செவ்வாய், 11 அக்டோபர், 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் கடல்வளத்தை அழிக்கிறார்கள் – இந்திய மீனவர்கள் சங்கம்

தமிழக மீனவர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத வரையில், இந்திய – இலங்கை மீனவர்கள் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது என தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூறுகிறது.
இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நிலையில் இக்கருத்து வெளியாகியுள்ளது.
இந்த விஜயத்துக்கு முன்னர் இந்தியவெளியுறவுச் செயலர் தமிழக முதல்வர் சந்தித்து உரையாடியபோது, இலங்கை தரப்பினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் இருக்கும் சில மீனவர்கள், அரசின் விதிமுறைகளை மீறி, கூடுதல் திறன் கொண்ட படகுகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பினுள்ளும் மீன்பிடிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
அது இந்திய இலங்கை கடல் பகுதியில் உள்ள கடல் வளத்தை முற்றாக அழித்துவிடும் என்றும் தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் கூறியுள்ளார்.இந்தியத் தரப்பு, தமது மீனவர்களிடம் உள்ள குறைபாடுகள் மற்றும் சட்ட மீறல்களை சரி செய்யாதவரை இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்த வகையிலும் பலனளிக்காது எனவும் போஸ் தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகள் இந்திய இலங்கை கடற்பரப்பில் என்ன நடக்கிறது என்ற உண்மையை உணராமல், தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று குரல் கொடுப்பது அரசியல் நடத்த மட்டுமே உதவும் எனவும் போஸ் குற்றஞ்சாட்டுகிறார்.
கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை தடுத்த இலங்கை கடற்படையினர், ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்தியதுடன் மீனவர்களை தாக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தின்போது 15 படகுகள் மீன்பிடிப்பதில் ஈடுபட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக