சனி, 17 செப்டம்பர், 2011

ஸ்பெக்ட்ரம்' வழக்கு; அரசியல் நோக்கில் நடக்கிறது: கருணாநிதி

சென்னை :"ஸ்பெக்ட்ரம்' வழக்கு, அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே தெரிகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:" ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் கைதாகியிருக்கும் பலருக்கு, விசாரணை ஏதுமில்லாமல், ஜாமினும் வழங்கப்படவில்லை."ஸ்பெக்ட்ரம்' முறைகேடு குறித்து, வழக்கு நடக்கும் கோர்ட்டில், ஏதேதோ காரணங்களைக் கூறி, காலம் கடத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.இந்த ஒதுக்கீடு விவகாரத்தில், கடும் கண்டனங்களைத் தெரிவித்து செய்தி வெளியிட்ட பல ஏடுகள் கூட, ஜாமின் வழங்காமல் இருப்பதையும் கண்டித்து, கட்டுரை மற்றும் தலையங்கம் எழுதியுள்ளன.இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் சிறையிலே உள்ள பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும்,"ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டுப் பிரச்னையில், ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டபோதிலும்; கனிமொழி, சரத்குமார் மீது, கலைஞர் "டிவி' சம்பந்தமான காசோலை கொடுக்கல், வாங்கல் என்ற நிலையில் தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை. இருப்பினும், 120 நாட்களாக விசாரணை இல்லாமல், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஜாமின் வழங்குவது சம்பந்தமாக, இந்த வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என, கோர்ட் கூறியிருந்தது. இந்நிலையில், டிராய் அறிக்கை அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டர்களில் ஒரு சிலர் வாதாடியதைக் காரணம் காட்டி, அந்த அறிக்கைக்காக வழக்கு விசாரணையை கோர்ட் பதினைந்து நாட்கள் ஒத்தி வைத்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கும் போது, முற்றிலும் அரசியல் நோக்கத்தோடு நடக்கின்ற காரியமாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. ஜாமின் மனு தாக்கல் செய்வதற்கான தேதியை, கோர்ட் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தும், அதற்கேற்ப, இப்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்காமல் தள்ளிவைத்திருப்பது, அரசியல் நோக்கத்தோடு நடக்கும் வழக்காகவே வெளிப்படையாகத் தெரிகிறது.இவ்வாறு, கருணாநிதி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக