ஞாயிறு, 16 அக்டோபர், 2011

அநீதியை எதிர்த்துப் போராடும் பிள்ளைகளை இந்த ஆசிரியர்கள் உருவாக்குவார்களா?

தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். இதுவே தற்போது யாழ்ப்பாணத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் செய்தி. அரச அதிபருக்கு நாமும் கைகொடுப்போம்.
விடுதலைப் புலிகளின் நிர்வாகம் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீர்கெட்டுப்போகிறது என்று தமிழினப் பற்றாளர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தார்கள். ஆனால் அவர்கள் அரச அதிபரின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டால் மட்டும்தான் அவர்களின் குரல் ஒலிக்கும்.
தமிழ் ஆண்கள் தமிழ் பெண்களை பாலியல் பொம்மைகளாக பயன்படுத்துவது தமிழ் கலாசாரத்தின் ஒரு அங்கம் தான் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம்.
அப்படி பாலியல் ரீதியான தவறுகள் நடந்தாலும் அதை பகிரங்கப்படுத்துவதால் பெண்களே பாதிக்கப்படுவார்கள். ‘தொழில் செய்யப் போகும் இடத்தில், படிக்கப் போகும் இடத்தில் ஆண்கள் அப்படி-இப்படி இருப்பார்கள் தான் அதை பகிரங்கப்படுத்தி குடும்ப மானத்தை வாங்க வேண்டாம்’ என்கிறார்கள். யாருடைய குடும்ப மானம் போகும்? அந்தப் பெண்ணுடைய குடும்ப மானம்தான் போகுமாம். குடும்பத்திலுள்ள ஆண்களும் தற்போது சொரணை கெட்டவர்களாக இருக்கிறார்கள். வாள்களைத் தூக்கத் தேவையில்லை. இவர்களால் ஏன் கடுமையான எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. அதற்குப் பதிலாக தனது சகோதரியையோ அல்லது மனைவியையோ பழி சுமத்தி குடும்ப அமைதியைக் கலைக்கிறார்கள். இதுவே தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
அரச அதிபர் குறிப்பிட்டபடி, யாழ்ப்பாணத்திலுள்ள பல நிறுவனங்களிலிருந்தும் பெண்கள் சிலர் தமக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து அவரிடம் முறையிட்டிருக்கலாம். அரச அதிபர் ஒரு பெண்ணாக இருக்கும் காரணத்தினால் அவரிடம் விளக்குவது பெண்களுக்கு சுலபமாகவும் இருந்திருக்கும். இவற்றில் சில தவறும் இருக்கலாம். எனினும் சம்பந்தப்பட்ட பெண்களின் விபரத்தை வெளியிடுமாறு கோருவது அல்லது ஆதாரத்தைக் காட்டுமாறு கோருவது வெறும் தெருச் சண்டித்தனம். ஆதாரங்களை வெளிப்படுத்துவது கூட, எமது சமூக அமைப்பில் பெண்களையே பாதிக்கும் என்பது புரியாதவர்களா இவர்கள்.
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் மாணவ ஆசிரியர்கள் பெண்கள் உட்பட ‘ஆதாரத்தைக் காட்டு’ என்று அரச அதிபருக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். அரச அதிபர் சொல்லும் குற்றச்சாட்டால், அந்தக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த பெண்களுடைய வீட்டில் பிரச்சினை என்கிறார்கள். இதன் அர்த்தம் தான் என்ன? ஆச்சரியமானது.
இன்று நேற்றல்ல. இது நீண்டு தொடர்ந்துவரும் பிரச்சினை. அதிகாரத்திலுள்ளவர்கள் தமது ஆட்சிக்குள் உட்பட்டவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். அதன் வடிவங்கள் மாறுபட்டிருக்கும். பொதுவான தற்கால சமூக அமைப்பில் ஆண்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சிலர் பெண்கள் தொடர்பில் தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெரும்பாலான சந்தரப்பங்கள் அவை பாலியல் ரீதியானவையாகவே அமைந்துவிடுகின்றன.
அதிகாரத்திலுள்ளவர் பாலியல் பிறழ்ச்சி மனப்பாங்கு கொண்டவராக இருக்கும் பட்சத்தில், உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் அதிகமாகவே பாதிக்கப்படுகிறார்கள். எதிர்த்து நிற்கும்போது அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. அரச திணைக்களங்களைப் பொறுத்தவரை ஓரளவு பாதுகாப்பான நிலைமை உள்ளது எனக் கூறலாம். வைத்தியசாலை போன்ற சேவை நிலையங்களில் இரவுக் கடமையாற்றும் பெண்களின் பாதுகாப்பு முற்றுமுழுதாக வைத்தியசால நிர்வாகத்தின் உறுதியான பொருத்தமான நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.
மேலும், யாழ் அரச அதிபர் இன்னொன்றையும் சொல்கிறார், முல்லைத்தீவில் தான் அரச அதிபராக இருந்த காலத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான முறைப்பாடு எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என்கிறார். இது மிகவும் நகைப்புக்கிடமான கருத்து.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் அரச அதிபராக இருந்திருக்கிறார். அப்போது பெண்கள் தம்முடைய பிரச்சினைகளை இவரிடம் முறையிடுவார்கள் என எதிர்பார்ப்பதும் அல்லது அப்படியான பிரச்சினைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் இரண்டுமே அபத்தமானது.
இதேபோன்ற கருத்தொன்று ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையிலும் காணப்பட்டது.  புலிகளின் இராணுவக் கட்டமைப்புக் கொள்கை பற்றிய போதிய அறிவின்றி விடுதலைப் புலிகள் ஒழுக்கமானவர்கள் எனக் கூறப்பட்டிருந்தது.  விடுதலைப் புலிகளின் கீழ் மட்ட பெண் உறுப்பினர்களிடம் நம்பிக்கையான விசாரணைகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.  மேலும், இந்த உதாரணம் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை மீதான நம்பிக்கையையே குறைத்துவிட்டிருக்கிறது.
எப்படியிருந்தபோதிலும், பெண்கள், சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை, பாலியல் துன்புறுத்தல்களை மற்றும் பாலியல் ரீதியான அனைத்துக் குற்றங்களையும் சட்டங்களால் மட்டும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆரோக்கியமற்ற சமூகத்தில் பாலியல் உணர்வு ஒரு நோயாகவே பரிணமித்துள்ளது. சமூகத்தின் கண்காணிப்பும் ஆரோக்கியமான செயற்பாடுமே இதனைத் தடுக்கும்.
– றிஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக