வெள்ளி, 28 அக்டோபர், 2011

சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதற்கு ஆதாரம் இல்லை: சி.பி.ஐ.,

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்த எந்த ஆதாரங்களும் இல்லை என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய, டில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தடயவியல் அறிஞர்களைக் கொண்டு, சி.பி.ஐ., ஆய்வு செய்தது. விரிவான அந்த ஆய்வில், பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதி செய்ய, எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை, எய்ம்ஸ் நிறுவன டாக்டர்களைக் கொண்டு ஆய்வு செய்தும், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிப்பதை சி.பி.ஐ., விட்டு விடவில்லை என்றாலும், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் தற்போது விசாரித்து வருகிறது. அவர் தற்கொலை குறிப்பை ஆய்வு செய்ததில், அது அவருடைய கையெழுத்து தான் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் அந்தக் கடிதத்தை, யாரும் நிர்பந்தப்படுத்தி எழுதியிருக்கலாம் என்பதையும் உறுதி செய்ய முடியவில்லை. சந்தர்ப்ப சாட்சியங்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்துவதாக இருப்பதால், அந்தக் கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக