புதன், 26 அக்டோபர், 2011

கலைஞர்: முதல்வராக இருந்துகொண்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, நீதிமன்றத்தில்

சென்னை: ""எந்தச் செயலுக்கும், பின்னணி இல்லாமல் இருக்காது'' என,   கனிமொழியின் பிணை விவகாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். தி.மு.க., தலைமை நிலையத்தில், நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திகார் சிறையில் கனிமொழியைச் சந்தித்தேன். உடல் இளைத்திருந்தாலும், மன உறுதியோடு இருக்கிறார். அவரது பிணை மனு, நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இல்லாமல், எந்தச் செயலும் நடைபெறுவதில்லை. இது அரசியல் பின்னணியா, வேறு ஏதும் பின்னணியா என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறை வருவதால், 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். நான் அவரின் தந்தை என்பதை விட்டுவிடுங்கள். இந்தப் பிரச்னையில் உள்ள நியாய, அநியாயங்களைப் பகுத்தறிந்து, உணர்வு தரவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். 3ம் தேதி நல்லதே நடக்கும் என நினைப்போம்.
சோனியாவைச் சந்தித்தபோது, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர், கனிமொழி பற்றி விசாரித்தார். மற்ற பிரச்னைகளைப் பற்றிப் பேச நேரமும் இல்லை; அவரது உடல்நிலை காரணமாக, நானும் அந்த மனநிலையில் இல்லை. நன்றாக ஓய்வெடுங்கள் என வலியுறுத்தினேன். மத்திய அமைச்சரவையில், தி.மு.க.,வுக்கான இரண்டு இடங்கள் பற்றி, அவரிடம் எதுவும் பேசவில்லை. அவை நிரப்பப்படும்போது உங்களுக்குத் தெரியும்.

பிரதமரைச் சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம், இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது, உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து வலியுறுத்தினேன்.

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் உள்ள வேறுபாடு காரணமாக, உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. இதில், தி.மு.க., 26.09 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில், நாங்கள் 22.30 சதவீதம் பெற்றிருந்தோம். ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு, கூட்டணி இல்லாததே காரணம் எனச் சொல்ல முடியாது. ஆட்சியின் மீதான அதிருப்தி தான், எங்கள் ஓட்டு அதிகரிப்பிற்குக் காரணமா என்பதை, இந்த நாலைந்து மாத ஆட்சியை வைத்தே கூறிவிட முடியாது.

இனி வரும் தேர்தல்களிலும், தி.மு.க., தனித்துத் தான் போட்டியிடுமா என்பது குறித்து, மேல்மட்டத் தலைவர்களுடன் ஆலோசித்துத் தான் சொல்ல முடியும். தாங்கள் தொடர்ந்து தனித்துத் தான் போட்டியிடப் போகிறோம் என்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர், என்னைச் சந்தித்தபோது பேசவுமில்லை; என்னிடம் அதுபற்றிய அறிவிப்பைச் செய்யவுமில்லை. கூட்டணி பற்றி என் வாயால் எதையும் வரவைத்துவிடலாம் என முயற்சிக்காதீர்கள்.

ஒரு முதல்வராக இருந்துகொண்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது, தமிழக மக்கள் எதையும் தாங்கிக்கொள்வர் என்பதைத் தான் காட்டுகிறது. இம்மக்கள், எது நடந்தாலும் தாங்குவர் என்பது தான் நிதர்சனப் போக்கு. மாநில சுயாட்சி தான் தி.மு.க.,வின் மையக் கருத்து. இதைப் பற்றி நாங்கள் வலியுறுத்திய போதெல்லாம், ஆயிரம் வியாக்கியானங்கள், கேலி, கிண்டல் செய்தவர்கள், இப்போது டில்லி சென்று, மாநில அரசு, மாற்றாந்தாய் போக்கில் நடத்தப்படுவதாகப் பேசியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக