சனி, 15 அக்டோபர், 2011

அறிவாலயத்தைத் தொட்டால் ஆட்சிக்கு முடிவு: கருணாநிதி ஆவேசம்


சென்னை, அக். 14: அண்ணா அறிவாலயத்தைத் தொடும் நாள்தான் அதிமுக ஆட்சிக்கு முடிவு நாளாக இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி பிரசாரப் பொதுக்கூட்டத்தில் எச்சரித்தார்.  தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன், மன்ற உறுப்பினர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரப் பொதுக்கூட்டம் திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் கருணாநிதி பேசியது:  "நிலங்களை மீட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைப்பதாகச் சொல்கின்றனர். எத்தனை பேருக்கு எவ்வளவு நிலம் இப்படி ஒப்படைக்கப்பட்டது என்று கேட்டால் அரசிடம் பதில் இல்லை. ஊரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இப்படிக் கதை கட்டுகிறார்கள். உண்மையில் கொடநாடு மாளிகையில் பொதுவழி நிலத்தை மீட்டுத்தான் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.  அறிவாலயத்தை எடுப்பேன் என்கிறார். அறிவாலயத்தை எடுப்பது என்ன அவ்வளவு சாதாரணமா? அப்படித் தொடும் நாள்தான் அதிமுக ஆட்சிக்கு முடிவு நாளாக இருக்கும். திமுகவின் சொத்து அறிவாலயம். ஏழை, எளியோர் ரத்தத்தைச் சிந்தி எழுப்பிய கட்டடம் அது. திமுகவின் சாதாரணத் தொண்டன்கூட அந்தக் கட்டடத்தை எடுக்க விடமாட்டான். எங்களுடைய நரம்புகள், எலும்புகள், மண்டையோடுகள் நொறுங்கிப் புதைந்து போனாலும்கூட அதை எடுக்க முடியாது.  இதனை மற்ற கட்சியினரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அறிவாலயம் எப்படி வாங்கப்பட்டது. எப்படிக் கட்டப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.  செம்மொழிப் பூங்கா: தமிழ் மொழியும் செம்மொழித் தகுதியை அடைய வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு சோனியா காந்தி மூலம் அந்தத் தகுதியைப் பெற்றோம். அதன் அடையாளமாக அண்ணா மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட பூங்காவிற்கு செம்மொழி என்ற பெயரை வைத்தேன். இப்போது செம்மொழிப் பூங்கா என்ற பெயர் பலகையைப் படர்ந்த கொடிகளால் மறைத்துள்ளனர். பூங்காவை நான் திறந்து வைத்தேன் என்ற கல்லையும் மறைத்துள்ளனர்.  கல்லணையில் கரிகாலன் கட்டினான் என்றா எழுதப்பட்டுள்ளது. ஆனால் வரலாறு அவன் பெயரைச் சொல்கிறதா இல்லையா? அதைப்போல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான்தான் அந்தப் பூங்காவை திறந்து வைத்தேன், தமிழுக்குச் செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்தேன் என்பதை யாராலும் மறைக்க முடியாது.  சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு தமிழகம் அமைதியாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இப்போதுதான் அதிகம் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளைகள் அதிகரித்து உள்ளன.  திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சிப் பணிகள் எளிமையாகவும், எழிலாகவும் இருந்தய. எளிமை என்பது மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போலவும், எழில் என்பது அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் போலவுமாகும். 5 ஆண்டு காலத்தில் மா.சுப்பிரமணியத்தின் பல்வேறு சாதனை பணிகளுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன.  எனவே, சென்னை மாநகராட்சி தொடர்பான விஷயங்களில் நன்கு பழகியவர்களுக்கு வாய்ப்பு அளித்தால்தான் தொடர்ந்து புத்துணர்ச்சியோடு அவரால் மேலும் அதிக சாதனை செய்ய முடியும். அதனால் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள்' என்றார் கருணாநிதி.  துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், மக்களவை உறுப்பினரும் அமைப்புச்செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்துறை ஆலோசகர் என்.ஜோதி, தென்சென்னை மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன், மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், தலைமைக்கழக வழக்குரைஞர் இ.பரந்தாமன் உள்பட பலர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக