வெள்ளி, 14 அக்டோபர், 2011

மேலும் பலர் நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தாயகம் திரும்புவோர் தொகை அதிகரிப்பு நேற்றும் 37 பேர் கப்பல் மூலம் நாடு திரும்பினர் –யு. என். எச். சி. ஆர்.

மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியா சென்ற இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் நேற்று கப்பல் மூலமாக தாயகம் திரும்பினர்.சுமார் 20 வருடங்களுக்கு பின் முதற் தடவையாக கப்பல் மூலம் இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டது இதுவே முதற் தடவையாகும் என்றும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் ஐ. நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இலங்கை பிரஜைகளில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் அடங்குவதாக யு. என். எச். சி. ஆர். தெரிவித்தது. மோதல் காரணமாக வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவது தற்போது அதிகரித்து வருவதாக யு. என். எச். சி. ஆர். இலங்கை வதிவிடப் பிரதிநிதி மைக்கல் ஸ்வாக் தெரிவித்தார்.இலங்கை திரும்பிய இலங்கை பிரஜைகளை வரவேற்கும் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் ஐ. நா. வுக்கான அகதிகள் உயர்ஸ்தானிகராலயம், மீள்குடியேற்ற அமைச்சு என்பன இணைந்து இவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தன.இவர்கள் மன்னார், குருணாகல், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறியது.
இவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு என்பனவும் வழங்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டது. நாடு திரும்பும் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்காக 7500 ரூபாவும் பெரியவர்களுக்காக 10 ஆயிரம் ரூபாவும் யு. என். எச். சி. ஆர். வழங்கி வருகிறது.மோதல் முடிவடைந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டு 818 பேரும் 2010 இல் 2054 பேரும் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் வரை 1493 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.
இந்த வருடத்தில் நாடு திரும்பியவர்களில் 1.448 பேர் இந்தியாவில் இருந்தும் ஏனையோர் மலேசியா, ஜோர்ஜியா மற்றும் சென் லூசியா தீவுகள் என்பவற்றில் இருந்தும் திரும்பி வந்ததாக யு. என். எச். சி. ஆர். தெரிவித்தது.இலங்கைப் பிரஜைகளின் வேண்டுகோளின் பிரகாரமே அவர்கள் கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டதாகவும் இதன் மூலம் அவர்களுக்கு தமது வீட்டு உபகரணங்களையும் எடுத்துவர முடிவதாகவும் யு. என். எச். சி. ஆர். வதிவிட பிரதிநிதி மைக்கல் ஸ்வார்க் கூறினார்.
மேலும் பலர் நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எத்தனை பேர் கப்பல் மூலம் திரும்ப உள்ளனர் என்று கூற முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.நாடு திரும்ப விருப்பமானவர்களுக்கு ஐ. நா. வுக்கான அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் சகல உதவிகளையும் வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சுமார் 65 நாடுகளில் சுமார் 1.41.063 இலங்கையர் இடம் பெயர்ந்து வாழ்வதாக யு. என். எச். சி. ஆர். புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இவர்களில் 69 ஆயிரம் பேர் தமிழ் நாட்டில் உள்ள 112 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 32 ஆயிரம் பேர் தமிழ் நாட்டுக்கு வெளியில் உள்ள முகாம்களில் உள்ளனர். இது தவிர பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, மலேசியா, இத்தாலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அதிகமான இலங்கையர் வாழ்கின்றனர்.யுத்தம் முடிவடைந்துள்ளதால் தாய்நாட்டுக்கு திரும்பி வருமாறு அரசாங்கம் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தெரிந்ததே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக