திங்கள், 5 செப்டம்பர், 2011

கூட்டமைப்பின் விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது!யாழ்ப்பாணத்தில்


யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (2011-09-04) தமிழ் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்கள், மற்றும் சமயத் துறவிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த 2வாரகாலமாக நிலவி வரும் பதற்ற சூழ்நிலை விரிவாக விவாதிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

மர்ம மனிதர்கள் என்று அழைக்கப்படும் அநாமதேய நபர்களின் நடமாட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதன் தொடர் விளைவாக பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்களை துரத்தி பிடிப்பதில் ஈடுபட்ட பொதுமக்கள் மோசமாக தாக்கப்பட்டு குடாநாடு முழுவதும் பயப்பிராந்தியின் பிடியில் சிக்கி இருப்பது பற்றியும் மக்களின் இயல்பு வாழ்வு மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது பற்றியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன

1.குடாநாட்டிலும் மற்றும் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும், மலையகத்தின் சில இடங்களிலும் மற்றும் புத்தளத்திலும் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐனாதிபதியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதுடன், இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாண சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமயத் தலைவர்கள், அறிவுஜிவிகள், அரசியல் நடவடிக்கையாளர்கள் என்போரை உள்ளடக்கிய ஒர் குழு கலந்து கொள்ள வேண்டும்.

2.எதிர்வரும் செவ்வாய்க்கிமை (2011-09-06) ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற கூட்ட நடவடிக்கைகளில் தமிழ்த்தேசிய (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்குகிழக்கின் குறிப்பாக குடாநாட்டில் இன்றைய நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

3.குடாநாட்டின் இன்றைய நிலைமையில் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அரசாங்கத்திற்கும் வெளியுலகத்திற்கும் எடுத்துரைக்கும் நோக்குடன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை யாழ் குடாநாட்டில் உள்ள ஒர் ஆலய முன்றலில் எதிர்வரும் சனிக்கிழமை (2011-09-10) மேற்கொள்ளுவது.

இக் கூட்டத்திற்கு நல்லையாதீன முதல்வர், தென்னிந்திய திருச்சபை பேராயர், பாராளுமன்ற உறுப்பினர்கள் (புலி)சுரேஷ்பிரேமச்சந்திரன்,சரவணபவான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், எம். கே. சிவாஜிலிங்கம், என் .சிறீகாந்தா, தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். எக்ஸ். குலநாயகம்,; சூழவியலாளர் பொ. ஐங்கரநேசன், யாழ் மாவட்ட உள்ளுராட்சிச் சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மனிதவுரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா. சங்கையா வரவேற்புரை நிகழ்த்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக