செவ்வாய், 15 நவம்பர், 2011

ஸ்பெக்ட்ரம்: ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டக் கணக்கை காட்டும் முன் ஏன் ஜோஷியை சந்தித்தார் வினோத் ராய்!


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறிய மத்திய தலைமைக் கணக்கு அதிகாரியா, வினோத் ராய் அந்த அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்வதற்கு முன்பாக, பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று வினோத் ராய் நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் தந்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையை வெளியிட்டவர் வினோத் ராய்.
ஆனால், ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தை முழு அளவில் ஆய்வு செய்து, கணக்கு வழக்குகளை சரிபார்த்து, ரிப்போர்ட் தயாரித்து வினோத் ராயிடம் தந்த மூத்த அதிகாரியான ஆர்.பி.சிங், உண்மையான நஷ்டம் ரூ. ரூ. 2,645 கோடி தான் என்று கூறியுள்ளார்.மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நஷ்டம் தொடர்பாக வினோத் ராய் தயாரித்த இறுதி அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர் என்றும் ஆர்.பி.சிங் கூறியுள்ளார். இவர் மத்திய தணிக்கைத் துறையின் தொலைத் தொடர்பு பிரிவுக்கான முன்னாள் டைரக்டர் ஜெனரலாக இருந்தவர் ஆவார்.

இதையடுத்து நேற்று அவரை நாடாளுமன்ற கூட்டுக் குழு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின்போது சிங் கூறுகையில், ஆரம்பத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் வருவாய் குறித்த கணக்கெடுப்புக்கெல்லாம் திட்டமிடப்படவில்லை. பின்னர்தான் அதை சேர்த்தனர்.

ஸ்பெக்ட்ரம் விற்பனையால் ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கெல்லாம் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. இந்த இழப்பு கற்பனையான கணக்கு. அந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று உத்தேசமாகக் கூட கணக்கிட முடியாது.

மத்திய அரசின் கொள்கை முடிவின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்கப்பட்டிருப்பதால், நிர்ணய நுழைவு கட்டண விலைப்படி ரூ.2,645 கோடிதான் இழப்பு ஏற்பட்டது.

ஆனால், ஸ்பெக்ட்ரம் நஷ்டம் தொடர்பாக அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கினர் என்று சிங் கூறியுள்ளார்.

இதையடுத்து எந்தக் கணக்கை வைத்து ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சொன்னீர்கள் என்று இன்று வினோத் ராயிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு இன்று விசாரணை நடத்தியது.

அதே போல மத்திய துணை தலைமை தணிக்கை அதிகாரி ரேகா குப்தாவும் விளக்கம் அளிக்கவுள்ளார்.

ஜோஷியை ஏன் சந்தித்தார் வினோத் ராய்?-திக்விஜய் சிங்

இந் நிலையில், 2ஜி நஷ்டம் ரூ. 1.76 கோடி என்று அறிக்கை வெளியிடும் முன் வினோத் ராய், பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பே அவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தது ஏன்?, இருவரும் என்ன பேசினார்கள்?, நஷ்டத்தை அதிகரித்துக் காட்ட அந்த சந்திப்பில் முடிவெடுத்தார்களா? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சந்திப்பே நடக்கவில்லை என்று வினோத் ராய் மறுத்து வந்தாலும், இருவரும் சந்தித்துப் பேசியதற்கான ஆதாரங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.. எதற்காக அந்த சந்திப்பு நடந்தது? என்று திக்விஜய் சிங் தனது டிவிட்டர் தளத்தில் எழுதியுள்ளார்.

மேலும், ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தை ஆராய்ந்து ரிப்போர்ட் தயாரித்த ஆர்.பி.சிங்கிடம், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ள விவரமும் வெளியே வந்துவிட்டது. அந்த ரிப்போர்ட்டைத் திருத்தி, மாற்றி எழுதிவிட்டு, அவரை படித்துப் பார்க்க கூட விடாமல், கடைசி பக்கத்தில் மட்டும் அவரச அவசரமாக கையெழுத்து வாங்கியது ஏன்?. இதற்கு வினோத் ராய் விளக்கம் தர வேண்டும் என்றும் திக்விஜய் சிங் கோரியுள்ளார்.

இதற்கிடையே, உயர்த்தி எழுதப்பட்ட நஷ்ட ரிப்போர்ட்டில் கையெழுத்துப் போட்டு அனுப்புமாறு ஆர்.பி.சிங்கை வலியுறுத்தி, மத்திய துணை தலைமை தணிக்கை அதிகாரி ரேகா குப்தா எழுதிய கடிதமும் வெளியே வந்துள்ளது.

ரிப்போர்ட்டை முழுமையாக படித்துப் பார்க்கவும், இது தொடர்பாக தொலைத் தொடர்புத்துறையிடம் விளக்கம் பெறவும் கூட எனக்கு ஏன் போதிய அவகாசம் தரவில்லை என்று கேட்டு ஆர்.பி.சிங் பதிலுக்கு ரேகா குப்தாவுக்கு எழுதிய கடிதமும் வெளியே வந்துள்ளது.

இதனால், சிங்குக்கு போதிய அவகாசம் தராமல், ரூ. 1.76 லட்சம் கோடி என்று எழுதப்பட்ட ரிப்போர்ட்டில் ஏன் வினோத் ராயும், ரேகா குப்தாவும் அவசர அவசரமாக கையெழுத்து வாங்கினார்கள் என்ற கேள்வி எழுகிறது.

முன்னதாக, தனக்கு ஏன் அவகாசம் தரவில்லை என்று கேள்வி எழுப்பிய ஆர்.பி.சிங்கின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் ரேகா குப்தா சில கேள்விகளைக் கேட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ரேகா குப்தாவுக்கு ஆர்.பி.சிங் கடிதம் மூலம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதமும் வெளியே கசிந்துள்ளது.

இந்த விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, ஆர்.பி.சிங்கை கட்டாயப்படுத்தி ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று எழுதப்பட்ட ரிப்போர்ட்டில் கையெழுத்து வாங்கியுள்ளனர் ரேகா குப்தாவும் வினோத் ராயும் என்று தெரிய வருகிறது. இதைத் தான் அவர், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடமும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக