செவ்வாய், 11 அக்டோபர், 2011

திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு திருச்சி இடைத் தேர்தல்

Krishnaswamy


திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.
வரும் 13ம் தேதி நடக்கும் இந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார்
. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.
இந் நிலையில் ஸ்டாலினை, புதிய தமிழகம் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஐயப்பன், மாநகர மாவட்டச் செயலாளர் சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து, நடைபெறவுள்ள திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தனர்.

பரமகுடி சம்பவம் தேர்தலில் எதிரொலிக்கும்-கிருஷ்ணசாமி:

இந் நிலையில் பரமக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 9 அப்பாவி தலித் மக்கள் கொல்லப்பட்ட விவகாரம், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியல் வெளியீடு, உள்ளாட்சி அமைப்புகளின் எல்லை வரையறை ஆகியவை அறிவிக்கப்படும் முன், ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டாக இருந்த 9 கட்சிகளை கடைசி நிமிடம் வரை, கூட்டாளி என்று நினைக்க வைத்து அதிமுக தலைமை ஏமாற்றி விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களை பிடித்து விடலாம் என்ற அதிமுகவின் கனவு பலிக்காது. மாறாக மிகப்பெரிய தோல்வியே கிடைக்கும்.

கடந்த செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது தலித்கள் இறந்தனர். இதற்கு குறைந்தபட்ச மனிதாபிமான விஷயமான ஆறுதல் கூட, அதிமுக தரப்பில் தெரிவிக்கவில்லை.

இதை ஜாதிக் கலவரமாக சித்தரிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் தலித்கள் கொல்லப்பட்ட விவகாரம் திருச்சி மேற்கு தொகுதியில் நிச்சயம் எதிரொலிக்கும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அதிமுகவுக்கு புதிய தமிழகம் நிச்சயம் ஆதரவு தரவில்லை. நேர்மையான சுயேச்சைகளுக்கு ஆதரவு தருவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக