புதன், 16 நவம்பர், 2011

அரிசி உணவு அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில்தான் அதிகம்

சென்னை: தமிழகத்தில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர் என்று நீரிழிவு துறை டாக்டர் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக சர்க்கரை நோயாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோயை பற்றிய கல்வி விழிப்புணர்ச்சி கருத்தரங்கம் நடந்தது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.கீதா லட்சுமி தலைமை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.சுகுமார் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் டாக்டர் முகாசுதீன் வரவேற்றார்.
கருத்தரங்கில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நீரிழிவு துறை தலைமை பேராசிரியர் டாக்டர் ஆர்.மாதவன் பேசியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். ஏன் என்றால் இங்குதான் அரிசி உணவு அதிகம் சாப்பிடுகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

பொதுவாக 30 வயதை தாண்டினாலே எல்லோரும் சர்க்கரை நோய் குறித்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு அதிக தாகம், அதிக பசி, களைப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீர் எடைக்குறைவு, ஆறாத புண், கை கால்களில் மரத்த உணர்வு, கண் பார்வை மங்குதல், பெண் உறுப்பில் அரிப்பு, ஆண்களுக்கு செக்ஸ் ஈடுபாட்டில் குறைவு ஆகியவை தென்பட்டால் அவர் கண்டிப்பாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
சர்க்கரை நோய் வர மாறுபட்ட பழக்கவழக்கங்கள், நவீன வளர்ச்சி, உடற்பயிற்சி குறைவு, உடல் பருமன், பரம்பரை, மன அழுத்தம் ஆகியவை காரணம். இரு வகையான நீரிழிவு நோய்கள் உள்ளன. முதலாவது, இன்சுலின் சார்ந்த நீரிழிவு. இது சிறிய வயதில் ஏற்படும். பொதுவாக, இன்சுலின் சுரக்கும் செல்கள் அழிந்துவிடுவதால் வரக் கூடியது. இந்த வகை நோயாளிகள் உயிர் வாழ இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம். இரண்டாவது, இன்சுலின் சாராத நீரிழிவு நோய். இது பரம்பரையாக வருவதே அடிப்படை காரணம். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு போன்றவற்றை பின்பற்றினால் சர்க்கரை நோயாளிகள் நீண்ட நாட்கள் வாழலாம்.
இவ்வாறு பேராசியர் டாக்டர் ஆர்.மாதவன் பேசினார்.
கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள், நோய் குறித்த சந்தேகங்களை கேட்டனர். அதற்கு நீரிழிவு துறை பேராசிரியர்கள் பதில் அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக