செவ்வாய், 18 அக்டோபர், 2011

நடனம், சண்டை எல்லாவற்றிலும் எம்.ஜி.ஆரையே பிரதிபலித்திருந்தார் முத்து

கணக்கு காட்டவேண்டும்!

க – 25
கருணாநிதியின் வீட்டில் கதாநாயகன் ஒருவர் தயாராகிக் கொண்டிருந்தார். அவர், கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து. தனது சொந்த நிறுவனமான பூம்புகார் புரொடக்ஷன்ஸ் மூலம் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் படம் எடுக்க முடிவுசெய்தார் கருணாநிதி. படத்தின் பெயர், ‘பிள்ளையோ பிள்ளை’. தொடக்கவிழாவுக்கு எம்.ஜி.ஆரே நேரில் வந்தார். அவரே க்ளாப் அடித்து படத்தைத் தொடங்கி வைத்தார். முத்துவுக்கு வாழ்த்துகளைக் கூறினார். பிறகு படம் முடிந்ததும் சிறப்புக்காட்சிக்கு வந்தார். படத்தில் வரும் பாடல் ஒன்றில் கீழ்க்காணும் வரிகள் இடம்பெற்றன.
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! – நீ
மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!
மு.க. முத்துவின் நடிப்பில் எம்.ஜி.ஆரின் சாயல் அளவுக்குமீறி இருந்தது. நடனம், சண்டை எல்லாவற்றிலும் எம்.ஜி.ஆரையே பிரதிபலித்திருந்தார் முத்து. ‘உனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொள்’ என்ற வாழ்த்து சொல்லி, கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார் எம்.ஜி.ஆர். முத்துவின் அடுத்தடுத்த படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்கள் எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்குரிய கதாநாயகிகளான மஞ்சுளா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்றோர்தான்.

எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் தனது மகன் முத்துவைத் திரைத்துறையில் களமிறக்கியிருக்கிறார் கருணாநிதி என்ற பேச்சு திரையுலகத்திலும் அரசியல் வட்டாரத்திலும் ஒருசேரக் கேட்டது. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களைப் போலவே ஒவ்வொரு ஊரிலும் மு.க. முத்து ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்படுவதாக செய்திகள் வந்தன. ஆனால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் இருவருமே கருத்து கூறவில்லை. இருப்பினும், இந்திரா காங்கிரஸ் தலைவர்களுடன் எம்.ஜி.ஆர் நெருக்கமாக இருக்கிறார்; அவரை வைத்து திமுகவைப் பிளக்க இந்திரா திட்டம் தீட்டுகிறார் என்பன போன்ற ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருந்தன.
இந்தப் பின்னணியில் 8 ஏப்ரல் 1972 அன்று செங்கல்பட்டு மாவட்ட திமுக மாநாடு கூடியது. அதில் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார்.
கழகம் பிரிவுபட வேண்டும், கழகத்தில் உள்ளவர்களிடையே பிளவு ஏற்படவேண்டும் என்கிற நப்பாசையோடு நடத்தப்படுகிற ஏடுகளுக்குக் கழகத் தோழர்கள் ஆதரவளிக்கக் கூடாது. எம்.ஜி.ஆர் ஒருவரை வைத்துக் கழகம் வளரவில்லை. வேறு எந்த ஒருவருக்காகவும் கழகம் இல்லை. அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட நமது கழகம் அவருடைய கொள்கையின் மீதும் லட்சியங்களின் மீதும் பற்று வைத்துள்ள லட்சோப லட்சம் மக்களை நம்பித்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட கழகத்தில்தான்
பூசலை உண்டாக்க நினைக்கிறார்கள். பிளவை உண்டாக்கப் பார்க்கிறார்கள். நடக்குமா? அப்படியே உண்டாக்கினாலும்கூட அதை எங்களுக்குள் தீர்ப்போமே தவிர அது சந்தைக்கும் வராது. எங்களுக்குள் சச்சரவும் வராது. கழகத்தைப் பிளவுபடுத்த எவரும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்கப்போவதில்லை.
கட்சி பிளக்கப்படும், ஆட்சி கலைக்கப்படும் என்றெல்லாம் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தபோதும் முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். 1972 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகில் சோழ மன்னன் ராஜ ராஜனுக்கு சிலைத் திறப்பு விழா நடந்தது. உண்மையில் ராஜராஜனின் சிலையைக் கோயிலுக்குள் நிறுவ விரும்பினார் கருணாநிதி. ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி தரவில்லை. ஆகவே, சிலையைக் கோயிலுக்கு வெளியில் நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மத்திய அரசின் போக்கைப் பதிவு செய்யும் வகையில், ‘கோயிலுக்குள் இடம்தர மத்திய அரசு மறுத்துவிட்டதால் இங்கே சிலை அமைக்கப்படுகிறது’ என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டது.
அதிருப்தியில் இருந்த எம்.ஜி.ஆரை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் இன்னொரு விவகாரம் 1972 மே, ஜூன் மாதங்களில் கிளம்பியது. எஸ்.எஸ்.எம்.சுப்ரமணியம் திமுகவின் சேலம் மாவட்ட நிர்வாகி. அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏதோ தனிப்பட்ட தகராறு. திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் பத்திரிகை ஒன்றுக்குக் கடிதம் எழுதிவிட்டார். அது திமுகவுக்குள் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘கட்சிக்கு நான் வேண்டுமா? சுப்ரமணியம் வேண்டுமா?’ என்று எம்.ஜி.ஆர் குரல் உயர்த்தும் அளவுக்கு நிலைமை உச்சத்துக்குச் சென்றது. காரணம், அந்தக் கடிதத்தில் இருக்கும் செய்திகள் சர்ச்சைகள் நிறைந்தவை.
அந்நியச் செலாவணி, வருமான வரி போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆருக்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றைத் தீர்த்துக்கொள்ள மத்திய அமைச்சர்களின் உதவியை எம்.ஜி.ஆர் ரகசியமாக நாடிக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு வந்துள்ள நெருக்கடியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது காங்கிரஸ் கட்சி. குறிப்பாக, மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறார். இதுதான் கடிதத்தின் சாரம். கட்சித்தலைமை சுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்க, அவர் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் எம்.ஜி.ஆர் அமைதியடையவில்லை. பிறகு, சுப்ரமணியம் ஐந்தாண்டுகளுக்குக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆரை வைத்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த இந்திரா காந்தி முயல்கிறார் என்பது திமுக தலைவர்கள் சிலரின் கருத்து. அதற்கு வலுசேர்க்கும் வகையில் 1971ல் வெளியான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு பாரத் பட்டத்தைக் கொடுத்தது மத்திய அரசு. எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுகள் குவியத் தொடங்கின. ஆனந்த விகடன் இதழில் தனது வாழ்த்துகளைப் பதிவுசெய்தார் கருணாநிதி.
எனதருமை உடன்பிறப்பனையார் எம்.ஜி.ஆர் அவர்கள் இந்தப் பெருமைக்கு முற்றிலும் தகுதியானவர். தமிழக கலைத்துறையின் ஒளி மிகுந்த கதிராக அவர் விளங்கிவருகிறார். அவர் நடிப்பில் தென்றலின் சுகத்தையும் அவர் ஈடுபடும் சண்டைக்காட்சிகளில் மின்வெட்டுகளின் உயிர்ப்பையும் உணரலாம்.
இத்தனைக்கும் நாற்பதாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்ததற்காகவே பாரத் பட்டத்தைக் கொடுத்துள்ளது மத்திய அரசு என்று ப்ளிட்ஸ் பத்திரிகை எழுதியது. அந்தச் செய்தியைக் கொஞ்சம் விவகாரமாக மாற்றி, நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வாங்கிய பட்டம் என்று எம்.ஜி.ஆரைக் கேலி செய்தது ஒரு தமிழ் பத்திரிகை. இருப்பினும் திமுக சார்பில் எம்.ஜி.ஆருக்குப் பாராட்டு விழாக்கள் திமிலோகப்பட்டன.
ஆக, கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான ஊடல் தீர்ந்தது போலத் தெரிந்த சூழலில் 5 ஆகஸ்டு 1972 அன்று மதுரையில் மாவட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார் மதுரை எஸ். முத்து. மாநாட்டுக்குத் தலைமை முரசொலி மாறன். அந்த மாநாட்டில் தன்னுடன் நடிக்கும் நடிகை ஒருவரைக் கட்சியில் இணைக்க இருப்பதாகவும் மாநாட்டு மேடையில் அந்த நடிகையை உட்கார வைக்கவேண்டும் என்றும் கருணாநிதியிடம் கோரினார் எம்.ஜி.ஆர்.
அதற்கு கருணாநிதியோ, ‘ஏ, அப்பா! திராவிட இயக்கம் இதையெல்லாம் தாங்காது. கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தியுங்கள்’ என்று பதில் சொல்லிவிட்டார். மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவரான மதுரை முத்துவும் அதற்குச் சம்மதிக்கவில்லை. அந்த நடிகை ஜெயலலிதா! வருத்தம் தோய்ந்த முகத்துடனேயே எம்.ஜி.ஆர் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டார். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கடந்த மாநாடுகளில் எம்.ஜி.ஆர் தலைமையில் நடக்கும் ஊர்வலம் ஒன்றுக்கு மு.க. முத்து தலைமை தாங்கினார். மாநாட்டு மேடைக்கு எம்.ஜி.ஆர் வந்தபோது லேசான சலசலப்பு. உள்ளத்துக்குள் அதிருப்திகள் இருந்தாலும் வெளியே அதற்கு நேர்மாறாகப் பேசினார் எம்.ஜி.ஆர்.
ஏதோ இந்த அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள். இதுவரை நான் பேசாத பேச்சை, சொல்லாத சொல்லை, இப்போது சொல்லும்படி அவர்கள் தூண்டிவிட்டு இருக்கிறார்கள். அடுத்து நியாயப்பூர்வமாக எந்த ஆண்டில் தேர்தல் நடைபெற வேண்டுமோ அப்போது நடவாமல் அதைமீறி இடையில் தேர்தல் நடக்கும் நிலை உருவாக வேண்டும் என்று விரும்புவார்கள் என்றால், மோகன் குமாரமங்கலமோ, சி. சுப்ரமணியமோ அதற்குத் தூண்டிவிட்டிருந்தால், தாய்மார்களே, பெரியோர்களே, கழகத் தோழர்களே, நீங்கள் அதை அனுமதிக்கப்போகிறீர்களா? அப்படியொரு சூழ்நிலை தோற்றுவிக்கப்படுமானால் மறுவிநாடி ராணுவத்தையே தமிழ்நாடு சந்திக்கும்.
மாநாட்டில் கருணாநிதிக்கு ஆதரவாகப் பேசிவிட்டாரே ஒழிய, அவருடைய மனம் புகைந்துகொண்டிருந்தது. காரணம், எம்.ஜி.ஆர் மன்றங்கள் வலுக்கட்டாயமாக மு.க. முத்து மன்றங்களாக மாற்றப்படுகின்றன என்ற செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு வந்ததுதான். விஷயம் கருணாநிதிக்கும் சென்றது. அத்தகைய மு.க. முத்து மன்றங்கள் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். அதன்படியே சில மன்றங்கள் கலைக்கப்பட்டன. ஆனாலும் பிரச்னை தீரவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசுவதாகக் கருணாநிதிக்குத் தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.
மோகன் குமாரமங்கலம், சி. சுப்ரமணியம், ஈ.வெ.கி. சம்பத் போன்றோர் எம்.ஜி.ஆருக்கு அறிவிக்கப்படாத ஆலோசகர்களாக செயல்படுவதாகவும் செய்திகள். போதாக்குறைக்கு, மதுரை முத்து, வேலூர் நாராயணன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரை வம்புக்கு இழுக்கும் வகையில் தூக்கி எறிவோம் என்றெல்லாம் பேசியிருந்தனர். எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு ஏதோ விவகாரம் நடக்கப்போகிறது என்பது புரிந்துவிட்டது.
8 அக்டோபர் 1972. அண்ணா பிறந்தநாள் மற்றும் எம்.ஜி.ஆருக்குப் பாரத் பட்டம் கிடைத்தது ஆகியவற்றை விழாவாகக் கொண்டாடும் வகையில் சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று வரை கலைஞர் வழிநடப்போம் என்று பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அந்த விழாவில் தொனியை மாற்றிப் பேசினார்.
மந்திரிகள் – சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கு காட்டவேண்டும் என்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை திமுக பொதுக்குழு ஏன் கேட்கக்கூடாது?ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா? அதற்கு முன்னால் வந்ததா? இதைக் கேட்கக்கூடாதா? என் மனைவிமீது, உறவினர்கள்மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது? மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது?
ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான். சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் கணக்கு காட்டு. இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக்கொள்வோம். இந்தத் தீர்மானங்களைப் பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.
மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கும் சொத்துகள் இருந்தால் கணக்கு காட்டவேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காகக் குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தித் தூக்கி எறிவோம்.
புரட்சி நடிகர் என்று பட்டம் கொடுத்த தனக்கு எதிராகவே புரட்சி செய்ய எம்.ஜி.ஆர் துணிந்துவிட்டார் என்பது கருணாநிதிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது!
(தொடரும்)www.tamilpaper.net
0
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக