செவ்வாய், 11 அக்டோபர், 2011

Paris ரயிலில் பெண் சித்ரவதை தட்டி கேட்ட இந்தியர் படுகொலை!.

 பாரிஸ் மெட்ரோ ரயிலில் இளம்பெண்ணை சித்ரவதை செய்த வாலிபரை இந்தியர் தட்டி கேட்டதால், ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மெட்ரோ ரயிலில் ராஜிந்தர் சிங் (33) என்பவர் கடந்த மாதம் 29ம் தேதி பயணம் செய்தார். ரயில் பெட்டியில் ஒரு ஆணும் இளம்பெண்ணும் இருந்தனர். திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பெண்ணை அடித்து உதைத்த அந்த வாலிபரை, பஞ்சாபை சேர்ந்த ராஜிந்தர் சிங் தடுத்தார். பின்னர் அனைவரும் கிரிமி ரயில் நிலையத்தில் இறங்கினர்.

ரயிலில் சண்டை போட்ட அந்த வாலிபர் திடீரென ராஜிந்தர் சிங்கை தண்டவாளத்தில் தள்ளி விட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து சிங் இறந்ததாக ரயில் நிலையத்தில் நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், சம்பந்தப்பட்ட அந்த பெண் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில், ராஜிந்தரை கொன்றதாக சந்தேகப்படும் வாலிபரை, ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ராஜிந்தர், 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் வந்தார். பாரிசில் உள்ள பீட்சா நிறுவனத்தில் வேலை செய்தார். வீடு வீடாக சென்று பீட்சா டெலிவரி செய்து வந்தார். சம்பளத்தை பஞ்சாபில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்தார். பொது இடத்தில் இளம்பெண்ணை சித்ரவதை செய்த வாலிபரை தட்டி கேட்டதால் சிங்கை ஹீரோவாக வர்ணித்து பிரான்ஸ் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக