ஞாயிறு, 30 அக்டோபர், 2011

கூடங்குளம் திடீரென அணுமின் நிலையத்தின் பணிகளை நிறுத்தினால் ஆபத்து


சென்னை : கூங்குளம் அணுமின் நிலையம் மின் உற்பத்தியை துவங்கும் நிலையில் அதன் பணிகளை திடீரென நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று அணுசக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வேண்டும் என்றே மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதாகக் கூறி, இதற்கு போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கட்டமைப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கும் நிலையில் உள்ளது. இதற்கிடையே, அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இந்திய அணுசக்தி கழக தலைவர் மற்றும் மத்திய அணுசக்தி துறை செயலாளர் ஸ்ரீகுமார் பானர்ஜி, மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. அதில், யுரேனியம் நிரப்பப்பட்டு மின் உற்பத்திக்கான ஒத்திகை துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் திடீரென வேலைகளை நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும். இதனால், மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அணு உலை பணிகளை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை. அணு உலை பணிக்கு செல்லும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், இன்ஜினீயர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது தவறானது. கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.

வெளிநாட்டு தூண்டுதல்?: இதே போன்று, மும்பையில் நிருபர்களிடம் தேசிய அணு மின்சக்திக் கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூறுகையில், ‘கார் தொழிற்சாலையை போல் திடீரென அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி விட முடியாது. அது மிகவும் ஆபத்தானது. கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம், வென்டிலேசன் சிஸ்டம் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எனவே, விஞ்ஞானிகளும், இன்ஜினியர்களும் பணியில் இருந்தாக வேண்டும். அவர்களை பணியாற்ற விடாவிட்டால், அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்’ என்றார்.

மேலும், கூடங்குளம் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் 22 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்வில்லை என்றும், குறிப்பிட்ட பிரிவினரே வெளிநாட்டு தூண்டுதலில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் ஜெயின் குற்றம்சாட்டினார். பீதியை ஏற்படுத்தலாமா?: இந்நிலையில், கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடக் கோரும் போராட்டக் குழுவின் தலைவர் உதய குமார் நேற்று கூறுகையில், ‘அணுசக்தி கழக தலைவர் வேண்டுமென்றே மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. அவர்கள் மாநில அரசிடமும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடமும் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக