செவ்வாய், 25 அக்டோபர், 2011

தோழர் விஸ்வா என்றென்றும் நினைவு கொள்ளப்படுவார்!

தோழர் வி விஸ்வானந்ததேவன் நினைவு தினம்…!!! மோகனன்

தோழர் வி.விஸ்வானந்ததேவன் காணாமற் போய் இருபத்தியைந்து (oct 15) வருடங்களாகிறது. யாழ்ப்பாணம், குருநகரிலிருந்து நெடுந்தீவுக்கு சென்று பின்னர் அங்கிருந்து தமிழகம் செல்லும் நோக்கில் தோழர்கள் கண்ணன் (முருங்கன்- மன்னார்), விசு (காரைநகர்) புறப்பட்டவர், கடல் நடுவே காணாமல் போனார். இலங்கையில் 1970களின் பிற் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டுக் கொண்டிருந்த மாக்ஸிஸ- லெனினியச் சிந்தனையை தனியொரு மனிதனாக, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட சக்திகளிடம் கையளித்தவர் தோழர் விஸ்வானந்ததேவன்.
தோழர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன் 29-11-1952ல் கரவெட்டியிலிருக்கும் கல்லுவத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர்.
பாடசாலை மாணவனாக இருந்த போதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். விஸ்வாவின் அரசியற் பணிகளை, இலங்கையின் மாக்ஸிஸ- லெனினிய இயக்கத்தின் பின்னணியிலேயே புரிந்து கொள்ள முடியும்.
தோழர் மு. காத்திகேயனே தமிழர்களிடையே கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கியவராவார். 1945ம் ஆண்டு அரசியற் பணிகளுக்காக கட்சி அவரை யாழப்பாணத்திற்கு அனுப்பியது. அதன் பின்னரான தமிழர்களின் சமுக மாற்றங்களை மிகுந்த போராட்டங்களினூடாக கம்யூனிஸ்ட் கட்சி சாதித்தது. இவையனைத்தின் உச்சமாக தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் அமைந்தது.
தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் தமிழர்களுடைய- குறிப்பாக சாதியத்தின் கொடூர அடக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த குடாநாட்டுத் தமிழர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதுவரையும் ஒரு சமூகமாக குடாநாட்டுத் தமிழர்கள் இணைவதில் பெரும் தடையாக இருந்து வந்த தீண்டாமைப் பெருஞ்சுவர், கம்யூனிஸ்ட்களின் மாபெரும் போராட்டத்தால் உடைந்து நொருங்கத் தொடங்கியது. இதன் பின்விளைவுகளை கணிப்பதில் கட்சி வாலாற்றுத் தவறை இழைத்தது. இதன் பின்னர் கட்சி பல குழுக்களாக பிளவுபட ஆரம்பித்தது.
ரோகண விஜேவீரா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், முதலாவது பெரும் பிளவு, கட்சியின் பொதுச் செயளாளர் தோழர் நாகலிங்கம் சண்முகதாசன் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஏற்பட்டது. தோழர்கள் வாட்சன் பெனார்ன்டோ, காத்திகேயன், வீ.ஏ. கந்தசாமி, அஜித் ரூபசிங்கா முதலானவர்கள் மாக்சிஸ – லெனினிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள். இவர்களது உட்கட்சிப் போராட்டத்தின் போது உற்சாகமான விவாதங்களில் பங்கெடுத்த ச.சுப்பிறமணியம்,விஸ்வானந்ததேவன் போன்றவர்கள் தலைமைக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்தக்காலப் பகுதி ஜேவிபியின் முதலாவது ஆயுத எழுச்சி, தரப்படுத்தலுக்கெதிரான தமிழ் மாணவர்களின் போராட்டம் முதலான வரலாற்றுச் சம்பவங்களால் நிறைந்திருந்தது. குறிப்பாக தமிழ் மாணவர்களின் போராட்டம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமாக வளர ஆரம்பித்தது. இந்த நிலமைகளை தோழர் காத்திகேயனே சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். தமிழ் மக்களிடையே கட்சியை உருவாக்கி, பல ஆண்டுகளாக அவர்களிடையே வேலை செய்த அனுபவத்தினாலேயே அவருக்கு இது சித்தித்தது.
கட்சிக்குள் அவர் முன்னெடுத்த விவாதங்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமே இலங்கையின் முதன்மையான போராட்டமாக உருவாகியுள்ளதாகவும், அதனை முன்னெடுப்பதற்கு ஐக்கிய முன்னணியொன்றை உருவாக்க வேண்டுமெனவும் கட்சியை நிர்ப்பந்தித்தது. இப்படியாக உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியாகும். ஆனாலும் இன்றைய மகிந்தாயிஸ்டுக்கள் சிலர் அன்றே தோழர் காத்திகேயனின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைகளைப் போட்டனர். இதன் காரணமாக 1977 பொதுத் தேர்தலின் போது தமிழீழ விடுதலை ஏகாதிபத்தியங்களின் தலையீட்டுக்கு துணை போகுமெனப் பிரச்சாரம் செய்தனர்.
இந்தக் காலப் பகுதியில் தோழர் காத்திகேயன் சடுதியாக மரணமானார். காத்தாரின் மறைவுக்குப் பின்னர் மா-லெ கட்சியின் செயற்பாடுகள் முடக்கத்துக்கு வந்தது. மாலைக் கட்சியினர் எனக்கேலி பேசப்படும் படியாக முன்னணித் தோழர்களின் செயற்பாடுகள் இருந்தன.
தோழர் வி.விஸ்வானந்ததேவனின் பணிகள் (தோழர் காத்திகேயனின் மறைவின் பின்னர்) இந்த இடத்திலே தான் முக்கியம் பெறுகின்றது. கம்யூனிஸ்ட் கட்சியினதும் தோழர் காத்திகேயனினதும் உண்மைத் தொண்டனான விஸ்வா கட்சியைப் புனரமைப்பதற்கான இடையறாத முயற்சிகளை மேற்கொண்டார். அனைத்துமே தோல்வியில் முடிந்தன. இதனால் கட்சியிலிருந்த சிலர் மீது அவருக்கு அதிருப்தியேற்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பொறியியற் கல்வியை முடித்த பின்னர், தோழர் விஸ்வா சிறிது காலம் அங்கேயே உதவிப் போதனாசிரியாகப் (இன்ஸக்டர்) பணி புரிந்தார். அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் ஸ்தாபகரான தோழர் பத்மநாபா கண்டியில் தலைமறைவாக அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இருவருக்குமிடையிலான இடையறாத விவாதங்களும், நெருங்கிய நட்பும் உருவான காலமிதுவாகும். தோழர் நாபாவுடனான விவாதங்களும், அவசரகாலச் சட்டமும், அதன் பின்னரான அழித்தொழிப்புகளும் தேசிய இனப் பிரச்சனை பற்றிய பல கேள்விகளை விஸ்வாவிடம் தோற்றுவித்தன. இதற்கான விடைகள் இலங்கையிலிருந்த கம்யூனிஸ்டுக்களிடம் இல்லையென உணர்ந்து, தானே நேரடியாக அறியும் முயற்சியில் இறங்கினார். இந்தத் தேடல்,அவரை தேசிய விடுதலைப் போராட்டங்கள் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்த இந்தியாவின் எல்லைப் புற மாநிலங்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் கொண்டு சென்றது.
இதன்போது தோழர் விஸ்வா காலமாகி விட்டார் என்ற புரளியைச் சிலர் பரப்பினார்கள். அஞ்சலி தெரிவித்த துண்டுப்பிரசுரமொன்றை மலையக மக்கள் இயக்கத்தைச் சார்ந்த தீத்தக்கரை சாந்திக்குமார் முதலானவர்கள் வெளியிட்டிருந்தார்கள். சில காலத்தின் பின்னர் தேசிய இனப் பிரச்சனை தொடர்பான புதிய புரிதல்களுடன் நாடு திரும்பிய விஸ்வா, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியைப் புனரமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கி, கல்முனையில் முதலாவது மாநாட்டைக் கூட்டினார். இதற்கு இடம் பெற்றுத்தருவதற்கு கவிஞர் சண்முகம் சிவலிங்கம் உதவி புரிந்தார். காலஞ்சென்ற கவிஞர் சாருமதி, நெடுந்தீவு சண்முகநாதன் முதலானோர் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் சிலர்.
1980ம் ஆண்டு காங்கேசன்துறை லங்கா சீமெந்து நிறுவனத்தில் பொறியியலாளராக பதவியேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்தார். இதன் பின்னர் ஜனநாயக முன்னணியின் வேலைகள் வேகமெடுத்தன. பல புதிய இளைஞகள் அமைப்புக்குள் ஈர்க்கப்பட்டார்கள். இலங்கை அரசியலில் கொந்தளிப்பும், நம்பிக்கையும், அரசியல் வளர்ச்சியும் நிறைந்த காலப் பகுதியிதுவாகும்.1981ல் தன்னுடன் உடன் பணிபுரிந்த ஜெயாவை காதலித்துக் கரம் பிடித்தார். தான் பணி புரிந்த லங்கா சீமெந்து தொழிற்சாலை ஊழியர்கள் எந்தவித அடிப்படை உரிமைகளுமற்று இருப்பதையிட்டு பெருங் கவலை கொண்டிருந்தார். நிர்வாகத்தின் ஊழல்களையும், அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்தி துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட்டார். இத் துண்டுப் பிரசுரம் வெளியான மறுநாளே தோழர் விஸ்வாவும் மனைவியும் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது, முழு நேர செயற்பாட்டாளனாக மாறுவதற்கு விஸ்வாவுக்கு வழி வகுத்தது.
பயணம் என்ற உட்கட்சிப் பத்திரிகை வெளியிடப்பட்டு உறுப்பினர்களிடமும், ஆதரவாளர்களிடமும் விநியோகிக்கப்பட்டது. இனப் பிரச்சனைக்கு தீர்வாக ஜே.ஆர்.ஜயவர்தனாவால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஏற்றிருந்தனர். இதற்கு எதிராக, ஈழத்தின் முக்கியமான அரசியல் நாடக எழுத்தாளரான மாவை நித்தியானந்தனைக் கொண்டு “திருவிழா” எனும் நாடகத்தை எமுதுவித்து அளவெட்டி படைப்பாளிகள் வட்டம் மூலம் தயாரித்து, வீதி நாடகமாகவும் மேடை நாடகமாகவும நிகழ்த்துவித்தார். பல மணி நேர மேடைப் பேச்சுகள் சாதிக்க வேண்டியதை ஒரு நாடகம் சாதித்தது. இந் நாடகம் மூலம் பல புதிய தொடர்புகளை அமைப்பு பெற்றுக் கொண்டது. இந்தக் காலகட்டத்தில் ஏனைய இயக்கங்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். ஆனாலும் உரிய விமர்சனங்களை முன்வைப்பதிலும் பின்னின்றதில்லை.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான சுந்தரம் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவர்களால் வெளியிடப்பட்ட “புலிப்படைத் தளபதி கொலை!” எனும் துண்டுப் பிரசுரத்தை யாழ்பாணத்தில் விநியோகிப்பதற்கு அவர்கள் தடுமாறிய போது ஜனநாயக முன்னணியே அதனை விநியோகித்து உதவியதுடன், கண்டனத் துண்டுப் பிரசுரமொன்றையும் வெளியிட்டது. இந்தக் கொலைக்கு பழிவாங்கு முகமாக புளொட்டினால் நடத்தப்பட்ட இறைகுமாரன், உமைகுமாரன் கொலையைக் கண்டித்தும் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது.
1983 ஜுலை இனப் படுகொலையைத் தொடர்ந்து ஜனநாயக முன்னணிக்குள் கட்சி அமைப்புக் குழுவொன்றை அமைக்கும் கருத்து வலுப்பெற்றது. இதனடியாக 1984ல் கூட்டப்பட்ட மாநாட்டில் கட்சி அமைப்புக் குழு உருவாக்கப்படதுடன், ஜனநாயக முன்னணியினது பெயரும் தமிழீத் தேசிய விடுதலை முன்னணி எனவும் மாற்றப்பட்டது.
இதுவே தனியொரு மனிதனாக மாக்ஸிஸ – லெனினிய சிந்தனையை புதியதொரு தலைமுறையிடம் தோழர் விஸ்வானந்ததேவன் கையளித்த கதை!
இதற்காகவே தோழர் விஸ்வா என்றென்றும் நினைவு கொள்ளப்படுவார்!

Courtesy: Thesam Net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக