செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கலைஞர்: ஸ்பெக்ட்ரம் முடியும் வரை சோனியாவை சந்திக்க மாட்டேன்

சென்னை :""ஸ்பெக்ட்ரம்' வழக்கு முடியும் வரை, சோனியாவை சந்திக்கமாட்டேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில், நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, கூறியதாவது:

டில்லி சிறப்பு கோர்ட்டில் ராஜா, கனிமொழி மீது புதிய குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளதே?
இந்த கேள்வியை கேட்கும் நீங்கள், அதே கோர்ட்டில் கனிமொழி மீதான விசாரணை முடிந்து விட்டது என்றும், ஜாமினில் விடுவதற்கு ஆட்சேபனை இல்லை என்றும் சொல்லியிருக்கின்றனரே, அதைப்பற்றி கேட்கவில்லையே?

சி.பி.ஐ.,யின் நடவடிக்கைக்குப் பின், கனிமொழிக்கு விரைவில் ஜாமின் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?
கிடைக்க வேண்டுமென்று தான் முயற்சிக்கிறோம்.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சம்பந்தம் இருக்கும் என நினைக்கிறீர்களா?
சிதம்பரம் மீது முழு நம்பிக்கை உள்ளதாக வெளிநாட்டிலிருந்த பிரதமரே சொல்லியிருக்கிறார்.

ஐ.மு., கூட்டணி அரசு சிதம்பரத்தை பாதுகாக்கும் அளவிற்கு, ராஜாவை பாதுகாக்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு உள்ளதா?
அரசியலில் வருத்தப்படவோ, மகிழ்ச்சி அடையவோ, இதுபோன்ற நிகழ்வுகளை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தது பற்றி?
அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்தபின், நாடு திரும்பியுள்ளார். அவரை மனிதாபிமானத்தோடு உடல்நலம் விசாரிப்பது பற்றிய யூகங்களுக்கு இடமில்லை.

டில்லி சென்று சோனியாவை சந்திப்பீர்களா?
நான் இந்த வழக்குக்காகவே கோர்ட்டிற்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது சென்றால் பத்திரிகைக்காரர்களாகிய நீங்கள் எல்லாம் சும்மாயிருக்க மாட்டீர்கள். உங்கள் கற்பனைக் குதிரையை எப்படி வேண்டுமானாலும் ஓடவிட்டு விடுவீர்கள். அதனால் தான், இந்த வழக்கு முடிந்த பின் டில்லி சென்று சோனியாவை நிச்சயமாகச் சந்திப்பேன். நான் மனித நேயம் உள்ளவன், மனிதாபிமானம் உள்ளவன். தோழமைக் கட்சியின் தலைவரை எந்தளவிற்கு மதிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக