திங்கள், 10 அக்டோபர், 2011

முல்லேரிய சம்பத்தில் ஒருவர் கைது!

முல்லேரியா சம்பவம் தொடர்பில், குற்றத் தடுப்பு பிரிவினரால், 37 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மக்சி ப்ரொக்டர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் 12 கைத்துப்பாக்கிகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, முல்லேரியா சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும சம்பவம் தொடர்பில் தற்சமயம் பக்கசார்பற்ற விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.சம்பவத்தில், ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உயிரழந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வா படுகாயமடைந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவ மனையின் சத்திர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தொடர்ந்தும் சில காலங்களுக்கு சத்திர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என அந்த மருத்துவ மனை பணிப்பாளர் எஸ்.ஏ.கே. கமகே தெரிவித்துள்ளார்.

முல்லேரியா சம்பவத்தில், உயிரிழந்த ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்ட அரசியல்வாதியாவர்.

1979ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மூலம் கொலன்னாவ பிரதேச சபைக்கு தெரிவான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி ஸ்ரீ லங்கா மஹாஜன கட்சியில் இணைந்து கொண்டார்.

ஸ்ரீ லங்கா மஹாஜன கட்சியின் மூலம் 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் மேல் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்,

அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா மஹாஜன கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பொது ஜன ஐக்கிய முன்னணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அதேவேளை, முல்லேரியா சம்பவத்தினால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா, 2009ஆம் ஆண்டு, நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதன் போது, கூட்டமைப்பு வேட்பாளர்களிற்கு இடையே அதிக விருப்பு வாக்குகளை பெற்ற மாகாண சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 336 விருப்பு வாக்குகளைப் பெற்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முதன்மை உறுப்பினராக தெரிவானார்.

இதேவேளை, நிறைவடைந்த கொழும்பு மாநகர சபை தேர்தலில், முதன்மை வேட்பாளராக போட்டியிடுமாறு பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவிற்கு ஜனாதிபதி முதலாவதாக அழைப்பு விடுத்திருந்தார்.

அதனை வெற்றி கொள்வது இயலாத காரியம் என கூறி அவரினால், திலங்க சுமதிபால, ஆர். துமிந்த சில்வா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில், வெல்லம்பிற்றிய காவல்துறையினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் தகவல்களை சமர்ப்பித்துள்ளனர்.

தேவையேற்படின் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு சம்பவம் இடம்பெற்ற இடத்தை ஆய்வு செய்யலாம் என இதன் போது, கொழும்பு பதில் நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக