திங்கள், 3 அக்டோபர், 2011

தே.மு.தி.க.,வை முந்துமா தமிழக காங்கிரஸ்?தங்கபாலுவுக்கு சவால்

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய, மேலிட பொறுப்பாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. பெரும்பான்மை தொகுதிகளை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், யுவராஜா ஆகிய மூவரின் மூலம், வாசன் தனது ஆதரவாளர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.


சத்தியமூர்த்தி பவனில் நடந்த முதல் இரண்டு நாட்கள் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மட்டும் வாசன் பங்கேற்றார். ஆனால், டில்லியில் இருந்த முக்கிய பணியின் காரணமாக சிதம்பரம் கலந்து கொள்ளவில்லை. அதனால், அவரது ஆதரவாளர்கள் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியவில்லை என்ற கருத்து நிலவுகிறது.வாசன் அணியில் தற்போது 19 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 18 பேராக உயர்ந்துள்ளனர். காங்கிரஸ் தனித்து விடப்பட்ட சூழ்நிலையில், எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பின்னும், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் வரை, காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

வேட்பு மனுக்களை மட்டுமே தாக்கல் செய்ய விட்டு, அதன் பின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்து, சின்னம் ஒதுக்கீடு கடிதங்களும் வழங்கப்பட்டன. இதனால், பல குளறுபடிகள் தமிழகம் முழுவதும் அரங்கேறியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு சோதனையான நேரத்தில் உழைத்தவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்ற அதிருப்தியும் தொண்டர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், மாநகராட்சி கவுன்சிலராக இருந்த அனைவருக்கும் "சீட்'கள் ஒதுக்கப்படவில்லை. வேண்டுமென்றே தங்களை பழி வாங்கி விட்டதாக தலைமை மீது, "சீட்' கிடைக்காதவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலை சென்னையில் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் நீடிக்கிறது.தேர்தல் கமிஷன் அறிவித்த வேட்பு மனு கட்டணத்தை விட, கட்சி நிர்ணயித்த விருப்ப மனுக்கள் கட்டணம் அதிகமாக இருந்தும், காங்கிரசார் ஆர்வத்தோடு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். "சீட்' கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள், விருப்ப மனு கட்டணத்தையாவது திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். சட்டசபைத் தேர்தலின் போது, வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு டில்லி தலைமை பணத்தை அள்ளிக் கொடுத்தது.

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திற்கு காங்கிரஸ் வர வேண்டும் எனக் கருதினால், தேர்தல் செலவுக்கு டில்லி தலைமை பணம் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வேட்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தேர்தலை பொருத்தவரையில் டில்லி தலைமை மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறது. அதன் காரணமாகத் தான், டில்லி தலைமை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆந்திர மாநிலத்திலிருந்து தேர்தல் பார்வையாளர்களை அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெறும் ஓட்டு சதவீதத்தை வைத்து தான், வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து, அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள் சிந்திக்கும். சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், அக்கட்சிக்கு ஓட்டு வங்கி இருக்கிறது என தம்பட்டம் அடிப்பது, "காலி பெருங்காய டப்பா' கதை தானோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஆனாலும், தோல்வியின் பாதிப்பை தாங்கிக் கொண்டு தி.மு.க., கைவிட்ட போதிலும், தனித்து களம் இறங்கியிருப்பது, அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மத்தியில் ஆட்சி அங்கம் வகித்து, தேவையான துறைகளைப் பெற்று, தங்களை திடப்படுத்திக் கொண்ட தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசை தனிமைப்படுத்திய கோபம் காங்கிரஸ் தொண்டர்களிடம் காணப்படுகிறது. திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க.,வை ஆதரிக்கும் என்பதை காங்கிரஸ் தலைமை தீர்மானித்ததன் மூலம், திருச்சி மாவட்டத்தின் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின், தங்கபாலு மாற்றப்படுவார் என்ற பேச்சு அடிப்பட்டது. ஆனால், தலைவர் பதவியில் தொடர்ந்து தங்கபாலுவே நீடித்ததால், அவரை கடுமையாக எதிர்த்த கோஷ்டித் தலைவர்களும் தங்கபாலுவுடன் கைகோர்த்து, தங்களது ஆதரவாளர்களுக்கு, "சீட்'களை பெற்றுக் கொடுத்துள்ளனர்.அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க.,வை போல கட்சிக்குள் ஒரு எழுச்சியை உருவாக்கும் நடவடிக்கைகளில் எந்த கோஷ்டித் தலைவர்களும் ஈடுபடவில்லை. அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு அடுத்த இடத்தையாவது பிடித்து, தே.மு.தி.க.,வை விட தங்களுக்கு ஓட்டு வங்கி அதிகம் என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம், காங்கிரசுக்கு உருவாகியுள்ளது. மொத்தத்தில், தமிழக காங்கிரஸ் தலைமைக்கு இந்த தேர்தல் சவாலாக அமைந்துள்ளது.

-எஸ்.சிந்தாஞானராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக