செவ்வாய், 6 செப்டம்பர், 2011

ஜனாதிபதியிடம் திமுக புகார்,அதிமுக ரவுடிகளைப் போல குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது

டெல்லி: பொய்யான புகார்களின் பேரில் திமுகவினரை அதிமுக அரசு கைது செய்து அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது. ரவுடிகள் மீது ஏவப்படும் குண்டர் சட்டத்தின் கீழ் திமுகவினரைக் கைது செய்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம், திமுக எம்.பிக்கள் குழு இன்று புகார் கொடுத்தது.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பிக்கள் இன்று பிற்பகல் குடியரசுத் தலைவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து இந்தப் புகார் மனுவை அளித்தனர்.

குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திமுகவினர் மீது அதிமுக ஆட்சி வேண்டும் என்றே பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. நில அபகரிப்பு என்ற பெயரில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது அதிமுக அரசு.

இதுவரை 90 திமுக நிர்வாகிகளை பொய் வழக்கின் கைது செய்துள்ளது அதிமுக அரசு.

உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் அதில் திமுகவினர் பணியாற்ற விடாமல் தடுப்பதற்காகவே இந்த வழக்குகளைப் போட்டு கைது செய்து வருகின்றனர். பல முன்னாள் அமைச்சர்களை அதிமுக அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுகவினர் மேற்கொண்ட நில அபகரிப்பு விவகாரங்களை கிடப்பில் போட்டுள்ளது அதிமுக அரசு.

ரவுடிகள் மீது ஏவப்படும் குண்டர் சட்டத்தின் கீழ் திமுகவினரை கைது செய்கிறார்கள். முழுமையான மனித உரிமை மீறலில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமருடன் ஆலோசிப்பதாக குடியரசுத் தலைவர் உறுதி
திமுக எம்.பிக்களின் மனுவைப் பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதாக தெரிவித்ததாக பின்னர் திருச்சி சிவா எம்.பி. செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக