புதன், 21 செப்டம்பர், 2011

உரிய சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தரப்பும் இணைக்கப்பட வேண்டும்

அரசு – தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் உரிய சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தரப்பும் இணைக்கப்பட வேண்டும்


அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக முஸ்லிம் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தாம் மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டியது முக்கியமானது. தீர்வு காண்பதென்பது தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கும் அவசியமானது எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் கூறினார்.

அரசாங்கத்துடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு முஸ்லிம் தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் கருத்துத் தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் நேரடியாக இதுவரை எந்தப் பேச்சுக்களையும் நடத்தாதபோது அரசாங்கத்துடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுக்களை நாம் வரவேற்பதோடு அதற்கு ஆதரவு வழங்கத் தயாராகவிருப்பதாகவும் கூறினார்.
இதேவேளை அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிய சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தரப்புக்களும் பேச்சுக்களில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் நடத்தி வருவது மிகவும் நல்லதொரு விடயம். இதனை தாம் வரவேற்பதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடியவகையில் தீர்வொன்று முன்வைக்கப்படுவது அவசியம் என்றும் கூறினார்.
தமிழ் பேசும் மக்களின் பகுதிகளான வடக்கு, கிழக்கில் தனி அரசியல் அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஆராய்ந்து தீர்வொன்று எட்டப்படுவதை தமது கட்சி வரவேற்பதாக ஹசன் அலி தெரிவித்தார்.மேலும் கருத்துத் தெரிவித்த ஹசன் அலி தமிழ் பேசும் மக்கள் என்று வரும்போது முஸ்லிம்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். உரிய சந்தர்ப்பம் வரும்போது முஸ்லிம்களும் பேச்சுவார்த்தைகளில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளோம்.
முஸ்லிம்களுடன் பேசவேண்டும் தமிழ்த் தரப்புடன் மாத்திரம் பேச்சுக்கள் நடத்தக்கூடாது என அடம்பிடித்து அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நாம் ஒருபோதும் குழப்பமாட்டோம். இந்தப் பேச்சுவார்த்தைகளை நாம் பூரணமாக வரவேற்கின்றோம்.எனினும் முஸ்லிம்களும் தனியான ஒரு இனம் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக