சனி, 15 அக்டோபர், 2011

எதியூரப்பா கைது;டிராமாவுக்கு' பின் சிறையில் நில மோசடி வழக்கு

Yeddyurappa
பெங்களூர்: பெருமளவில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில், கர்நாடக பாஜக மாஜி முதல்வர் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை லோக் ஆயுக்தா நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் இன்று பெரும் 'டிராமாவுக்கு' பின் கைது செய்யப்பட்டார்.
இந்த நில மோசடி விவகாரத்தில் எதியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இவர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.ஆனால், இன்று இந்த மனுவை விசாரித்த லோக் ஆயுக்தா ‌நீதிமன்றம் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் எதியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன் வழங்கியது.

எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது.

இதையடுத்து அவரைக் கைது செய்ய 2 லோக் ஆயுக்தா டிஎஸ்பிக்கள் அவரது ரேஸ்கோர்ஸ் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால், எதியூரப்பா அந்த வீட்டில் இல்லை.

இதையடுத்து இன்னொரு போலீஸ் டீம் எதியூரப்பாவின் டாலர்ஸ் காலனி வீட்டுக்குச் சென்றது. ஆனால், அங்கேயேயும் அவர் இல்லை.

இதனால் அவர் பெங்களூரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள தும்கூர் சென்றுவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கேயும் அவரைத் தேடி லோக் ஆயுக்தா போலீஸ் குழு சென்றது. தும்கூரில் உள்ள மடங்களுக்கு எதியூரப்பா அடிக்கடி சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை வரும் திங்கள்கிழமை அணுகவும், அதுவரை கைதாகாமல் இருக்கவும் எதியூரப்பா முயன்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இந் நிலையில் எதியூரப்பாவை பல இடங்களிலும் லோக் ஆயுக்தா போலீசார் தேடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் மாலையில் பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நீதிபதி சுதீந்திர ராவ் முன் சரணடைந்தார். இதையடுத்து அவரை வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் பின் பக்க வாசல் வழியாக அவர் ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக இன்றைய விசாரணையின் போது எதியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் முதுகு வலி காரணமாக ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், முதுகு வலியை வைத்துக் கொண்டு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் எப்படி ஈடுபட்டார் என எதிர்த் தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

எதியூரப்பா இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தால், அங்கேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று எதியூரப்பாவைக் கைது செய்ய போலீசார் அவரது வீடுகளுக்கு வந்தபோது, ஒரு அமைச்சரோ அல்லது எம்எல்ஏவோ கூட அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தக் கைது நடவடிக்கை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உள்துறை அமைச்சர் அசோக் மற்றும் பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னருடன் முதல்வர் சதானந்த கெளடா ஆலோசனை நடத்தினார்.

அத்வானியின் ஊழல் எதிர்ப்பு யாத்திரையும்.. எதியூரப்பா கைதும்:

பாஜக மூத்த தலைவர் அத்வானி ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில், ஊழல் வழக்கில் எதியூரப்பா கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பெல்லாரியில் சட்ட விரோத சுரங்க ஊழல் தொடர்பாக எதியூரப்பாவுக்கு எதிராக லோக் ஆயுக்தா அறிக்கை தாக்கலானதால் அவர் பதவி விலக நேர்ந்ததும் நினைவுகூறத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக