வெள்ளி, 7 அக்டோபர், 2011

உலகளவில் இந்தியாவும், இந்தியளவில் தமிழ்நாடும் குடிப்பதில் வேகமாக வளர்ந்து

உலகளவில் இந்தியாவும், இந்தியளவில் தமிழ்நாடும் குடிப்பதில் வேகமாக வளர்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கும், முதலாளிகளுக்கும் பல ஆயிரம் கோடி வருமானம் தரும் டாஸ்மாக் ஒரு அட்சயபாத்திரமாக விளங்குகிறது. எனவே எக்காலத்திலும் இதை ஒழிப்பதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள். அரசின் பெரும்பாலான நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக்கே கருவூலமாகத் திகழ்கிறது. அதை ரத்து செய்தால் அரசு திவாலாகிவிடும். அதாவது மக்களின் சட்டைப்பையில் காசை எடுத்து அதில் சிலவற்றை அவர்களுக்கே வீசுவது என்பதாக அரசு செயல்படுகிறது.
அரசு, முதலாளிகளது நிலை இதுவென்றால் எல்லா அரசியல் கட்சிகளது நிலையும் அதுதானென்று ஆகிவிடுகிறது. விதிவிலக்காக ஓரிரு கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் டாஸ்மாக்கை ஒழிக்க விரும்புவதில்லை.
இன்னும் தேர்தல் காலங்களில் தொண்டர்களை திரட்டுவதற்கே அது தேவைப்படுகிறது. குடியை ஒழிக்க விரும்புவதாக சவுடால் அடிக்கும் பா.ம.க ராமதாஸ் தன் கட்சியில் குடிப்பவர் எவரும் இருக்க இயலாது என்று அறிவித்து விட்டாலே கூடாரம் காலியாகிவிடும்.
அடுத்தது குடி என்போது முன்னெப்பதைக் காட்டிலும் அநேக ஆண்கள் அன்றாடம் குடித்தே தீருவது எனும் வழக்கமாக மாறிவிட்டது. வர்க்க ரீதியாக உடலுழைப்பு செய்யும் ஏழை ஆண்கள் தங்களது வருமானத்தில் கணிசமான பங்கை குடிக்கு செலவழிக்கிறார்கள். வேலை கிடைக்காத நாட்களில் கடன் வாங்கி குடிக்கிறார்கள். இதனால் இத்தகைய குடும்பங்களில் வருமானமிருந்தும் வாழமுடியாத அவலம் நிரந்தரமாகிவிட்டது. அந்த வகையில் இது ஏழை குடும்பங்களின் பெண்களது பிரச்சினையாகிவிட்டது.
நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வாரம் ஒரு முறை, விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், விருந்துகள் போன்றவற்றில் அதிகம் குடிக்கிறார்கள். இவர்களுக்கு பொருளாதாரம் பிரச்சினை இல்லை என்றாலும் சிலர் நாட்பட அன்றாடம் குடித்தே ஆகவேண்டிய குடிகாரர்களாக மாறுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் கெட்டுகெதர் நிக்ழவுகளில் குடிக்கவில்லை என்றால் நாகரிகம் இல்லை என்பதாக கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.
மறுகாலனியாக்கம் கடுமுழைப்பு நிறைந்த உதிரித் தொழிலையும், அதிக பணிச்சுமையையும், வீடு, குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் குடி என்பது எளிதில் ஆனால் கொஞ்சம் செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது. அலவத்தில் உழலும் வாழ்க்கையை உரிமைக்கான போராட்டத்தில் மாற்றுவது போய் வலியை மறக்க குடிப்பது என்றாகி விடுகிறது.
மேற்குலக நாடுகளில் குடிப்பது என்பது தட்பவெப்பம், பண்பாடு, உணவுப்பழக்கம் காரணமாக ஒரு சமூகப் பண்பாக உள்ளது. அங்கேயும் குடிக்கு அடிமையான குடிகாரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் சிறு எண்ணிக்கையில்தான் உள்ளனர். இங்கோ குடிப்பது சமூகப்பண்பாக இல்லாத நிலையிலும் குடிகாரர்களே அதிகம் உள்ளனர்.
ஆல்ககாலின் அளவு அல்லது காரம் குறைந்த கள் போன்றவையே நமது மரபில் இருந்தது. இன்று அதிக காரம் நிறைந்த வெளிநாட்டு மது வகைகளை நமது மக்கள் குடித்துப் பழகிவிட்டனர்.
எனவே குடிப்பதை ஒரு ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்காமல் சமூகப் பொருளாதார தளத்தில் வைத்துப் பார்ப்பதே சரியாக இருக்கும். குளிர் பிரதேசங்கள், கடுமுழைப்பில் ஈடுபடுவோர் போன்ற காரணங்களுக்காக குடிப்பது தவறில்லை. அதே போல என்றாவது ஒரு நாள் குடிப்பதும் பிரச்சினை இல்லை. ஆனால் இங்கும் கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்.
சென்னையின் சேரிப்பகுதிகளில் குடிக்கு அடிமையாகும் ஆண்கள் அனைவரும் 40, 50 வயதுகளில் இறந்து விடுகின்றனர். இந்தியாவின் ஆயுள் சராரசரி சேரிகளில் இல்லை. எனவே இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படும் ஏழைப்பெண்கள் விழித்தெழுந்து போராடும் வரை டாஸ்மாக்கை ஒழிக்க முடியாது. அத்தகைய போராட்டம் ஆந்திராவில் 90களில் நடந்தது. பல நகரங்களில் இருக்கும் மதுக்கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கி மூடினார்கள்.
இதைத்தவிர டாஸ்மாக்கை ஒழிப்பதற்கு வேறு வழி இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக