சனி, 17 செப்டம்பர், 2011

பிரதமர் பதவி- மோடிக்கு ஆதரவா?- நேரடியாக பதிலளிக்க ஜெ மறுப்பு

சென்னை: வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார் முதல்வர் ஜெயலலிதா.
அடுத்த பிரதமர் ஜெயலலிதாவே என்று அவரை கொம்பு சீவும் முயற்சிக்கு குறைவே இல்லை.ஆனால் என்ன செய்வது சொத்து குவிப்பு வழக்கு வேறு பிராணனை வாங்குகிறது.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நரேந்திர மோடி உண்ணாவிரதத்தை ஏன் அதிமுக அளிக்கிறது?

பதில்: நரேந்திர மோடி சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற நிலை, சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவைதான் எங்கள் கொள்கை. அவரது நிலையும் இதை ஒத்திருக்கிறது. இதனால் ஆதரிக்கிறோம்.

நரேந்திரமோடி என்னுடன் போனில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்துக்கு சிலரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே எங்கள் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகிய 2 எம்.பிக்களை அனுப்பி வைத்தேன்.

கேள்வி: இது தேசிய அளவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?

பதில்: அப்படியல்ல. நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் இந்த ஆதரவு. வேறு எதுவும் இல்லை. சமூக நல்லிணக்கம், அமைதிக்காக இந்த உண்ணாவிரதத்தை மோடி மேற்கொண்டுள்ளார். அதை நான் ஆதரிக்கிறேன்.

கேள்வி: 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிப்பீர்களா?

பதில்: இது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி. அப்படி அறிவிக்கப்பட்டால் அந்த நேரத்தில் பதில் சொல்வேன்.

கேள்வி: பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் விசாரணை நடத்த கர்நாடக நீதிமன்றம் தடைவிதித்திருப்பதை உங்களுக்கு பின்னடைவாகக் கருதுகிறீர்களா?

பதில்: இல்லவே இல்லை. எனது வக்கீல்கள் இந்த வழக்கை சிறப்பாக கையாண்டு வருகிறார்கள்.

கேள்வி: அக்டோபர் 20ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவீர்களா?

பதில்: தேதி நிர்ணயித்து இருக்கிறார்கள். இதுபோன்று கடந்த காலங்களில் பல வழக்குகளில் ஆஜராகி இருக்கிறேன். இது எனக்கு புதிய விஷயமல்ல, பின்னடைவும் அல்ல என்றார் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக