வெள்ளி, 16 செப்டம்பர், 2011

போட்டுத் தள்ளியதா சாதி? முதல்வர் சாதிக் கலவரம் என்று சித்திரித்து

கே.கே.மகேஷ், இரா.மோகன்


பரமக்குடி... அன்று பரலோக குடியாக மாறிப்போனது. தங்களது தலைவனுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களே அஞ்சலிப் பொருள் ஆகிப்போனார்கள்!

அழுவதற்குத் திராணியும் சிந்துவதற்குக் கண்ணீரும் இல்லாமல், மதுரை ராஜாஜி மருத்துவமனையின் சவக்கிடங்கின் வாயிலையே பார்த்துக்கொண்டு இருந்த மனிதர்கள் மனதில் என்ன ஓடி இருக்கும் என்பதை நம்மால் உணர முடிந்தது. அது போலீஸ் மீதான கோபமாகத்தான் இருக்க முடியும்!

மெலிதாகப் பேசிக்கொண்டு இருந்த மதுரை கமிஷனர் கண்ணப்பன் செல்போனுக்கு விடை கொடுத்துவிட்டு, ஒரு முறை சுற்றிலும் பார்க்கிறார். 'சரவணன் இங்க வாங்க. முத்துக்குமார் போக வேண்டிய வண்டி எங்கே இருக்கு?' என்று கேட்க... அதிகாரி சரவணன் சில காவலர்களுடன் அவரை நோக்கி ஓடி வருகிறார். அடுத்த சில நிமிஷங் களில் அமரர் ஊர்தி ஒன்று வாசலுக்கு வருகிறது. பரமக்குடி கலவரத்தில் இறந்ததாக கடைசியாக அடையாளம் காணப்பட்டவர் இந்த முத்துக்குமார். இந்தப் பட்டியலில் மொத்தம் ஏழு பேர். இந்த எண்ணிக்கை கூடவும் செய்யலாம். ஆனால், கூட வேண்டாம் என்பதே நம்முடைய பிரார்த்தனை!


பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதியில் கலவரம் என்பது 50 வயதைக் கடந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1957-ம் ஆண்டின் ஒரு மதிய வேளையில் நடந்த சமாதானக் கூட்டத்துக்கு மறுநாள்தான் இன்று அஞ்சலி செலுத்த மக்கள் கூடி இருக்கும் இம்மானுவேல் சேகரன் கொல்லப் பட்டார். சாதியின் காரணமாகத் தாங்கள் அடக்கப்பட்ட, அவமரியா தைக்கு ஆளாக்கப்பட்ட விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்கு ஒருவர் கிடைத்துவிட்டார் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்கத் தொடங்கிய மறுநாளே நடந்தது அந்தக் கொலை. அதற்குப் பிறகு நிற்கவில்லை அந்தக் கொலைகள்!


இம்மானுவேல் சேகரன் அதற்குப் பிறகுதான் தேவேந்திரர்களின் 'குலசாமி’யாகக் கருதப்பட்டார். செப்டம்பர் 11-ம் தேதி அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடி வட்டாரத்தில் கூட ஆரம்பித்தார்கள். ஆண்டுகள் கூடக்கூட கூட்டமும் அதிகரித்தது.

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் வரப்போகிறது என்றாலே ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றம் பற்றிக்கொள்ளும். ஆண்டுதோறும் விழா நெருக்கத்தில் (கடந்த ஆண்டைத் தவிர) யாராவது ஒருவர் கொலையாவதும் வழக்கமாகிப் போனது. இந்த ஆண்டுகூட, நினைவு தினத்துக்கு இரு நாட்களுக்கு முன் பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவர் பழனிக்குமார் கொல்லப்பட்டார்.

இம்மானுவேல் நினைவு தினத்துக்கு வரத் தீர்மானித்து இருந்த தமிழக மக்கள் முன்னேற் றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், பள்ளப்பச்சேரி கிராமத்துக்கும் போக முடிவுஎடுத்தார். அது நடந்தால் கலவரம் ஏற்படும் என்று சொல்லித் தடுத்தது போலீஸ். ''பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப் போவது தப்பா?'' என்று திருப்பிக் கேட்டார் ஜான் பாண்டியன். தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் தடுத்து நிறுத்திய போலீஸார், அங்குள்ள துப்பாக்கிச் சுடும் மையத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர். அதுவே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாகிப் போனது!

''போலீஸார்தான் முதலில் தாக்கினார்கள்'' என்று தலித்துகள் சொல்கிறார்கள். ''அவர்கள் கல்வீச்சு நடத்தியதால்தான் நாங்கள் தடியடி நடத்தினோம்'' என்கிறது போலீஸ். கடைசியில் பார்த்தால், போலீஸார் சிறு காயங்களுடன் கட்டுப் போட்டு மருத்துவமனையில் இருக்கிறார் கள். ஆனால், ஏழு தலித்துகள் பிணவறையில் கிடக்கிறார்கள். குண்டடிபட்டு இன்னும் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். லத்திகளாலும் கற்க ளாலும் மண்டை உடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வரவில்லை!

கூட்டம் கலைந்தபோது, கற்களும் செருப்புகளும் மட்டுமல்ல; மனிதர்களும் கொத்துக்கொத்தாக வீழ்ந்துகிடந்தார் கள். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு இரண்டு மணி நேரத்தில் சந்தி சிரித்தது!

போலீஸ் - தலித்துகளின் மோதல் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால், ஜான்பாண்டியனை அனுமதிக்காதது தவறு என்று கருணாநிதி அறிக்கை விடுகிறார். கருணாநிதி ஆட்சியில் நடந்தவற்றை ஜெயலலிதா விமர்சிக்கிறார். இந்த விதண்டாவாத அரசியலும் அதற்காக அப்பாவி மக்கள் பலியாவதும் என்று முடியும்? பொதுமக்களின் பாதுகாவலர்களான போலீஸ் எப்போது பொறுப்புடன் நடந்துகொள்ளப்போகிறது? சாதிரீதியான ஏற்றத்தாழ்வை எதிர் சாதிகள் மட்டுமல்ல... அரசு அதிகாரிகள் சிலரே கடைப்பிடிப்பது என்று நிற்கும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமலேயே இன்னும் எத்தனை அப்பாவிகளைப் பலி கொடுக்கப்போகிறோம்?

காவல் துறையின் சாதி வெறி!
'எவிடென்ஸ்’ கதிர்

''5 அடி நீளத்தில் பெரிய லத்திகளை வைத்து இருக்கிறது போலீஸ். ஒரு பெரிய யூரியா பை நிறைய கற்களைக் கொண்டுவந்தனர் போலீஸார். போலீஸ் எறிந்த கற்கள் எதுவும் சாலையில் கிடந்து பொறுக்கிய கல்லாக இல்லை. அத்தனையும் ரொம்ப ஃபிரெஷ்ஷாக இருந்தன. எனவே, இது போலீஸாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்! சாலை மறியல் சட்டப்படியானது அல்ல என்றால், முதலில் சாலை மறியல் செய்வோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். கேட்கவில்லை என்றால், மொத்தமாகக் கைதுசெய்து இருக்கலாம். தடியடி நடத்தப்பட்டாலும் அதன் நோக்கம் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டுமே தவிர, தாக்குவதாக இருக்கக் கூடாது. அதன் பின் கண்ணீர்ப் புகை குண்டு வீசலாம். நிலைமை அதையும் மீறினால் வானத்தை நோக்கி துப்பாக்கி யால் சுடலாம். கூட்டம் அப்போதும் கலையவில்லை எனில், முட்டிக்குக் கீழே சுடலாம். ஆனால், இங்கே ஒரு பதினைந்து, இருபது பேர் வரை நெற்றி யிலும் மார்பிலும் தலையிலும் குண்டு வாங்கி இருக்கிறார்கள். இது போலீஸாரின் சாதிய வெறியையே காட்டுகிறது. அரசு சார்ந்த காவல் துறையே ஒரு சாதிய மனோபாவத்தில் நடத்திய வன்முறைதான் இந்தத் துப்பாக்கிச் சூடு.

பலர் சித்திரிப்பதுபோல இது சாதிய மோதல் இல்லை. இரண்டு சாதிகளா இங்கே மோதிக்கொண்டன? சாதியத் தாக்குதல் என்றும் சொல்லக் கூடாது. போலீஸார் சாதிய மனோபாவத்துடன் வெறிகொண்டு தலித் மக்கள் மீது நடத்திய தாக்குதல் இது!''

அரசியல் சதி!
கிருஷ்ணசாமி, சட்ட மன்ற உறுப்பினர்

''பொதுவாக, தென் தமிழகத்தில் இதுபோன்ற தலைவர்களுடைய அஞ்சலிக்குச் செல்லும்போது சிறு சிறு சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். எளிதாகவும் இலகுவாகவும் காவல் துறை இதைக் கையாண்டு இருக்க முடியும். ஆனால், காவல் துறை தவறான முறையில் கையாண்டு, துப்பாக்கிச்சூடு நடத்தி, பரமக்குடியில் ஏழு பேர் உயிரைப் பறித்து இருக்கிறது. இனிமேல்தான் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதிக் கடிதம் தயார் செய்வார்கள். சென்னை அடையாரில் பணியில் இருக்கும் செந்தில்வேலன் என்கிற காவல் துறை அதிகாரி எதற்காக பரமக்குடிக்குப் பணிக்குச் சென்றார்? சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்ட செந்தில்வேலன், சந்தீப் பட்டீல் இருவரையும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அமர்வு உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். நடந்தவற்றை சாதிக் கலவரம் என்று கூறினார் முதல்வர். இது ஏதோ இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல்போல முதல்வர் சித்திரித்து தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் அராஜகத்துக்கு சாதி வண்ணம் பூசுகிறார்.

தியாகி இம்மானுவேல் சேகரன் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஒரு சில அதிகாரிகளுக்கு இதில் விருப்பம் இல்லை. இப்படி ஒரு துப்பாக்கிச்சூட்டை நடத்தி, அந்தப் பகுதியையே கலவர பூமியாக மாற்றிவிட்டால், அரசு விழாவாக இதை அறிவிக்க முடியாது என்பதற்காக செய்யப்பட்ட சதியாக இது இருக்கலாமோ என்று தோன்றுகிறது!'

- கவின் மலர்
thanks vikatan+raj,trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக