செவ்வாய், 25 அக்டோபர், 2011

சன் டிவி மூலம் நாளை தமிழர்களைக் கலக்க வரும் வடிவேலு- அதிரடியான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி!


சட்டசபைத் தேர்தல் முடிந்த கையோடு கூட்டுக்குள் போய் விட்ட காமெடிப் புயல் வடிவேலு, நாளை சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்க வருகிறார். மகா அதிரடியாக உருவாகியுள்ள இந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் வடிவேலுவின் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதுடன், அவரின் ஒட்டுமொத்த இமேஜையும் அப்படியே தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா கண்ட அதிரடி காமெடி சூப்பர் ஸ்டார்களில் வடிவேலுவுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழ்த் திரையுலகில் காமெடியில் அதகளம் செய்த முக்கிய ஸ்டார்களில் வடிவேலுவும் ஒருவர். அவரது பாணியில் சொல்வதானால், எல்லாம் நல்லாத்தான் போய்க் கொண்டிருந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் மூலம் அவரது திரையுலகில் பெரும் புயல் வீசி விட்டது.

சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரக் களம் கண்ட வடிவேலு, விஜயகாந்த்தைப் போட்டுக் கடுமையாக தாக்கி அனைவரையும் அதிர வைத்தார். அவரது பேச்சைப் பார்த்தால் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறுமோ என்ற எண்ணம்தான் அத்தனை பேரிடமும் இருந்தது. காரணம், விஜயகாந்த் பிரசாரத்தின்போது செய்த சின்னச் சின்னத் தவறுகளையும் மெகா மகா டைமிங்கோடு எடுத்து வைத்து பிரசாரத்தில் சூடேற்றினார் வடிவேலு. அதை மக்களும் ரசிக்கத்தான் செய்தார்கள். ஆனால் முடிவுதான் வடிவேலுவை திரையுலகிலிருந்து முடக்கி வைத்து விட்டது.

தேர்தல் முடிவுக்குப் பின்னர் அமைதியாக ஒதுங்கிக் கொண்ட வடிவேலு அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவரே வந்த வாய்ப்புகளையெல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டார். எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் வடிவேலுவின் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம். சினிமாக்களிலோ மாறி மாறி சந்தானத்தின் ஒரே டைப்பான காமெடியை மட்டுமே ரசிக்கும் நிலை ரசிகர்களுக்கு.

இந்த நிலையில் மறுபடியும் அதே துள்ளலுடன், துடிப்புடன், உற்சாகக் களிப்புடன் படையெடுத்து வருகிறார் வடிவேலு. இந்த முறை சின்னத் திரையில். சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக வடிவேலுவின் காமெடி நிகழ்ச்சியை வைத்துள்ளனர். காட்டுக்குள் தீபாவளி என்ற பெயரிலான அந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டம் அட்டக்கட்டி மலை கிராமத்தில் மலை வாழ் மக்களுடன் சேர்ந்து வடிவேலு அதிரடியாக தீபாவளியைக் கொண்டாடும் அந்த நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக நாளை ஸ்பெஷல் நிகழ்ச்சியாக சன் டிவி ஒளிபரப்புகிறது.

நாளை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த காட்டுக்குள் தீபாவளி காமெடி நிகழ்ச்சி வடிவேலு ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக