புதன், 28 செப்டம்பர், 2011

JVP உடைவு RAW வின் சதியாம்

உடைவு றோவின் சதி!கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்புக் குற்றச்சாட்டு 

ஜனத்தா விமுக்திப் பெரமுனவில் (ஜே.வி.பி.) ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் உளவுத்துறையான றோ (Research and Analysis Wing) பிரதான காரணம் என்று பரபரப்புக் குற்றஞ்சாட்டு ஒன்றைத் தெரிவித்திருக்கிறார் அந்தக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
ஜே.வி.பி. கட்சியின் கொள்கைப் போக்கில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிருப்தியாளர்கள் குழு ஒன்று தோன்றி உள்ளது. அவர்கள் கட்சித் தலைமையைக் கைப்பற்ற முயன்று வருகிறார்கள். அது சாத்தியப்படாத பட்சத்தில் பிரிந்து சென்று புதிய கட்சி ஒன்றை உருவாக்கவும் முயற்சிசெய்து வருகிறார்கள்.
இது குறித்துத் கருத்துத் தெரிவித்த கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், றோவின் கைங்கரியமே கட்சியில் அதிருப்தியாளர்கள் தோன்றக் காரணம் என்றார்.
தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய அவர் தெரிவித்ததாவது:
ஜே.வி.பியை உடைப்பதற்கான இந்தச் சதி முயற்சி நீண்ட காலமாகவே இடம்பெற்று வந்தது. சதி குறித்து ஏற்கனவே எமது கட்சியில் இருந்து வெளியேறி தற்போது அமைச்சர் பதவியை வகித்துவரும் விமல் வீரவன்ஸகூட பலதடவை சுட்டிக்காட்டியிருந்தார். அது இப்போது உண்மையாகி இருக்கிறது. இப்போதும் அதிருப்தியாளர்களின் பின்னணியில் இந்தியாவின் உளவுத்துறையான றோ இருப்பதாக நாம் அறிகிறோம். இலங்கையில் உள்ள முற்போக்கான கட்சிகளை இரண்டாகப் பிரிப்பதில் இந்த உளவுத்துறை பெரும் பங்கை ஆற்றி வருகிறது. ஜே.வி.பியை இரண்டாக உடைக்கலாம். ஆனால், கட்சியை இல்லாமலாக்க எவராலும் முடியாது என்றார் அவர்.

தலைமையை கைப்பற்றுவோம்: மாற்றுக்குழு நம்பிக்கை
கட்சியின் தலைமைத்துவத்தைத் தாம் இந்த வாரம் முற்றாகக் கைப்பற்றி விடுவோம் என்று ஜே.வி.பியின் மாற்றுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன என்று மாற்றுக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். ஜே.வி.பியின் தலைமையகம் மற்றும் முக்கியமான அமைப்புகளின் நிறைவேற்று அதிகாரங்கள் போன்றவை மாற்றுக்குழுவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன என்று அந்தப் பேச்சாளர் கூறினார். கட்சியை முற்றாகக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஒன்றாக மாவட்ட மட்டங்களில் கூட்டங்களை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜே.வி.பி. மாற்றுக்குழு தெரிவித்தது. இதேவேளை, ஜே.வி.பியின் உட்கட்சிப் பூசல் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றது என்று ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் விஜிதஹேரத் கூறினார்.
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கட்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக