வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஸ்பெக்ட்ரம் ஃபைல் கிழித்தது யார்?இருவரை மட்டும் மாட்டிவிட்டு..மற்றவர்களைக்

'ஸ்பெக்ட்ரம் வழக்கு ஸ்வாகா ஆகிறதா?’ என்று டெல்லியில் கிளம்பிய ஒரு பகீர் சந்தேகத்தை, சில இதழ்களுக்கு முன் சொல்லி இருந்தோம். இப்போது இந்த சந்தேகம் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்திருப்பதுதான் அதிர்ச்சி க்ளைமாக்ஸ்!

ஆ.ராசா, கனிமொழி, ப.சிதம்பரம், சுப்பிரமணியன் சுவாமி, சி.பி.ஐ., பிரணாப் முகர்ஜி, நீதிபதிகள் ஜி.எஸ்..சிங்வி, ஏ.கே.கங்குலி, பிரசாந்த் பூஷண், சி.ஏ.ஜி., நீதிபதி ஓ.பி.சைனி, சுரேஷ்குமார் பல்சானியா, நாடாளுமன்றம், ஆர்.கே.சந்தோலியா, நீரா ராடியா, ஜெ.பி.சி., சாக்கோ (நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர்), ஷாகித் உஸ்மான் பால்வா, மன்மோகன் சிங், அனில் அம்பானி, தயாநிதி மாறன்... என்று குற்றம் சாட்டப்பட்டவர்களும், அதைத் தோண்டித் துருவுபவர்களுமாக, தினம் தினம் இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஜி வழக்கு வட்டத்தில் கூடிக்கொண்டே போகிறது! இந்த பிரமாண்ட மனித சஞ்சாரத்துக்கு நடுவே சில கறுப்பு சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!
காந்தி நினைவு நாளான அக்-2-ம் தேதி டெல்லியில் ஒரு வித்தியாசமான காட்சி. பிரதமர், சோனியா, கபில்சிபல் ஆகியோருடன் பி.ஜே.பி. தலைவர் அத்வானியும், சுஷ்மா சுவராஜும் இருக்கிறார்கள். இவர்களுடன் சுப்பிரமணியன் சுவாமியும் இருக்கிறார். 'இதுவித்தியாச மான காட்சியா... விஷயமுள்ள காட்சியா! என்று டெல்லி பத்திரிகை யாளர்கள் கிண்டலடித்தார்கள்!

இந்த விவகாரத்தில், 'யாருக்கு என்ன நோக்கம்? எதற்காக ஊழல் செய்தார்கள்? பணம் எங்கே? எப்படி ஊழல் செய்தார்கள்? யார் யார் ஊழல் செய்தார்கள்? யாருடைய புகார்? பொது நலன் வழக்கு எதற்கு? யார் இன்ஃபார்மர்கள்? ஊழலில் யார் யாருக்குப் பங்கு? இதில் பிரதமரின் ரோல் என்ன? நிதியமைச்சர் யார் பக்கம்? சுவாமியின் பின்னணி என்ன? ராசாவின் பணம் எங்கே? யார் வழக்கைப் பதிவு செய்தார்கள்? கருணாநிதி ஏன் புலம்புகிறார்? சோனியா இந்த விவகாரத்தில் கெஸ்ட் ரோலா... முக்கிய ரோலா... நோ ரோலா? எப்படியெல்லாம் புலனாய்வு செய்கிறார்கள்? ஏன் முன்னுக்குப் பின் முரணமாகக் குழப்புகிறார்கள்? ஏன் வழக்குப் பதிவில் திடீர் தாமதங்கள்?’ - இப்படி எத்தனையோ கேள்விகள் இன்னமும் வெறும் கேள்விகளாகவே இருக்கின்றன!
இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்தப் புது ரகசியம் வெளியே வந்திருக்கிறது.
சுப்பிரமணியன் சுவாமி, 13 பக்கங்கள் கொண்ட ஆவணத்தைத் தாக்கல் செய்தார். ''மிக முக்கியமான ஆதாரங்கள் இவை!'' என்றும் சொன்னார். அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீல், ''இது புதிய தகவல் அல்ல. நிதி அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட 500 பக்க ஆவணங்களில் இருப்பதுதான்!'' என்று சொன்னார். ''இந்த ஆவணங்களை நீங்கள் ஆய்வு செய்தீர்களா?'' என்று கேட்ட நீதிபதிகள், அந்த 500 பக்க ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொன்னார்கள். மறுநாளே சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

இந்த நிதித் துறை ஆவணத்தில் உள்ளவை பெரும்பாலும் சுப்பாராவ் என்பவர் நிதித் துறை செயலாளராக இருந்த​போது எழுதப்பட்டவை. தொலைத் தொடர்புத் துறைக்கு ஸ்பெக்ட்ரம் விலையை மறுபரிசீலனை செய்யக் கோரி சுப்பாராவ் எழுதிய கடிதங்களும் இதில் உண்டு. டெலிகாம் நிதி கமிஷன் கூட்டத்தை, அமைச்சராக இருந்த ஆ.ராசா தள்ளி வைத்துக்கொண்டே போனது குறித்து சுப்பாராவ் ஏற்கெனவே சி.பி.ஐ-க்கு வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதே சுப்பாராவ் பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகியும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 2ஜி விவகாரத்தில் நிதித் துறையின் ஆலோசனைகளையும், தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளையும் நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்திடம் அவ்வப்போது தெரிவித்த தாகவும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நிதி அமைச்சகம், தொலைத் தொடர்புத் துறையை வலியுறுத்த முடியாமல் போனது என்றும் சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணங்கள் இப்போது சுப்ரீம் கோர்ட் வசம் இருக்கின்றன. இவற்றை வரிசையாகப் பார்த்து வந்த நீதிபதிகள், திடீரென சில இடங்களில் அதிர்ச்சிக்கு ஆளானார்களாம். ''இதில் சில பக்கங் களைக் காணவில்லையே?'' என்று கேட்டனர். அதற்கு சி.பி.ஐ. வக்கீலால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

''காணாமல் போன பக்கங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்!'' என்று உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். அந்தப் பக்கங்கள் அரசு கோப்பிலிருந்து திட்டமிட்டே கிழித்து எடுக்கப்பட்டதா... அதில் என்ன விதமான தகவல்கள் இருந்தன... ஏன் அவற்றைக் காணவில்லை... இது யாரைக் காப்பாற்றுவதற்காக என்பதுதான் இப்போது சுப்ரீம் கோர்ட் போட்டுக் குடையும் ரகசியம். ''இந்த விஷயத்தில் சி.பி.ஐ. ஆரம்பத்தில் சரியாகவே நடந்து கொண்டது. ஆனால், போகப் போக தனது நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைத்துக் கொண்டது. சிவசங்கரன் வாக்குமூலம் மற்றும், அனில் அம்பானி நிறுவனத் தொடர்புகள் குறித்து முரண்பாடான தகவல்களை சி.பி.ஐ. சொல்வதைப் பார்த்தாலே, அவர்கள் கைகள் மறுபடியும் கட்டப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. முக்கியமாக, பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரை கோர்ட்டுக்கு இழுக்க, ஆ.ராசா வேலைகளைத் துவங்கியது முதல் சி.பி.ஐ-யின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது!'' என்று சுவாமி தரப்பில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில் தொலைத் தொடர்புத் துறை ஊழல் கண்காணிப்புப் பிரிவிலும் இரண்டு கோப்புகள் மாயமானதாகத் தகவல் பரவி உள்ளது. கடைசியாக அந்தக் கோப்புகள் யார் வசம் இருந்தன என்று தேடும் காரியத்தைத் தொடங்கி இருக்கிறார்களாம். ''அதை வைத்திருந்த அதிகாரி சில மாதங்களுக்கு முன்னால் ஓய்வு பெற்றுவிட்டார்!'' என்கிறார்கள். ''இது ஸ்பெக்ட்ரம் தொடர்பானவை அல்ல. வேறு வழக்கு தொடர்பானவை!'' என்று சிலர் சொல்வதையும் ஏற்க முடியவில்லை. எப்படிப் பார்த்தாலும் சில முக்கியக் கோப்புகளைக் காணவில்லை என்பது உறுதி.

''ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவரை மட்டும் மாட்டிவிட்டு... மற்றவர்களைக் காப்பாற்ற டெல்லி மேலிடம் முடிவெடுத்து விட்டதா?'' என்று தி.மு.க. தரப்புக் குரல்கள் டெல்லியில் கேட்க ஆரம்பித்துள்ளன. இந்த ஃபைல்கள் காணாமல் போன மேட்டரை பி.ஜே.பி-யும் கையில் எடுக்கப் போகிறது. அடுத்த கட்ட விசாரணையில் சுப்ரீம் கோர்ட் என்னவெல்லாம் கேட்டு சாட்டையை சொடுக்கப் போகிறதோ?
- சரோஜ் கண்பத்
thanks vikatan+chandran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக