வியாழன், 22 செப்டம்பர், 2011

தகவல் பெறும் உரிமைச்சட்டம் ஜெயலலிதாவின் காட்டு தர்பாருக்கு கடிவாளம் போடும்


அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக, 2005ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் அமலாக்கத்துக்காக, தமிழகத்தில் 2006ம் ஆண்டு மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. தலைமை தகவல் கமிஷனராக கே.எஸ். ஸ்ரீபதி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பு.ஏ. ராமையா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் ஆகியோரை கமிஷனர்களாக நியமித்து, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முந்தையநாள், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சட்டப்படியான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி, இந்த நியமனங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் புதிய கமிஷனர்கள் நியமன உத்தரவுக்கு கோர்ட், இடைக்கால தடை விதித்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., தற்போது ஆளுங்கட்சியாக உள்ளதால், கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்குகளில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது இதுவரை தெளிவாகவில்லை.

யார் எதை விசாரிப்பது?: மாநில தகவல் ஆணையத்தில் தலைமை கமிஷனர் கே.எஸ்.ஸ்ரீபதி, பெருமாள் சாமி, சீனிவாசன் ஆகியோர் இடையே, மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது தொடர்பாக பணிப்பகிர்வுகள் அண்மையில் முடிவு செய்யப்பட்டன. இதன்படி, காவல்துறை, நீதித்துறை, தேர்தல்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகள் தொடர்பான, மேல்முறையீட்டு மனுக்களை தலைமை தகவல் கமிஷனர் ஸ்ரீபதி விசாரிப்பார் என்றும், பிற மாவட்டங்களில் இருந்து வரும் மற்ற துறைகள் தொடர்பான மனுக்களை பெருமாள்சாமியும், சீனிவாசனும் விசாரிப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது.


எத்தனை வழக்குகள்?: இதில் ஸ்ரீபதி, வாரத்தில் ஒரு நாளில் 10 வழக்குகள் வீதம் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 40 முதல் 50 வழக்குகளையே விசாரிக்கிறார். மற்ற இரு கமிஷனர்களும், நாளொன்றுக்கு தலா 10 முதல் 15 வழக்குகள் வீதம் மாதத்துக்கு மொத்தம் 250 மனுக்களை விசாரிக்கின்றனர். மொத்தத்தில் ஒரு மாதத்தில் மூன்று கமிஷனர்களும் சேர்ந்து, 300 மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கின்றனர். ஆனால், ஆணையத்தில் தாக்கலாகும் மேல்முறையீட்டு மனுக்கள் எண்ணிக்கை மாதம்தோறும் சில ஆயிரங்களை தாண்டுகிறது. "இதில், விசாரிக்கப்படும் வழக்குகளிலும் தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படாமல், பொது தகவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மட்டுமே வழங்கப்படுகிறது' என மனுதாரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க., மிரட்டல்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், முந்தைய ஆட்சியில் நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் சிக்கியவர்களை காப்பாற்ற, தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, அதிக கேள்விகளை கேட்டு பதில்களை பெற நடவடிக்கை எடுக்குமாறு, அண்மையில் தனது கட்சி வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பேசிய தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். இதன்படி, தி.மு.க., வழக்கறிஞர்கள் சார்பில் நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பாக, ஏராளமான மனுக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் குவிந்து வருகின்றன. இதற்கு, அந்தந்த பொது தகவல் அதிகாரிகள் பதில் அளிக்காவிட்டால், அவர்கள் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வார்கள். இவ்வாறு மேல்முறையீட்டு மனுக்கள் வரும் போது அனைத்து மனுக்களும், காவல்துறை, நீதித்துறை விவகாரங்களை விசாரிக்கும் ஸ்ரீபதியிடம் விசாரணைக்கு வரும். "அப்போது தி.மு.க., வினரின் மேல்முறையீட்டு மனுக்கள் வரும் நிலையில் அதில் ஸ்ரீபதியின் நிலைபாடு இப்போது போலவே அறிவுறுத்தல் தீர்ப்புகளாக இருக்குமா அல்லது வழக்கு ஆவணங்களை தி.மு.க.,வினருக்கு பெற்று தருவதாக இருக்குமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி' என தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலரும், "தாயகம்' என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் கூறினார்.

"அரசு நிர்வாகத்தில் நடைமுறை தகவல்களை, பொது மக்கள் அறிந்து கொள்ள கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமை சட்டத்தையும், தலைமை தகவல் கமிஷனரையும் பயன்படுத்தி அரசை மிரட்ட தி.மு.க.,வினர் முயற்சிப்பதே இதன் மூலம் தெரிய வருகிறது' என பல்வேறு தகவல் உரிமை சட்டஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு புதிய தலைமை தகவல் கமிஷனர் நியமனத்தின் போது, அதற்கான குழுவில் இருந்த தி.மு.க.,வை சேர்ந்த முதல்வர் கருணாநிதியும், மூத்த அமைச்சர் அன்பழகனும் சேர்ந்து, குழுவின் மற்றொரு உறுப்பினரான அ.தி.மு.க.,வை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் எதிர்ப்பை மீறி ஸ்ரீபதியை நியமித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரமும்; தீர்ப்புகளும்!

தகவல் ஆணையத்தின் அதிகாரங்களும், பணிகளும், மேல்முறையீடுகளும், தண்டனைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் ஐந்தாவது இயலில் 18, 19, 20 ஆகிய பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளன. மனுதாரர் கேட்கும் தகவல்களை அளிக்க, ஒரு பொது தகவல் அதிகாரி சட்டத்துக்கு புறம்பாக மறுக்கும் நிலையில், அது மேல்முறையீட்டு விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டால், அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, நாளொன்றுக்கு 250 ரூபாய் வீதம் மனுதாரருக்கு தகவல் கிடைக்கும் நாள் வரை, கணக்கிட்டு அபராதம் விதிக்கலாம். இந்த அபராதம் அதிகபட்சமாக 25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இது தொடர்பான விசாரணைக்கு, ஆஜராகாமல் இருக்கும் பொது தகவல் அதிகாரியை கைது செய்யவும், தகவல் கமிஷனர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை ஆணையராக, ஸ்ரீபதி பொறுப்பேற்றது முதல், இந்த சட்டத்தின் அதிகாரங்களை முழுமையாகவும், முறையாகவும் பயன்படுத்தாமல், "மனுதாரருக்கு பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கவும்' என, பொது தகவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மட்டுமே தீர்ப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவுறுத்தல்களை, எந்த பொது தகவல் அதிகாரியும் மதிப்பதில்லை. இதனால், மனுதாரர்கள் மீண்டும், தகவல் ஆணையத்தையே நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில், ஓரிரு அதிகாரிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மனு தாரர்கள் கூறுகின்றனர். தமிழக தகவல் ஆணையத்தின், இந்த போக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தை படிப்படியாக செயலற்றதாக்குவதுடன், இதன் மீதான மக்களின் நம்பிக்கையை குலைப்பதாகவும் அமைந்துள்ளது என, தகவல் பெறும் உரிமை ஆர்வலர்கள் கூறினர்.

தகவல் ஆணையத்தில் இதுவரை...

தமிழக தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது முதல் இதுவரை நடந்த நிர்வாக மாற்றங்கள் ஆண்டு வாரியாக விவரம்:

2006 ஜனவரி : மாநில தகவல் ஆணையம் அமைப்பு.

2006 ஜனவரி 28 : ஓய்வு பெற்ற அரசு அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன் தலைமைத் தகவல் கமிஷனராகவும், ஜி.ராமகிருஷ்ணன், ரத்தினசாமி ஆகியோர் தகவல் கமிஷனர்களாக நியமனம்.

2008 மே 7 : டி.ஆர். ராமசாமி, பெருமாள்சாமி, சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் தகவல் கமிஷனர்களாக நியமனம்.

2009 மே 12 : தகவல் கமிஷனர் ரத்தினசாமி ஓய்வு.

2010 ஆகஸ்ட் 30 : தலைமைத் தகவல் கமிஷனர் எஸ். ராமகிருஷ்ணன் ஓய்வு.

2010 செப்டம்பர் 1 : தலைமை தகவல் கமிஷனராக கே.எஸ். ஸ்ரீபதி நியமனம்.

2010 அக்டோபர் 9 : தகவல் கமிஷனர் ஜி. ராமகிருஷ்ணன் ஓய்வு.

2010 அக்டோபர் 30 : தகவல் கமிஷனர் டி.ஆர். ராமசாமி காலமானார்.

2011 மார்ச் : தகவல் கமிஷனர்களாக பு.ஏ. ராமையா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் நியமனம். (ஐகோர்ட் இடைக்கால தடை)

2011 ஜூலை 31: தகவல் கமிஷனர் சாரதா நம்பி ஆரூரன் ஓய்வு.

- வி.கிருஷ்ணமூர்த்தி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக