திருச்சி:""இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னானோ, அவனிடமே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்,'' எனக் கூறி மத்திய அமைச்சர் அழகிரி, நிருபர்களிடம் ஆவேசம் காட்டினார்.நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சவுந்திரபாண்டியன், திருச்சி மாவட்ட தி.மு.க., துணைச் செயலர் குடமுருட்டி சேகர் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களைப் பார்க்க நேற்று காலை 10.30 மணிக்கு மத்திய ரசாயனத்துறை அமைச்சரும், தி.மு.க.,வின் தென்மண்டல பொறுப்பாளருமான அழகிரி, திருச்சி சிறைக்கு வந்தார். அவருடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் அமைச்சர் செல்வராஜ், எம்.பி., ராமலிங்கம் ஆகிய மூவரும் உடன் சென்றனர்.
காலை 10.35 மணிக்கு சிறைக்குள் சென்ற நால்வரும், அங்கு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சவுந்திரபாண்டியன், மாவட்ட துணைச் செயலர் குடமுருட்டி சேகர் ஆகிய நால்வரையும் சந்தித்து பேசினர். சிறிது நேரத்தில் சிறைக்கு வந்த எம்.பி., சிவாவும், அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.இந்த சந்திப்பு 11.20 மணி வரை நீடித்தது. சிறையில் இருந்தவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த அழகிரி, நிருபர்களை சந்தித்தார். அப்போது, பரமக்குடி கலவரம் குறித்து கேட்டபோது, "அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.அடுத்தபடியாக ஒரு நிருபர், "திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தி.மு.க., புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறதே?' என்று கேள்வி கேட்டார்.இதை கேட்ட அழகிரி டென்ஷன் ஆகிவிட்டார்.
கடுங்கோபத்துடன், ""எவன் சொன்னது, தி.மு.க., புறக்கணிக்கிறது என்று? சொன்னது யார்? அவனை கூட்டி வாங்க. எவன் சொன்னானோ அவனிடமே போய் கேள்வி கேளுங்கள்,'' என்று தெரிவித்தார்.உடனே நிருபரும் விடாமல், "தி.மு.க., தேர்தலில் போட்டியிடுவது உறுதியா?' என்று கேட்டார். அதற்கும் கோபத்துடன், ""எவன் சொன்னானோ அவனிடமே போய் கேளுங்கள். இவ்வளவு விவரமாக சொன்னவருக்கு அது தெரியாதா?'' என்று பதில் கூறிவிட்டு, காரில் ஏறி புறப்பட்டுச் சென்று விட்டார்.கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, "திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கலாமா அல்லது புறக்கணிக்கலாமா? என்று ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார். அதன் பின்னரே, தி.மு.க., இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்ற சந்தேகம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக