையை, விரைவில் முடித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு ஏற்பட்ட உண்மையான இழப்பை, அவரிடமிருந்து பெற்று, தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதிநவீன(ஐ.எஸ்.டி.என்.,) இணைப்புகளை சன் "டிவி'க்கு கொடுத்து, பி.எஸ்.என்.எல்.,க்கு இழப்பு ஏற்பட, துணை போன அதிகாரிகள் மீது, துறை மற்றும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் தலைமை பொது மேலாளர் வேலுச்சாமி மீது வேண்டுமென்று குற்றம் சாட்டவில்லை. அவர் ஓய்வு பெற்ற பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமை பொது மேலாளர் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.அலுவலகத்திற்கு வர, நிர்வாகத்தின் வாகனம் மற்றும் ஆய்வு விடுதியையும் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளதாகவும், இணைப்புகள் வழங்கப்பட்ட ஆவணங்களை திருத்த, அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அங்குள்ள பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளே தொழிற்சங்கத்துக்கு தெரிவித்தனர். இதன்பின்னே, இதற்கு தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனம் கண்டத்தை தெரிவித்தது.இவ்வாறு அவர் கூறினார்.

யார் அந்த வேலுச்சாமி? சேலத்தை சேர்ந்த தி.மு.க., முன்னாள் அமைச்சருக்கும், தயாநிதிக்கும் நெருக்கமானவராக கருதப்படும் இவர், கடந்த 2006ம் ஆண்டு, அக்.10ல், சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளராக பொறுப்பேற்றார். கடந்த 2006ல் இருந்து மூன்றாண்டுகள் பணியாற்றி, 2009ம் ஆண்டு ஆக.31ம் தேதி, பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.நடைமுறையை மீறி, சேவையில் இளையவராக இருந்தும், சென்னை தொலைபேசியின் தலைமை பொதுமேலாளராக நியமிக்கப்பட்டதற்கு, அப்போதே வேலுச்சாமிக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும், தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மற்றும் தமிழக ஆட்சியாளர்களின் கடைக்கண் பார்வையால், அவர் மீதான எதிர்ப்புகள் காற்றில் கரைந்த கற்பூரமாக மறைந்தன.ஓய்வு பெற்றும் தலைமை பொது மேலாளர் அலுவலகத்திற்கு வந்து செல்லுதல், விருந்தினர் இல்லம் மற்றும் நிர்வாகத்தின் வாகனங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இவர் மீதான சந்தேகத்தை தற்போது எழுப்பியுள்ளது.

மற்ற அதிகாரிகளும் உடந்தையா?அதிநவீன (ஐ.எஸ்.டி.என்.,) இணைப்புகளை, எப்படி கையாளுவது என்பன போன்ற அடிப்படை தொழில்நுட்ப தகவல்களை, முன்னாள் தலைமை பொதுமேலாளர் பணியிலிருந்த போது, உடன் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் வழங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதில், ஒரு அதிகாரி தற்போது பணியில் உள்ளார் என்றும், மற்றொருவர் ஓய்வு பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.சந்தேகப்படும் இந்த அதிகாரிகளிடமும், விரிவான விசாரணையை நடத்தி, முறைகேட்டில் தொடர்பிருப்பது தெரிந்தால், துறை மற்றும் சட்ட ரீதியாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

-நமது நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக