வெள்ளி, 16 செப்டம்பர், 2011

நரகத்திலும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவனையெல்லாம் காட்டி எங்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தார்கள் :நாஞ்சில் சம்பத்

மதிமுகவின் திறந்தவெளி மாநாடு இன்று  இரவு (15.9.2011) நடந்தது. 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டிற்கு திரண்டிருந்தனர்.இம்மாநாட்டில்கொள்கை பரப்புசெயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அவர்,அச்சம் தீர்க்கிற ஆணிவேர். மிச்சம் இருக்கிற தமிழர்களின் கடைசி நம்பிக்கை. என் உடல் இயக்கும் நல்லுயிர் வைகோ நடத்துகின்ற மகாநாட்டில் புலி இல்லாமல் இருப்பதா? என்று நினைத்து இங்கே நிஜ புலியே வந்ததுமாதிரி சிலையை அன்பளிப்பாக வழங்கினார்கள். பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.

இதுதான் சுத்தமான மகாநாடு. சுயமான மகாநாடு. இது வரை நடந்த மகாநாட்டில் எல்லாம் ஏதோ ஒரு தோட்டத்திலிருந்து ஒருவரை அழைத்து வருவீர்கள்.அங்கே அடிமை போல் இருப்போம்.
உங்கள் தகுதிக்கு சம்பந்தம் இல்லாமல் நீங்கள் ( வைகோ) அம்மாவுடன் கூட்டணி வைத்தீர்கள். என் தகுதிக்கு சம்பந்தம் இல்லாமல் நான் அம்மா என்று சொன்னேன். என்னைப்பெற்ற அம்மா கூட நான் இப்படி பேசி வந்ததற்கு மனம் வருந்தினார்.அந்த கட்சிக்கு நாங்கள் எப்படியெல்லாம் உழைத்தோம். சட்டமன்றத்திலே அந்த கட்சி எப்போது வெளிநடப்பு செய்தாலும் அவர்களின் கருத்துக்கு ஒத்துப்போய் வெளிநடப்பு செய்தோம். சட்டமன்ற அவை நேரத்திலே ஓ.பி.எஸ். ஒண்ணுக்குப்போவதற்காக எழுந்து சென்றால் கூட, வெளிநடப்பு செய்கிறார் என்று எழுந்துசென்றோம்.அப்படியெல்லாம் உழைத்த எங்களுக்கு மதிப்பு இல்லை.
நரகத்திற்கு போனால் கூட வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவனையெல்லாம் காட்டி,அந்த ஆணழகனைக்காட்டி எங்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தார்கள். 


அதனால் ஒதுங்கிக்கொண்டோம்.பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்; துளை செல்லும் காற்று இசையாதல் அதிசயம் என்று அண்ணன் வைரமுத்து எழுதினார்.எங்கள் கட்சியும் அதிசயம்தான். சட்டமன்ற தேர்தலிலே போட்டியிடாமல் ஒரு கட்சி நடைபோடுகிறது. அந்த அதிசயக்கட்சி எங்கள் கட்சி.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்றார்கள். எங்கள் பிள்ளைகளை இரண்டு மாதங்களாக படிக்கவிடவில்லையே. சமச்சீர் கல்வியில் அப்படி என்ன கோபம்? சரி, திருவள்ளுவர் மீது அப்படி என்ன கோபம்.அதை மறைக்கிறீர்கள். அதுவும் பச்சை ஸ்டிக்கரை வைத்து.
முக்கிய தலைவர்களின் படங்களையெல்லாம் கிழித்து எறிந்தீர்கள். இதுதான் படிச்சிக்கிழிப்பதா? கலைஞர் கொண்டுவந்ததையெல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்றால் கலைஞர் நடத்தி வைத்தை கல்யாணங்களையெல்லாம் ரத்து செய்துவிடச்சொல்லுவீர்களா?
திமுகவில் இப்போது யாரும் மகிழ்ச்சியாக இல்லை.  ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் கட்சி மகிழ்ச்சி திமுக.
2016 எங்களது இலக்கு ; அப்போது முடிப்போம் பலரது கணக்கு’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக