ஞாயிறு, 23 அக்டோபர், 2011

விஜயகாந்த் சீட் கேட்கவே வாக்கு வங்கியை முழு மூச்சாக பயன்படுத்தினார்


Premalatha and Vijayakanth
சென்னை: சிந்தியுங்கள் மக்களே, தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் மக்களே என்று தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கெஞ்சாத குறையாக வாக்கு வேட்டையாடியும் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரின் கோரிக்கையை மக்கள் பெருவாரியான இடங்களில் நிராகரித்து விட்டது தேமுதிகவினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

5 மாதங்களுக்கு முன்பு இதே மக்கள்தானே 29 எம்.எல்.ஏக்களை நமக்குக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது அதே மக்கள் ஏன் நமக்கு பட்டை நாமம் போட்டுள்ளனர் என்ற புரியாத குழப்பத்தில் தேமுதிகவினர் உள்ளனர்.
ஆனால் மக்கள் கணக்கு வேறு மாதிரியாக இருந்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேமுதிகவை ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சியாக, நமக்கான கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே இந்த தீர்ப்பின் முக்கிய அம்சம் என்பது இவர்களின் கருத்தாகும்.
மக்களே, மக்களே என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய்க் கெஞ்சியும் மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கியக் காரணங்களை அவர்கள் பட்டியலிடுகிறார்கள். 1   2   3  4

1. முதலில் தேமுதிகவை மக்களுக்கான கட்சியாக இன்னும் விஜயகாந்த் மாற்றவில்லை. இந்தக் கட்சிக்கு ஆரம்ப காலத்தில் மக்களிடமிருந்து கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து அரசியலில் தான் காலூன்றவே விஜயகாந்த் முயன்றார். ஒரு முறை கூட மக்களுக்கான கட்சியாக இதை மாற்ற அவர் முயலவில்லை.

2.மக்களுக்கான போராட்டங்களை, மக்களின் தேவைகளுக்கான போராட்டங்களை தேமுதிக முறையாக, சரியாக நடத்தத் தவறி விட்டது.

3. தனக்கென்று வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும், அதை வைத்து கூட்டணிக்குப் பேர பேச வேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாக தேமுதிக இன்னும் கூட வைத்துள்ளது. இது மக்களிடையே எதிர்மறையான தீர்ப்புக்கு வித்திட்டு விட்டது.

4. சீட் கேட்கவே தனது வாக்கு வங்கியை விஜயகாந்த் முழு மூச்சாக பயன்படுத்தினார். மாறாக, திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும், வர வேண்டும் என்ற மக்களின் அடிப்படை அபிலாஷையை அவர் மதிக்கத் தவறி விட்டார், மறந்து விட்டார், கவனிக்காமல் விட்டு விட்டார்.

5. அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக சாடி வந்த விஜயகாந்த், அதிமுகவின் ஓட்டு வங்கியை மிகப் பெரிய அளவில் பந்தாடி வந்த விஜயகாந்த், கடைசியில் அதே கட்சியுடன் போய்க் கூட்டணி வைத்தது மக்களை அதிர வைத்து விட்டது. இதை உணர தற்போது மக்கள் விஜயகாந்த்துக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

6. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான வாக்குகள் கிடைக்க திமுக மீதான மக்களின் கடும் அதிருப்தியும், கோபமுமே காரணம். அதேசமயம், தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்கள் கிடைக்க அதிமுகவுக்கு ஓட்டுப் போட்ட மக்களின் ஆதரவு தேமுதிகவுக்கும் சாதகமாக அமைந்ததே. மற்றபடி தேமுதிகவின் பலத்தால் வந்ததல்ல இந்த 29 இடங்களும் என்பது அரசியல் நோக்கர்களின் ஆணித்தரமான வாதமாக உள்ளது.

7. திமுகவை விட மேலான கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், திமுக எதிர்க்கட்சியாக கடந்த காலங்களில் இருந்தபோது செய்ததை விட கால்வாசியைக் கூட தேமுதிக செய்யவில்லை. குறிப்பாக சமச்சீர் கல்விப் பிரச்சினை வந்தபோது தேமுதிகவின் நிலை மக்களுக்குக் கடைசி வரை புரியவே இல்லை.

8. இந்த ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே பேசுவேன் என்று தெனாவெட்டாக விஜயகாந்த் பேசியதை மக்கள் ரசிக்கவில்லை என்பதும் மக்களின் தீர்ப்பிலிருந்து புரிகிறது. அப்படியானால் ஒரு வருடத்திற்குள் என்ன நடந்தாலும் அதை விஜயகாந்த் கண்டு கொள்ள மாட்டார், பேச மாட்டார் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட இது காரணமாகி விட்டது.

9. ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து கொள்ளாமல், சட்டசபைக்குப் போவதும், வருவதுமாக விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியினர் இருந்ததும் மக்களை சிந்திக்க வைத்து விட்டது. உண்மையில் மக்களே சிந்தியுங்கள் என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் கூறியது மக்களை வேறு விதமாக சிந்திக்கத் தூண்டி விட்டது.

யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக ஒரு அருமையான அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தும் கூட அதை சற்றும் மதிக்காமல், பொருட்படுத்தாமல் தான் தோன்றித்தனமாக தேமுதிக செயல்பட்டதால் மக்களிடையே அக்கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. மேலும், முக்கியப் பிரச்சினைகளில் தேமுதிகவின் கொள்கை, நிலைப்பாடு என்ன என்பதையும் அக்கட்சியினர், மக்களுக்குப் புரிய வைப்பதில் தவறி விட்டனர்.

மொத்தத்தில் தேமுதிகவின் தற்போதைய ஒரே கொள்கை, இப்போது எதிர்க்கட்சியாகி விட்டோம், எம்.எல்.ஏக்களைப் பெற்று விட்டோம், முரசு சின்னத்தை தக்க வைத்துக் கொண்டு விட்டோம். அடுத்து எம்.பி பதவிகளையும் கணிசமான அளவில் வாங்கி விடுவோம், பிறகு ஆட்சியைப் பிடிப்போம். அதுவரை அமைதியாக இருப்போம் என்ற பாணி அரசியலை மக்களே சுத்தமாக வெறுத்து ஒதுக்கியுள்ளனர் என்பதே இந்த தேர்தல் முடிவின் சாராம்சமாகும்.

தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெறுவது, கூட்டணி சேர்ந்து சீட்டைப் பெறுவது என்ற விஜயகாந்த்தின் வித்தியாசமான அரசியலுக்கு மக்கள் ஆணித்தரமான முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

தனது பலமே தனித்துப் போட்டியிடுவதுதான் என்பதை விஜயகாந்த் சற்றும் புரிந்து கொள்ளவில்லை. தனது கட்சி உயிர் பிழைப்பதற்காக அவர் கூட்டணி சேர்ந்த விதம் மக்களிடமிருந்து அவரை அழகாக பிரித்து விட்டது. இங்குதான் ஜெயலலிதாவின் அதிமுக படு சாதுரியமாக செயல்பட்டு பாலிட்டிக்ஸ் செய்துள்ளது. இதை அவர் புரிந்து கொள்ள 5 மாத காலம் ஆகியுள்ளது.

ஊர் ஊராகப் போய் கடுமையாக பிரசாரம் செய்வது பெரிய விஷயமல்ல. நாம் சொல்வதை, செய்வதை தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதே அரசியலில் முக்கியம்.

தேமுதிக ஒரு பொறுப்பான மக்கள் கட்சி, மக்கள் குரலே தேமுதிகவின் குரல், மக்களுக்காகத்தான் தேமுதிக என்ற நிலை மாறும்போதுதான் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு நிலை பெறும், நிரந்தரமாகும், அப்போதுதான் அது உண்மையான மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை விஜயகாந்த் உணர வேண்டும். ஆனால் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் மக்களே என்று சொன்ன விஜயகாந்த் பின்னர் அவரே மாறிப் போனதன் மூலம் மற்றும் ஒரு கட்சியாகவே தற்போது தேமுதிக உருமாறிப் போயுள்ளது துரதிர்ஷ்டவசமானதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக