திங்கள், 10 அக்டோபர், 2011

நிபந்தனை இன்றி ஆதரவு இல்லை - மனோ ரணிலிடம் திட்டவட்டம்

கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான எமது கட்சியின் ஆதரவை நிபந்தனையில்லாமல் வழங்க முடியாது. கடந்த பத்து வருடங்களாக கொழும்பு மாநகரசபையிலும், மேல்மாகாணசபையிலும், பாராளுமன்றத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் வழங்கியதைப்போன்ற நிபந்தனையற்ற ஆதரவை இனிமேலும் தொடர முடியாது. தலைநகர தமிழ் மக்கள் தங்களது நலனை முன்னிறுத்தும் பேரம் பேசும் சக்தியை எங்களுக்குத் தந்துள்ளார்கள்.
இதுவே கொழும்பு மாநகரத்திலும், தெகிவளை-கல்கிசையிலும், கொலொன்னாவையிலும் தமிழ் மக்கள் எங்களுக்கு தந்துள்ள ஆணையாகும். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்களை பெற்றுள்ளது. ஆளுங்கட்சி 16 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜேவிபியின் 1 ஆசனத்தை தவிர்த்து, முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள் உட்பட அரசு ஆதரவு குழுக்கள் 6 ஆசனங்களை பெற்றுள்ளன. எனவே அரசாங்கம் 22 ஆசனங்களை தன்வசம் கொண்டுள்ளது. மாநகரசபையில் 53 உறுப்பினர்களில் பெரும்பான்மை பலமான 27 ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் 6 ஆசனங்கள் எந்த கட்சிக்கும் தேவைப்படுகின்றன. அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற முறையில் ஐதேக நிர்வாகத்தை ஏற்படுத்தினாலும், மாநகரசபையை சீராக கொண்டு செல்வதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படுகின்றது. இச்சூழ்நிலையில்; எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, ஜயலத் ஜயவர்தன ஆகியோருடன் இன்று (10-10-2001) மாலை நடைப்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,

நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்த கருத்துகளை இன்றும், நாளையும் நடைபெறவுள்ள கட்சியின் தலைமைக்குழுக் கூட்டத்தில் நாம் விரிவாக ஆராய்வோம். அவசியப்படுமனால் எமது கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் மேலதிக பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்துவார்கள். மக்கள் எமக்கு தந்துள்ள ஆணைக்கு இசைவாக உரிய முடிவுகளை எமது கட்சி எடுக்கும். ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்து எங்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய மக்களுக்கு எங்களது நடவடிக்கைகள் மூலமாகவே நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக