சனி, 29 அக்டோபர், 2011

தூக்குத் தண்டனை விவகாரத்தில் ஜெ. தலைகீழ் ஸ்டான்ட்!

Viruvirupu சென்னை, இந்தியா: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் தூக்கில் போட மத்திய அரசு சதி செய்வதாக கூறியுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, முதல்வர் ஜெயலலிதாவும் இவர்கள் விஷயத்தில் தமிழக மக்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும், மாநில அரசும் நடந்துகொண்ட முறை பற்றியே அவர் குறிப்பிடுகிறார்.
தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மூவரால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த முவரும் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த வழக்கில் எடுத்துள்ள நிலைப்பாடு, இந்த மூவரது கருணை மனுக்களையும் ஜனாதிபதி ஏற்கனவே நிராகரித்து விட்டதால், இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டணையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உள்ளதும் அதுதான். இது எதிர்பார்க்கப்பட்ட ஸ்டான்ட்தான்.
ஆனால், தமிழக அரசு எடுத்துள்ள ஸ்டான்ட்தான், இவர்கள் தண்டனை தொடர்பாக குரல் எழுப்பியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு, அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஏற்கனவே ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு, அதில் தலையிடும் அதிகாரம் எமக்கு (மாநில அரசுக்கு) இல்லை” என்று கூறப்பட்டுள்ள தமிழக அரசின் மனுவில், “பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதை எதிர்த்துத்தான் வைகோ குரல் கொடுத்துள்ளார்.
“ பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரித்தான் மனு செய்துள்ளனர். அந்த மனுக்களை தள்ளுபடி செய்யும்படி தமிழக அரசு கூறினால், அந்த மூவரையும் தூக்கில் போடுங்கள் என்பதாகத்தானே பொருள்?” என்று கேட்கிறார் வைகோ.
வைகோ சொல்வதில் ஒரு பாயின்ட் இருக்கின்றது.
இதோ, இப்படிப் பாருங்கள்- ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில், மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய, மத்திய அரசைக் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றியதே ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசுதான். அந்த தேதியில்தான் உள்ளது விஷயம்.
“ஏற்கனவே ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு, அதில் தலையிடும் அதிகாரம் எமக்கு (மாநில அரசுக்கு) இல்லை” என்று கூறிய ஜெ. தலைமையிலான அதே மாநில அரசுதான், தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 30-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு முன்னரே ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்து விட்டார். அதற்குப் பிறகு ஜெயலலிதா தூக்குத் தண்டனையை ரத்து செய்யும்படி தீர்மானம் நிறைவேற்றலாம். ஆனால், தூக்குத் தண்டனையை எதிர் நோக்கும் மூவரும் அதே கோரிக்கையை மனுவாக உயர் நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்தால், அதை தள்ளுபடி செய்யச் சொல்கிறது தமிழக அரசு!
தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், “இதில் எமக்கு ஆட்சேபணை கிடையாது” என்று சொல்லியிருக்கலாம். அல்லது, ”நாமும் (தமிழக அரசு) இதே கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி இருப்பதால், ஆட்சேபணை செய்யும் தார்மீக உரிமையை இழக்கிறோம்” என்று சொல்லியாவது, ஒதுங்கிக் கொண்டிருக்கலாம்.
தமிழக அரசு ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது ஒரு ஆச்சரியம் என்றால், அதைவிட பெரிய ஆச்சரியம் ஒன்றும் உள்ளது. அது-
தூக்குத் தண்டனையை ரத்து செய்யும்படி குரல்கொடுத்த வேறு யாரும் (வைகோ தவிர்ந்த) ஏன் வாயே திறக்கவில்லை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக