வெள்ளி, 28 அக்டோபர், 2011

மன்மோகன் சிங்கை அமெரிக்க டீலின் பக்கமாக ‘தள்ளிச் சென்றது’ நட்வர் சிங்தான்

இதோ மற்றொரு ‘உள்வீட்டு’ விவகாரம்! அடுத்த சிக்கலில் பிரதமர் சிங்!!

Viruvirupu
வாஷிங்டன், அமெரிக்கா: முன்னாள் அமெரிக்க உட்துறைச் செயலர் கண்டலீசா ரைஸ் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் உள்ள சில சம்பவங்களும், வர்ணனைகளும், பிரதமர் மன்மோகன் சிங்கை சங்கடப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. “இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில், மன்மோகன் சிங் நிச்சயமாக வெற்றியாளர் கிடையாது” என்று எழுதியுள்ளார் ரைஸ்.
‘No Higher Honor’ என்ற பெயரில் இந்த வாரம் மார்க்கெட்டுக்கு வரும் இந்தப் புத்தகத்தில், 2005-2006 காலப்பகுதியில் நடைபெற்ற இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. கண்டலீசா ரைஸ் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதில் பெரும் பங்கு வகித்தவர் என்ற வகையில், பல ‘உள்வீட்டு விவகாரங்கள்’  பற்றி எழுதியுள்ளார்.
ஒருவகையில் பார்க்கப் போனால்,  இந்திய – அமெரிக்க டீல் பற்றிய உள்வீட்டு உண்மைகள் பலவற்றை முதன்முதலில் வெளியே கொண்டு வருவது இந்தப் புத்தகம்தான்.  2005-06-ல் இந்தியாவில் அரசியல் ரீதியாக பெரிய புயலையே இந்த அமெரிக்க டீல் ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்க டீலினால், காங்கிரஸ் அரசு கவிழும் நிலைகூட ஒரு கட்டத்தில் ஏற்பட்டிருந்தது.

“2005-ம் ஆண்டின் மத்திய பகுதிவரை இழுத்துச் சென்ற இந்த அமெரிக்க டீல் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மகா குழப்பமான மனநிலையில் இருந்தார். அமெரிக்கா இந்த டீலை தம்மீது திணிக்கிறதா என்பதைக்கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ரைஸ் எழுதியுள்ள வரிகள், கைதேர்ந்த ராஜதந்திரி ஒருவரின் எழுத்துக்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அது வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லியுள்ள விஷயம் -
அமெரிக்கா நிச்சயம் இந்தியாவை ஏமாற்றியே,  இந்த டீலை தலையில் கட்டியிருக்கிறது.
ரைஸ் எழுதியுள்ள மற்றொரு பகுதியைப் பாருங்கள்.
“இந்த டீல் இந்தியாவுக்கு உகந்ததுதானா என்று இந்தியப் பிரதமர் சிங் குழப்பத்தில் இருந்த போதிலும், வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், இந்த டீலை விரும்பினார். குழம்பிய மனநிலையில் இருந்த மன்மோகன் சிங்கை அமெரிக்க டீலின் பக்கமாக ‘தள்ளிச் சென்றது’ நட்வர் சிங்தான்.
இந்த விஷயத்தில் நட்வர் மிகப் பிடிவாதமாக இருந்தார். அமெரிக்க டீலை முடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார். பிரதமர் சிங் வேறு ஒரு சிக்கலில் இருந்தார். இந்த அமெரிக்க டீலை இந்திய நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்படாமல் தம்மால் ‘விற்க’ முடியுமா என்று அவரால் முடிவு செய்ய முடியாமல் இருந்தது.
வேறு வழியில்லாமல் இந்திய – அமெரிக்க அணுசக்தி டீலுக்கு அரைகுறை மனதுடன் தலையாட்டிய பிரதமர் சிங், ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டபின் அரசியல் புயலில் சிக்கிக் கொண்டார்.  எதிர்ப்பு இருக்கும் என்பது அவருக்கு தெரியும்.  ஆனால், புயல் அடிக்கும் அளவில் எதிர்ப்பு எழும் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவில்லை.
என்ன நடைபெறும் என்று சரியாக புரியாமல் அவர் ஒப்புதல் கொடுத்த டீல் ஏற்படுத்திய அரசியல் புயலில் இருந்து தமது அரசைக் காப்பாற்ற அவர் கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. தமது அரசு கவிழ்வதைத் தடுக்க, தம்மிடமிருந்த சகல அஸ்திரங்களையும் அவர் பிரயோகிக்க வேண்டியிருந்தது”
மேலேயுள்ள வரிகள் மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ளன என்பது நிஜம்தான். ஆனால், பிரதமருக்கு தலைகுனிவை ஏற்படுத்தக் கூடிய அர்த்தத்தில் அவை உள்ளன.
புத்தகம் அடுத்த வாரம் இந்திய மார்க்கெட்டுக்குள் வருகின்றது. அப்புறம் பாருங்கள், இதை பா.ஜ.க. எப்படி ஹான்டில் பண்ணப் போகின்றது என்பதை! “…ஆழம் தெரியாமல் காலைவிட்டு அமெரிக்காவிடம் ஏமாந்த பிரதமர் பதவி விலக வேண்டும்…”

• இதே கட்டுரையை ‘சொந்தச் சரக்காக’  வேறொரு வெப்சைட்டில் கண்டால், அவர்களை மன்னித்து விடுங்கள். “பாவம், அவுக வெச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுறானுக?”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக