செவ்வாய், 11 அக்டோபர், 2011

கருணாநிதிக்கும் இந்திரா காந்திக்கும் முட்டல் மோதல்கள் தொடங்கிவிட்டதாக

ஃபெர்ணாண்டஸ் போட்ட குண்டு!

க – 24
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சார்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான விழா 1971 ஜூலை மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அறிவிப்பு வெளியானதும் மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.
கல்லூரிப் படிப்பைக்கூடத் தொடாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம் என்பதுதான் அந்தக் குறிப்பிட்ட மாணவர்கள் எழுப்பிய சர்ச்சை. கல்வித்தகுதி என்ற அடிப்படையில் அந்தப் பட்டம் தரப்படவில்லை; தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் அவர் கொடுத்த பங்களிப்புகளுக்காகவே கௌரவ டாக்டர் பட்டம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் காங்கிரஸ், இந்திய மாணவர் காங்கிரஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பட்டம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு கருணாநிதியைக் கேலி செய்தனர். கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையைக் கட்டித் தொங்கவிட்டதாகச் செய்திகள் பரவின. எனினும், காவல்துறையினரின் பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழா காலையில் நடந்துமுடிந்தது. முதலமைச்சர் கருணாநிதி புறப்பட்டுவிட்டார். அதன்பிறகுதான் அடுத்த சர்ச்சை வெடித்தது.
திடீரென மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் அறைகளில் தங்கியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். லத்தி கொண்டு தாக்கியதால் மாணவர்கள் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அடிபட்டு, உதைப்பட்டு, ரத்தமும் ரணமுமாகக் கிடந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காலையில் முதல்வருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே மாலையில் மாணவர்கள் காவலர்களால் தாக்கப்பட்டனர் என்ற செய்தி மாணவர்கள் மத்தியில் பரவிக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் குளத்தில் மாணவர் உதயகுமார் என்ற மாணவரின் பிணம் மிதந்துகொண்டிருக்கும் தகவல் மாணவர்களை எட்டியது. ஏராளமான மாணவர்கள் குளத்தைச் சுற்றித் திரண்டனர். காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த உதயகுமார் குளத்தில் வீசப்பட்டாரா அல்லது தாக்குதலில் இருந்து தப்பிக்கக் குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தாரா என்ற சர்ச்சை பலமாக எழுந்தது.
காவல்துறை தரப்போ, இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது. குளத்தில் விழுந்ததால் முகம் உப்பிப்போய் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்ததால் உடலை உதயகுமாரின் பெற்றோராலேயே அடையாளம் காணமுடியவில்லை. காவல்துறையினரின் மிரட்டல் காரணமாகவே பெற்ற
மகனை இல்லை என்று பெற்றோர்கள் சொல்லிவிட்டார்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. பல்கலைக்கழகத் தாக்குதல் தொடர்பாகப் பல கேள்விகள் எழுந்தன.
இறந்து போன மாணவன் உதயகுமார் இல்லை என்றால் வேறு யார்? எனில், உதயகுமார் எங்கே? பட்டமளிப்பு விழா காலையில் முடிந்தபிறகும் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் மாலை வரை இருந்தது ஏன்? திடீரென காவல்துறையினர் விடுதிக்குள் நுழைந்ததன் பின்னணி என்ன? எல்லாவற்றுக்கும் விடை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. குளத்தில் இறந்து கிடந்தது உதயகுமாராக இருக்கலாம் என்றும் அந்த மரணத்துக்கும் காவல்துறைத் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றும் விசாரணை அறிக்கை கூறியது. இருக்கலாம் என்ற வார்த்தையின் அர்த்தம் இன்னமும் தெளிவாக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய சோகம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல்கள், கலவரம், மரணம் குறித்து கடுமையான விமரிசனங்கள் எழுந்தன. தன்னை அவமதித்த மாணவர்களுக்குப் பாடம் புகட்டும் நோக்கத்துடனேயே காவல்துறையினரை ஏவிவிட்டு மாணவர்களைத் தாக்கியிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி என்று குற்றம்சாட்டினர். அதை அரசு மறுத்துவிட்டது. எனினும், இந்த இடத்தில் பல்கலைக்கழகக் கலவரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஜனசக்தியில் தோழர் தா. பாண்டியன் எழுதியதைப் பதிவு செய்வது அவசியம்.
பட்டம் பெற்ற நவீன உயர்சாதி அகங்காரம்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் குழப்பங்களுக்கு மூல காரணம். பட்டம் பெறாத பலர் உலகில் பல அரங்கங்களில் ஆற்றியுள்ள பணிகளை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தால், இந்தக் கூச்சல் எழுந்திராது.
ஆட்சியும் கட்சியும் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தபோதும் கூட்டணிக் கட்சியான இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். தேர்தல் சமயத்தில் கூட்டணி அமைத்துவிட்டு, இப்போது திமுக ஆட்சியைக் கடுமையாக விமரிசனம் செய்துவந்தனர். அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டினர். மாநில அரசு தொடர்பான விஷயங்களில் இந்திரா காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வலுக்கட்டாயமாகத் தலையிட்டனர்.
உதாரணமாக, சென்னையில் உள்ள சிம்சன் நிறுவனத்தில் தொழிலாளர்கள் பிரச்னை ஒன்று ஏற்பட்டது. அதைத் தீர்க்கும் முயற்சியில் மத்திய அமைச்சரும் தொழிற்சங்க ஆர்வலருமான மோகன் குமாரமங்கலம் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக தொழிற்சங்கத் தலைவர்கள் டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினர். உடனடியாக தமிழக அரசைத் தொடர்புகொண்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் காடில்கர், பிரச்னையைப் பேசித் தீர்ப்பதற்காக உடனடியாக தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்புமாறு கோரினார்.
மாநிலத்தில் நடக்கும் ஒரு பிரச்னையை திடுதிப்பென மத்திய அரசு கையில் எடுத்துக் கொண்டதே அத்துமீறல். அதிலும், மாநில அமைச்சரையும் டெல்லிக்கு அனுப்பவேண்டும் என்று கோரியது முதலமைச்சர் கருணாநிதியை யோசிக்கச் செய்தது. பிறகு மத்திய அமைச்சரைத் தொடர்பு கொண்டு அமைச்சரை அனுப்பும் திட்டம் இல்லை என்றும் மாற்று யோசனை குறித்து ஆலோசிப்போம் என்று சொல்லிவிட்டார்.
இந்தப் பின்னணியில் 17 ஜனவரி 1972 அன்று தஞ்சாவூரில் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கள் கூடின. இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் அண்மைக்காலமாக திமுகவுக்கு எதிராகக் கடைப்பிடிக்கும் போக்கும் மேடைப்பேச்சுகளும் எழுத்துகளும் கழகத்தினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பிற்போக்கு சக்திகளும் வன்முறையாளர்களும் வலுப்பெறும் வகையில் ஆளுங்கட்சியான தோழமைக் கட்சிக்கு எதிராக மேற்குறிப்பிட்ட இரண்டு கட்சிகளும் எடுக்கும் நடவடிக்கைகள் கழகத்தின் எல்லா மட்டத்திலும் கசப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலை தொடருமானால் அதுபற்றி இறுதி முடிவெடுக்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு பொதுக்குழு அதிகாரமளிக்கிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதிக்கும் இந்திரா காந்திக்கும் முட்டல் மோதல்கள் தொடங்கிவிட்டதாக செய்திகள் முளைக்கத் தொடங்கின. இதை உறுதி செய்வது போல பம்பாயில் நிருபர்களைச் சந்தித்தார் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ். அப்போது அவர் கூறிய செய்தி வெறும் பரபரப்புச் செய்திதான் என்று முதலில் சொல்லப்பட்டது. உண்மையில் அந்தச் செய்திதான் அடுத்த சில வருடங்களுக்கு தமிழக அரசியல் களத்தைப் பரபரப்பாக வைத்திருந்தது.
தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியைக் கவிழ்க்க இந்திரா காந்தி சதி செய்கிறார்; திமுகவின் முக்கியப் பொறுப்பில் உள்ள மூன்று பேரைப் போட்டித் தலைமைக்குத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மீது விளம்பர வெளிச்சம் வேகமாகப் பாய்ச்சப்படுகிறது. இதுதான் ஃபெர்ணாண்டஸ் போட்ட குண்டு. யார் அந்த மூன்று பேர் என்ற கேள்வி தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்றோரை அந்த மூவர் பட்டியலில் வைத்து கிசுகிசுத்தனர்.
கூட்டணிக் கட்சிகளுடன் பனிப்போர் நடந்துகொண்டிருந்த சூழலில் உள்கட்சிப் பிரச்னைகளும் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. நேரடி வாக்குவாதமாகவோ, அறிக்கை யுத்தமாகவோ அல்லாமல் வேறு வழியில் ஊடல்கள் நடந்தன. முக்கியமாக, மதுப்பழக்கம் விழுப்புணர்வுப் பிரசாரக்குழுவுக்கு எம்.ஜி.ஆர் தலைவராக நியமிக்கப்பட்டார் அல்லவா? அது தொடர்பான கூட்டங்களுக்கு பெரிய அளவில் மக்கள் திரளவில்லை என்று சொல்லி கட்சிக்குள் சிலர் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தன்னுடைய பிரசாரத்துக்கு இருக்கும் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தும் கடிதங்கள் சிலவற்றை வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.
இந்தப் பின்னணியில் 1972 ஜனவரி மாதம் தஞ்சாவூரில் திமுகவின் செயற்குழுவும் பொதுக்குழுவும் கூடின. ஆனால் அந்தக் கூட்டங்களுக்கு எம்.ஜி.ஆர் செல்லவில்லை. கட்சிக்குள் இருந்த புழுக்கம் வெளிப்படத் தொடங்கியது. முதலமைச்சர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் முற்றிக்கொண்டே வருவதாக ஊடகங்கள் கிசுகிசுக்கத் தொடங்கின. உண்மையில் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையே மறைமுக மோதல்கள் நடைபெறுவது வாடிக்கையான விஷயம்தான். ஆனால் எதுவுமே பெரிய அளவில் வெடிக்காமல் அமைதியாகவே அடங்கிவிடும். ஆதித்தனார் விஷயத்திலும் அப்படித்தான். அமைச்சர் பதவி விஷயத்திலும் அப்படித்தான்.
அண்ணா உயிருடன் இருந்தபோதே இருவருக்கும் இடையே மறைமுக மோதல் சம்பவம் ஒன்று நடந்தது. அது, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பானது. நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக திமுகவைச் சேர்ந்த அனைவரும் பிரசாரம் செய்யவேண்டும். கருணாநிதி அதைத்தான் செய்தார். ஆனால் எஸ்.எஸ்.ஆரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் தேர்தல் வேலைகள் செய்தார்.
எம்.ஜி.ஆரின் செயல் கருணாநிதியை ஆத்திரப்படுத்தியது. அண்ணாவிடம் சென்று புகார் கூறினார். இருப்பினும், கருணாநிதி ஆதரித்த எஸ்.எஸ்.ஆர் வெற்றிபெற்றுவிட்டதால் பிரச்னை பெரிதாகவில்லை. அதேசமயம், எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் சில காலம் கலந்துகொள்ளாமல் இருந்து தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார் கருணாநிதி. பிறகு எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பிறகு நிலைமை மாறி, இருவரும் இணைந்துகொண்டனர்.
இப்படி கடந்தகாலங்களில் நடந்தது போலவே மதுவிலக்கு தொடர்பான கருத்துவேறுபாடுகளும் அகன்றுவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து அரங்கேறிய நிகழ்வு ஒன்று இருவருடைய மோதலையும் வேகப்படுத்தியது. அது, மு.க. முத்துவின் திரைப்பிரவேசம்!
(தொடரும்)
0
- ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக