சனி, 8 அக்டோபர், 2011

தொடர் போராட்டத்தால் ஆந்திராவில் அமலாகிறது ஜனாதிபதி ஆட்சி?

ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி, 25வது நாளாக போராட்டம் தொடர்வதால், அங்கு சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் விவாதிக்க மாநில கவர்னர் நரசிம்மன், டில்லி விரைந்துள்ளார்.
ஆந்திராவில் ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களைப் பிரித்து தனி தெலுங்கானாவை உருவாக்கக் கோரி, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக தெலுங்கானா பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான 10 ஆயிரம் பஸ்கள், இந்த ஸ்டிரைக்கால் ஓடாமல் முடக்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் மட்டும் தனியார் டிரைவர்களை வைத்து 200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக, அரசுக்கு ஒரு நாளைக்கு ஏழு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.ஆந்திராவில் 50 நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நிலக்கரி உற்பத்தி கணிசமாகக் குறைந்துவிட்டது.

சிங்கரேணி சுரங்கம் ஒரு நாளைக்கு 1.50 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து வந்தது. இந்த ஸ்டிரைக் காரணமாக தற்போது 36 ஆயிரம் டன் தான் நிலக்கரி உற்பத்தியாகிறது.ராமகுண்டம் மின் நிலையத்தில் 2,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. போதிய நிலக்கரி இல்லாததாலும், ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாகவும் தற்போது 1,750 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது. ஆந்திராவில் உள்ள அனல் மின் நிலையங்கள் மூலம் தற்போது 76 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.

இதனால், 56 மில்லியன் யூனிட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் நகர்ப்புறங்களில் நான்கு மணி நேர மின் வெட்டும், மாவட்ட தலைநகரங்களில் ஆறு மணி நேர மின் வெட்டும், கிராமப்புறங்களில் எட்டு மணி நேரமும், தொழிற்சாலைகளுக்கு 10 மணி நேர மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.போதிய மின்சாரம் இல்லாததால், கிராமப்புறங்களில் பயிர்கள் வாடியுள்ளன. ஊழியர்களின் ஸ்டிரைக்கால் அரசுக்குக்கு ஒரு நாளைக்கு 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால், தசரா விடுமுறை முடிந்தும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா போராட்டக் குழுவினர் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். இதனால், ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதிதாக தனி தெலுங்கானா உருவானால், அந்த மாநிலத்தின் முதல்வர் பதவியைப் பிடிக்கும் ஆசையில், அனைத்து கட்சிகளுமே இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றன. ஆளுங்கட்சிப் பிரமுகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, போராட்டம் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.

மாநில முதல்வர் கிரண்குமார் பலமுறை சமாதான பேச்சுக்கு அழைத்தும் பலனில்லை. இந்த போராட்டங்களை நக்சலைட்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அபாயமும் உள்ளது.நிலைமையை சமாளிக்க, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்க, மாநில கவர்னர் நரசிம்மன் நேற்று டில்லி விரைந்தார்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துப் பேச உள்ளார். கவர்னர் டில்லி சென்றுள்ளதால், விரைவில் ஜனாதிபதி ஆட்சி அமலாவதற்கான சாத்தியம் உள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

-நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக