ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தீவிரவாதிகளை உருவாக்கியது யார்? அமெரிக்கா மிரட்டலுக்கு ஹினா ரபானி பதிலடி!.

இஸ்லாமாபாத்: கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத இயக்க தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானியை சந்தித்து பேச, அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் இஸ்லாமாபாத் வந்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி நேற்று டிவிக்கு

அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் காபூலில் கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தான் அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணமல்ல. தீவிரவாதத்தால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானை சோவியத் படைகள் ஆக்கிரமித்து இருந்த போது, முஜாகிதீன்களை உருவாக்கியது அமெரிக்காதான். அவர்களுக்கு பல ஆண்டுகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஊக்குவித்தது அமெரிக்கா. இப்போது தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தானை பலிகடா ஆக்க நினைப்பது தவறு. பாகிஸ்தான் அமெரிக்கா உறவில் சில சட்டதிட்டங்கள் உள்ளன. அவற்றை இருநாடுகளும் பின்பற்றுவது நல்லது.
பாகிஸ்தான் மக்களின் நலனுக்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக