ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

:கட்சிகள் குழப்பம்:ராஜிவை கொன்றவர்களைக் காப்பாற்ற குரல் எழுப்புகின்றனர்:

தமிழகத்தில் மரண தண்டனை: அரசியல் சலசலப்பு:கட்சிகள் குழப்பம்:ராஜிவை கொன்றவர்களைக் காப்பாற்ற குரல் எழுப்புகின்றனர்: ராஜிவை கொன்றவர்வர்களுக்கு மன்னிப்பு அளித்தால் தேச விரோத சக்திகளுக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் ஊறு செய்பவர்களுக்கும் ஊக்கம் அளிப்பது போல் ஆகிவிடும் என எதிர்ப்புக் குரலும் மற்றொருபுறம் ஒலிக்கிறது!

சென்னை:இலங்கை பிரச்னையைக் கொண்டு மீண்டுமொரு அரசியல் களம், தமிழகத்தில் சலசலப்பாகி வருகிறது. இலங்கை தமிழர் நலனைத் தாண்டி, இந்தியாவின் இளைய தலைவர் என மக்களால் போற்றப்பட்ட ராஜிவை கொன்றவர்களைக் காப்பாற்ற, இன்று குரல் எழுப்புகின்றனர்.இன்று இவர்களுக்கு மன்னிப்பு அளித்தால், தேச விரோத சக்திகளுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் ஊறு செய்பவர்களுக்கும், ஊக்கம் அளிப்பது போல் ஆகிவிடும் என, எதிர்ப்புக் குரலும் மற்றொருபுறம் ஒலிக்கிறது.

அதே சமயம், அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு பற்றி இளைய தலைமுறையினர் காட்டிய ஆர்வத்தில், பத்தில் ஒரு பங்கு கூட இதற்குக் காணோம்.மூன்று பேருக்குத் தண்டனைக் குறைப்பு என்பது, தமிழக கட்சிகளின் பிரதான பிரச்னையாகி உள்ளது. ஆளும் கட்சி முதல், சிறு கட்சிகள் வரை, தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பா.ஜ., மார்க்சிஸ்ட் கட்சிகள், மரண தண்டனைக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்கின்றன. நளினி தூக்கை நிறுத்த உதவிய தி.மு.க., மற்ற மூன்று பேர் விஷயத்தில் அப்போதே அக்கறை காட்டாதது ஏன் என்று, மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்கிறார். காங்கிரசை பொறுத்தவரை, தங்களது தலைவரைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்கக் கூடாது என்பதில், உறுதியாக இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாக பேச அச்சப்படுகிறது.காங்கிரசின் முக்கிய கூட்டாளியான தி.மு.க.,வோ, மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிறது. "21 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர்.

இதையே, அவர்களின் அதிகபட்ச தண்டனையாகக் கருதி, மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்துகிறார். காங்கிரசின் தயவு தேவையில்லை என்ற நிலையிலிருந்தே, இப்பிரச்னையை தி.மு.க., அணுகுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எதுவெல்லாம் நடக்கக் கூடாது என தி.மு.க., நினைத்ததோ, அதுவெல்லாம் நடந்து விட்டது. இனி, காங்கிரசின் தயவு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று தான், தி.மு.க., கருதுகிறது. அதுவும், நில மோசடி வழக்குகளில் அடுத்தடுத்து தி.மு.க.,வினர் கைது என்ற நிலையில், "தமிழர் நலன்' என்ற பேச்சில் களமிறங்கி சலசலப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவேளை, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற்றினால், அதையே தமிழர்களுக்குச் செய்த தியாகமாக வெளிப்படுத்தவும், தி.மு.க., தயாராக உள்ளது. ஆனால், காங்கிரஸ் இவ்விஷயத்தில் மவுனம் சாதிக்கிறது.

மூவரின் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் என எழுந்துள்ள நெருக்கடியால் தான், சட்டசபை தீர்மானம் வரை அ.தி.மு.க., சென்றுள்ளது. ஆனால், அதனால் பயன் பெரிதும் இருக்காது என்பதை, மத்திய சட்ட அமைச்சர் குர்ஷித் வெளிப்படையாகக் கூறிவிட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்கிறது. அதன் தமிழ் மாநில குழுவோ, "தூக்கு தண்டனைக்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. தண்டனை குறைப்பு வேண்டி கோர்ட்டை அணுகியுள்ளனர். முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்' என, குழப்பமான கருத்தைக் கூறுகிறது.இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படாமல், தூக்கு தண்டனை அளிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றன. பொதுவாக, மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மக்கள் மன்றத்தில் அன்னியப்பட்டு விடுவோமோ என்ற எண்ணம், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

ராஜிவ் கொலைக்குப் பின், புலிகள் ஆதரவு, ஈழப் போராட்ட ஆதரவு என்ற நிலையிலிருந்து, தமிழக கட்சிகள் விலகியே இருந்தன. இன்று, சிலர் சலசலப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் நலன் என்பதை வேறுவிதமாகவும், பயங்கரவாதச் செயலால் நடந்த ராஜிவ் படுகொலை என்பதை வித்தியாசமாகவும் அணுகும் போக்கு, மக்களிடம் தெளிவாக இருக்கிறது.

மூன்று பேரையும், 11 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிட்டிருந்தால், அப்போது, இந்தளவிற்கு எதிர்ப்பு வந்திருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், 11 ஆண்டுகளுக்கு முன் தமிழக கவர்னரிடம், மூவரும் கருணை மனு அளித்தனர். இதை, தமிழக அரசு நிராகரித்தது. "அப்போது நிலவிய சூழலில், வேறு முடிவை எடுக்க முடியவில்லை' என, அப்போது முதல்வராக இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியது கருத்தில் கொள்ளத்தக்கது.

எஸ்.திருநாவுக்கரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக