ஞாயிறு, 16 அக்டோபர், 2011

உலகம் முழுவதும் பரவுகிறது "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' போராட்டம்: ரோம் நகரில் வெடித்தது வன்முறை

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்க' போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகப் பொருளாதாரம் சீர்கேடு அடைவதற்குக் காரணமான வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசியல்வாதிகளைக் கண்டித்தும், போராட்டங்கள் உலகளவில் துவங்கியுள்ளன.
"வால் தெரு ஆக்கரமிப்பு இயக்கம்' கடந்த செப்டம்பர் 17ம் தேதி நியூயார்க்கில் துவக்கிய போராட்டம், தற்போது அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகிறது.

பூங்கா விவகாரம்: இந்நிலையில், நியூயார்க்கில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ள, தனியாருக்குச் சொந்தமான "ஜூகோட்டி பூங்காவில்' இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றும் நோக்கில், அந்தப் பூங்காவைத் தூய்மைப்படுத்தப் போவதாக, பூங்கா உரிமையாளரான "ப்ரூக்பீல்டு பிராபர்ட்டீஸ்' நிறுவனம் அறிவித்தது.

மக்கள் எதிர்ப்பு: தூய்மைப்படுத்திய பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் மீண்டும் தங்கலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால், இதன் மூலம் தங்கள் ஆர்ப்பாட்டத்தை நசுக்க நியூயார்க் போலீசார் முயல்வதாகக் கருதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர், பூங்காவில் நேற்று திரண்டு, அங்கிருந்து செல்ல முடியாது என தெரிவித்தனர்.

வாபஸ்: இதன் பின், கடைசி நேரத்தில், தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பூங்காவை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும்: இந்நிலையில், "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம்' உலகளவில் பரவி வருகிறது. தென்னாப்ரிக்கா, தென் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியா, தெற்காசியா, ரஷ்யா என உலகம் முழுவதும் போராட்டங்கள் நேற்று முதல் துவங்கின. இதற்காக, www.15october.net என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், உலகம் முழுவதும், இந்தியா உள்ளிட்ட 82 நாடுகளில், 951 நகரங்களில் "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' போராட்டம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில், டோக்கியோவில்... முதற்கட்டமாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் நகரங்களிலும், நியூசிலாந்தின் ஆக்லாண்ட், வெல்லிங்டன், கிறிஸ்ட்சர்ச் நகரங்களிலும், தைவான் தலைநகர் தாய்பெய்யிலும், ஜப்பானின் டோக்கியோ,ரோப்போங்கி நகரங்களிலும், தென்கொரியத் தலைநகர் சியோலிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன.
லண்டனில் அசாஞ்ச்: அதேநேரம்,ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜெர்மனியின் பிராங்பர்ட்டிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன. பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த போராட்டத்தில் "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கலந்து கொண்டார். இத்தாலியின் ரோம் நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
"இந்தியா ஆக்கிரமிப்பு' போராட்டம்? ஆக்கிரமிப்பு போராட்டங்களுக்கான www.15october.net இணையதளத்தில், இந்தியாவில் புனே, ஐதராபாத், மும்பை, கோல்கட்டா மற்றும் டெல்லியில் போராட்டங்கள் நேற்று நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மும்பையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், "ட்விட்டரில்' இம்மாதம் 29ம் தேதி போராட்டம் நடக்கும் என அறிவித்திருந்தனர். பிற நகரங்களில் போராட்டங்கள் நடந்தது குறித்து தகவல்கள் தெரியவரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக