செவ்வாய், 11 அக்டோபர், 2011

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பாலியல் துன்புறுத்தல்

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இடம்பெறும் பெண் ஆசிரிய மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் மாவட்டச் செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகக் கருத்துப் பகிர்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்;

பெண் ஆசிரிய மாணவர்கள் விடுமுறை மற்றும் சம்பளப்பட்டியல் போன்றவற்றைப் பெறுவதற்காக அணுகும்போது கலாசாலையின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரியே இவ்வாறு நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெண் விரிவுரையாளர்களிடம் தெரிவிக்கக் கூடாதெனவும் அவற்றையும் தன்னிடமே தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் அச்சுறுத்தியுள்ளதுடன், அரசாங்க அதிபர் உட்பட மாவட்டத்தின் பொறுப்புவாய்ந்த நிலைகளில் உள்ளவர்கள் தனது நண்பர்கள் எனவும் தெரிவித்துள்ளராம்.
இது கண்டிக்கத்தக்க விடயம். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்பவர்கள் இனிமேல் சமூகத்திற்கு ஏற்றவர்களாக மாற வேண்டும். அல்லாது போனால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியிருக்கும். இதேபோல் மாவட்டத்தில் பெண்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கும் அரச அதிபர் நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை என சிலர் தெரிவிப்பதாக அறிகிறேன். ஆனால், ஒரு தரப்புக் கருத்தை வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது.
எனவே குற்றம்சாட்டப்பட்டுள்ள தரப்புகள் குறித்து தகவல்களை அறிந்து வருகின்றேன். அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக