செவ்வாய், 6 செப்டம்பர், 2011

மக்களிடம் எடுபடாத அரசு கேபிள் டிவி.. விலகும் ஆபரேட்டர்கள்!

சென்னை: புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவையில் மக்கள் விரும்பிப் பார்க்கும் சன் டிவி உள்ளிட்ட முக்கிய சேனல்கள் இல்லாததால், மக்களிடையே இந்த சேவை எடுபடவில்லை. இதனால் அரசு கேபிள் டிவியில் மிக ஆர்வமாக இணைந்த ஆபரேட்டர்கள் அதிலிருந்து விலக ஆரம்பித்துள்ளனர். இதனால் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

மேலும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பும், அரசுத் துறைக்கே உள்ள லட்சணத்துடன் தான் உள்ளது. அதன் சிக்னலில் போதிய தரம் இல்லாததால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்களை மக்கள் வாட்டி எடுக்க ஆரம்பித்துள்ளதோடு, பாப்புலர் சேனல்கள் இல்லாத மோசமான சேவையைத் தந்துவிட்டு, பணம் கேட்டு இந்தப் பக்கம் வர வேண்டாம் என எச்சரித்தும் அனுப்புகின்றனர்.

மக்கள் விரும்பும் சேனல்கள் இல்லாததால் பொது மக்களின் கோபத்துக்கு ஆளாகி வருவதாக கேபிள் டிவி ஆபரேட்டர்களே வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளனர்.

முதல்கட்டமாக 70 இலவச சேனல்களைக் கொண்டு இந்த ஒளிபரப்புச் சேவை தொடங்கும் என்றும், கட்டண சேனல்களை சேர்த்து பின்னர் 90 சேனல்கள் அளிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் அதிகமாகப் பார்க்கப்படும் சன் டிவி சேனல்களோ, ராஜ் டிவி சேனல்களோ, விஜய் டிவியோ அதில் இல்லை.

தமிழ் சேனல்களை பொருத்தவரை சன் குழும சேனல்களே முதலிடத்தில் உள்ளன. இந்தச் சேனல்கள் தெரியாததால், அவற்றில் வரும் தொடர் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் இல்லத்தரசிகள் கடும் கோபம் கொண்டுள்ளனர். தங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டர்களை துளைத்தெடுக்கின்றனர், ஏன் சன் டிவி தெரியவில்லை என்று.

மேலும் பிரபலமான ஆங்கில செய்தி சேனல்களோ, கார்ட்டூன் சேனல்களோ கூட அதில் இல்லை. இதனால் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என யாரையுமே இந்த அரசு கேபிள் டிவி சேவை கவரவில்லை. எனவே அனைத்து தரப்பினரின் அதிருப்திக்கும் ஆளாகி நிற்கின்றனர் கேபிள் ஆபரேட்டர்கள்.

ரிமோட்டை அப்படி இப்படி மாற்றும்போது மட்டுமே பார்க்கப்படும் சில சேனல்கள் மட்டும் அதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முதல் பொது மக்கள் வரை யாரும் திருப்தியாக இல்லை.

ஏற்கெனவே பலர் நேரடியாக செயற்கைக் கோளிலிருந்து சேனல்களைப் பெறும் டிடிஎச் சேவைக்கு மாறிவிட்டனர். சன், டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ், டிஷ் என பல நிறுவனங்கள் இந்த சேவையை போட்டி போட்டு வழங்குகின்றன. ஆனால் இதில் மறைமுக கட்டணம் நிறைய பிடுங்கப்படுகிறது என்ற பரவலான குற்றச்சாட்டு இருப்பதால், பலர் மீண்டும் கேபிள் டிவிக்கே திரும்பினர்.

ஆனால், அரசு கேபிள் தான் ஒரே வழி என்று மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினால், டிடிஎச் சேவையை நோக்கி மக்கள் பெருமளவில் படையெடுக்கப் போவது மட்டும் நிச்சயம் என்கிறார்கள் இந்த கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டுள்ளோர். இதனால் இருக்கும் வருமானமும் போகப் போகிறது என்று இவர்கள் அச்சமும் தெரிவிக்கின்றனர்.

இந்த பயத்தில் சில இடங்களில் டிடிஎச் மூலம் சில கட்டண சேனல்களை பெற்று, அதை அரசு கேபிள் மூலம் சில ஆபரேட்டர்கள் சட்ட விரோதமாக ஒளிபரப்பும் வேலையும் நடக்கிறது.

ஏற்கனவே கேபிள் டிவிக்காரர்கள் செய்த அடாவடியாலும், கேபிள் டிவியின் ஒளிபரப்புத் தரம் காரணமாகவும், தமிழகத்தில் சுமார் 30 சதவீத வீடுகள் கேபிள் டி.வியிலிருந்து டிடிஎச் சேவைக்கு மாறிவிட்டன.

இப்போது அரசு கேபிள் டிவி சேவையை முறியடிக்க இந்த டிடிஎச் நிறுவனங்கள் சலுகைத் திட்டங்களை அறிவிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு மிக அதிகமான, தரமான ஒளிபரப்புடன் கூடிய, வெரைட்டியான சேனல்களை இவர்கள் தர ஆரம்பித்தால், கேபிள் டிவிக்கான கேபிள்கள் காக்கா உட்கார மட்டும் பயன்படும் என்கிறார்கள் இந்தத் தொழிலில் நீண்டகால அனுபவம் உள்ளவர்கள்.

மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பயன்படுத்தும் அனலாக் தொழில்நுட்பத்தில் 90 சேனல்கள் வரைதான் அளிக்க முடியுமாம். இதில் டிவி சேவை தவிர வேறு எந்த வசதியையும் அறிமுகப்படுத்த முடியாது. கேபிள் மூலமான இன்டர்நெட் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

அரசு கேபிள் டிவியிலிருந்து தூத்துக்குடி ஆபரேட்டர்கள் விலகல்:

இந் நிலையில் தூத்துக்குடியில் எஸ்இஇ மற்றும் டிசிஎஸ் என்ற இரு எம்எஸ்ஓக்கள் மூலம் சுமார் 200 கேபிள் ஆபரேட்டர்கள் இணைப்பு வழங்கி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள 2 எம்எஸ்ஓக்களையும் சேர்த்து 200 ஆபரேட்டர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில்,
அரசு கேபிள் டிவியில் இருந்து வரும் சிக்னல் போதிய தரம் இல்லை. மக்கள் விரும்பும் தமிழ் சேனல் அதில்இல்லாததால் பொதுமக்கள் டிடிஎச் சேவைக்கு மாறிய வண்ணம் உள்ளனர். மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தரவேண்டிய சந்தாவையும் தர மறுக்கின்றனர்.

இதனால் மாதந்திர வருமானத்தை இழப்பதுடன் சம்பளம், வாடகை, கடன் தொகையை செலுத்த முடியாமல் கேபிள் ஆபரேட்டர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இதில் கவனம் செலுத்தி நெல்லையில் உள்ள டிஜிட்டல் ஹெட் என்ட் மூலம் தரமான சிக்னல் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் விரும்பும் சேனல்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு கிடைக்கும் வரை நாங்கள் ஏற்கனவே ஒளிபரப்பி வந்த சேவையை தொடர்ந்து ஒளிபரப்பி வருவோம். அரசு கேபிள் டிவியில் துல்லியமான டிஜிட்டல் ஹெட் என்ட் மூலம் அனைத்து மக்களும் விரும்பும் தமிழ் சேனல்கள், கட்டண சேனல்கள் கிடைத்தவுடன் அரசு சேவையை தொடர்ந்து மக்களுக்கு அளிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் அரசு கேபிள் டிவி ஒளிப்பரப்பை நிறுத்திவிட்டு, பழையபடியே தங்கள் ஒளிப்பரப்பை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

அதே போல நாகை, ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கேபிள் ஆபரேட்டர்கள், மாவட்ட கலெக்டர்களை சந்தித்து இதே புகார்களை அடுக்கியுள்ளனர்.

இந் நிலையில் அரசு கேபிளில் சேர முன்வராத ஆபரேட்டர்களை மிரட்டும் வேலைகளும் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக