திங்கள், 19 செப்டம்பர், 2011

முதல்வரை புகழ்வதில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பெரும் போட்டி

புதிய அரசு அமைந்தவுடன் நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பெரிய அளவில் பரபரப்போ, அமளியோ, கடும் விவாதங்களோ இல்லாமல் காணப்பட்டது.

அ.தி.மு.க., ஆட்சி அமைத்த பின், கடந்த மே 23ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்புடன் துவங்கியது தமிழகத்தின் 14வது சட்டசபையின் கூட்டத் தொடர். இதன்பின், கவர்னர் உரை, பட்ஜெட், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் என மொத்தம் 33 நாட்கள் சட்டசபை நடந்துள்ளது. புதிய சட்டசபை கட்டப்பட்ட பின், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டசபை நடைபெறும் என அறிவித்து, ஒரு வாரத்துக்குள், பழைய சட்டசபையை புதுப் பொலிவுடன் மாற்றியமைத்தது, பொதுப்பணித் துறையின் சாதனை.இந்த சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சி தே.மு.தி.க., தான். ஆனால், அதன் தலைவர் விஜயகாந்த் அதிகளவில் சட்டசபைக்கு வரவில்லை. துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தான் அதிகளவில் சபைக்கு வந்தார். மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் புதியவர்கள் என்பதால், அவர்கள் எழுதி வைத்த உரையை படித்ததுடன் நிறுத்திக் கொண்டனர்.

அதேபோல, மற்ற கட்சியினரைப் போல, முதல்வரை, "புரட்சித் தலைவி', "அம்மா' என்றெல்லாம் தே.மு.தி.க.,வினர் புகழவில்லை.அதேபோல தான், இரண்டு கம்யூனிஸ்ட்களும். பரமக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தவிர, மற்றவற்றில் அரசு மீது எந்தக் குற்றச்சாட்டையும் அவர்கள் சுமத்தவில்லை.
மாறாக, முந்தைய தி.மு.க., அரசையும், மத்திய அரசையும் குறை சொல்லியே, பேசி முடித்தனர். அதேநேரத்தில், முதல்வரை புகழ்வதில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பெரும் போட்டியே காணப்பட்டது.

கடந்த ஆட்சியில், சட்டசபையில் அதிக நேரம் பேசி, முக்கிய இடத்தை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை சட்டசபையில் அடையாளம் தெரியாமல் போனது. அக்கட்சியின் தலைவர் கோபிநாத் சபைக்கு வருவதே இல்லை. விஜயதாரணி, பிரின்ஸ், ஜான் ஜேக்கப் ஆகிய மூவர் மட்டும் தவறாமல் சபைக்கு வந்தனர். தொகுதி பிரச்னைகள் பற்றி பேசிவிட்டு சென்றனர்.

கடந்த ஆட்சியில் இன்னொரு பிரதான கட்சியாக காணப்பட்ட பா.ம.க.,வின் நிலையும் இந்த முறை பரிதாபமாக இருந்தது. அதன் தலைவர் குரு சபைக்கு வருவதில்லை. மற்ற இரண்டு உறுப்பினர்களான கலையரசன், கணேஷ்குமார் ஆகியோர் மட்டும் சபைக்கு வந்து, வாய்ப்பு கொடுத்த போது மட்டும் பேசினர். சட்டசபையிலேயே மிகவும் இளைஞரான கணேஷ்குமார், உருப்படியான விஷயங்களை பேசினார்.

மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, பார்வர்டு பிளாக் போன்றவை, முதல்வரை புகழ்வதிலும், முந்தைய ஆட்சியாளர்களை வசைபாடி கைதட்டல் பெறுவதிலும் குறியாக இருந்தன. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மட்டும், பல்வேறு விஷயங்களில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

பிரதான எதிர்க்கட்சியாக இருந்திருக்க வேண்டிய தி.மு.க.,வுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், சட்டசபை நிகழ்ச்சிகளில் பரபரப்பு காணப்படவில்லை. முதலில் தங்களுக்கு ஒரே வரிசையில் இடம் ஒதுக்கவில்லை என தி.மு.க.,புறக்கணித்தது. அதன்பின் சபைக்கு வந்ததும், துரைமுருகனின் "பாடி லாங்வேஜ்' பற்றி குறை கூறப்பட்டதால், மீண்டும் புறக்கணித்தது. மீண்டும் சபைக்கு தி.மு.க.,வினர் வந்த நாள் மட்டும் பரபரப்பாக இருந்தது. அமளி நிலவியது. ஆனால், அன்றும் பேச அனுமதிக்கவில்லை என வெளியேறியதால், அதோடு சபையில் பரபரப்பு நின்றுவிட்டது.

தினமும் காலையில் வந்த தி.மு.க.,வினர், திருக்குறள் வாசித்ததும் கிளம்பிச் சென்று விட்டனர். இவர்கள் சென்ற பின், சட்டசபை முடியும் வரை, புகழ்மாலைகளையும், வசைபாடுகளையும் கேட்க முடிந்தது. ஆனால், எந்த பரபரப்பும், கூச்சல் குழப்பமும் இல்லாமல், அமைதியாக தினமும் சபை முடிந்தது.

இந்த கூட்டத் தொடரில் மிகப் பெரிய எதிர்பார்ப்பே, முதல்வர் ஜெயலலிதா தான். அனைத்து நாட்களும் சபைக்கு வந்த அவர், பெரும்பாலான நேரம் சபையிலேயே இருந்துள்ளார். அதுமட்டுமன்றி, தினமும், 110 விதியின் கீழ் அறிக்கைகள் வெளியிடுதல், கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு பதிலளித்தல் போன்றவற்றில், முதல்வர் அனைத்து தரப்பு எம்.எல்.ஏ.,க்களையும் கவர்ந்தார். அதுமட்டுமன்றி, உறுப்பினர்கள் பேசும் போது, குறுக்கிட்டு அவற்றுக்கு விளக்கம் அளிப்பது, தவறுகளை சுட்டிக் காட்டி திருத்துவது போன்றவற்றை முதல்வர் செய்ததால், எந்தளவு அவர் சபை நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.

ஆனால், எதிர்ப்புகள் இல்லாமல் சபை நடந்தது மட்டுமே குறையாக தெரிந்தது. குறிப்பாக, முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது கூட, அவற்றை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை. அதேபோல, தீர்மானங்கள் நிறைவேறும் போது, "மறுப்போர் இல்லை என்க' என்று சபாநாயகர் கூறுவார். முந்தையஆட்சியில், அ.தி.மு.க.,வினர், "இல்லை' என்று உரக்க குரல் கொடுப்பதும், "ஆம்' என்று ஆளுங்கட்சியினர் குரல் கொடுப்பதும் வேடிக்கையாக இருந்தது. ஆனால், அவ்வாறு, "இல்லை' என்று சொல்லக் கூட ஒருவரும் இல்லாதது வருத்தமான விஷயம் தான்.

-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக