திங்கள், 19 செப்டம்பர், 2011

மோடியின் உண்ணாவிரதத்தில் அதிமுக பங்கேற்றது தவறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்


குஜராத்தில் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக கடந்த 3 நாட்களாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இன்றுடன் தனது உண்ணாவிரத்தை அவர் முடிக்கிறார்.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரதிநிதிகளாக, பாராளுமன்ற கட்சி தலைவர் எம். தம்பித்துரை, மேல் சபை அ.தி.மு.க. தலைவர் வி.மைத்ரேயன் ஆகியோர் கலந்து கொண்டு, நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு அ.தி.மு.க. ஏன் ஆதரவு அளிக்கிறது? என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர்,
நரேந்திர மோடி சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற நிலை, சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவைதான் எங்கள் கொள்கை. அவரது நிலையும் இதை ஒட்டியே இருக்கிறது. நரேந்திரமோடி என்னுடன் போனில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்துக்கு சிலரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே எங்கள் கட்சியின் பாராளுமன்ற தலைவர் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகிய 2 எம்.பி.க்களை அனுப்பி வைத்தேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும் ஆமதாபாதுக்கு அதிமுக பிரதிநிதிகளை அனுப்பியது தவறானது என மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க பிரதிநிதிகளை அனுப்ப அதிமுக முடிவு செய்ததில் எங்களுக்கு உடன்பாடில்லை. அது தவறான முடிவு என நாங்கள் நினைக்கிறோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக