ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தயாநிதி கடிதத்தால் சிதம்பரத்தை தொடர்ந்து பிரதமருக்கும் நெருக்கடி

புதுடில்லி: "2ஜி' விவகாரம் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, சிதம்பரத்தின் பதவிக்கு வேட்டு வைக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக, பிரதமருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி எழுதிய கடிதம், புதிய பூதத்தை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக, மன்மோகன் சிங், நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த இமாலய ஊழல், மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. "2ஜி' அலைவரிசையை ஏல முறையில் விற்கும்படி, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது' என, பிரதமர் அலுவலகத்துக்கு, நிதி அமைச்சகம் எழுதிய கடிதம், சமீபத்தில் வெளியாகி, டில்லி அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதனால், அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், "2ஜி' ஸ்பெக்ட்ரத்துக்கான விலை நிர்ணயம் தொடர்பாக, 2006ல், அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி, பிரதமருக்கு எழுதியதாக வெளியாகியுள்ள கடிதம், புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கடந்த 2006 ஜனவரியில், ராணுவத்திடம் இருந்து கூடுதல் ஸ்பெக்ட்ரத்தை பெற்று, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யவும், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யவும், மத்திய அமைச்சரவை குழுவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தார். இதனடிப்படையில், அமைச்சரவை குழு, 2006 ஜூனில் தன் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய அதிகாரம் அமைச்சரவைக் குழுவுக்கு இருப்பதை விரும்பாத, அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி, 2006 பிப்ரவரி 1ல், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தனது துறைக்கே வேண்டும் என, அப்போது வலியுறுத்தினார். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், அமைச்சரவை குழுவுக்கான அதிகார வரம்பை குறைக்க வலியுறுத்தியும், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய அதிகாரத்தை தங்கள் அமைச்சகத்திற்கு வழங்குவதை உறுதி செய்யக்கோரியும், 2006 பிப்ரவரி 28ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தயாநிதி கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உங்களை சந்தித்த போது, ராணுவ அமைச்சகத்திடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை விடுவித்து, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் விவகாரத்தில், மத்திய அமைச்சரவைக் குழுவின் செயல்பாடுகள் பற்றி பேசினோம். அப்போது, இந்த விஷயத்தில் அமைச்சரவை குழுவின் செயல்பாடு, நாங்கள் விரும்பியபடி இருக்கும் என, நீங்கள் உறுதி அளித்தீர்கள். அமைச்சரவை குழுவின் செயல்பாடு, ஸ்பெக்ட்ரத்தை எடுத்துக் கொள்ளும் அளவில் மட்டுமே இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், அதற்கு மாறாக அமைச்சரவை குழுவுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இது, தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் வழக்கமான பணிகள் பாதிக்கும் என, நினைக்கிறேன். எனவே, தயவுகூர்ந்து, இந்த விஷயத்தில் அமைச்சரவை குழுவின் செயல்பாடுகள் விஷயத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுகிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை தொடர்ந்து, அமைச்சரவை குழுவின் செயல்பாடுகளில், 2006 டிசம்பர் 7ல் மாற்றம் கொண்டு வரப்பட்டது. ராணுவத்திடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை பெறும் விவகாரத்தை மட்டும், அமைச்சரவை குழு கவனிக்கும் என, அமைச்சரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த விவகாரத்தை தான், தற்போது பா.ஜ., கட்சியினர் கையில் எடுத்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்திடமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், கூட்டணி தர்மம் கருதி இந்த முடிவை பிரதமர் எடுத்ததாக, பா.ஜ., கட்சியினர் கூறுகின்றனர்.
பிரதமரின் இந்த முடிவு தான், பின்னாளில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடப்பதற்கு காரணமாக அமைந்து விட்டதாகவும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில்," பிரதமருக்கு, தயாநிதி எழுதிய கடிதம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும். இது, வாய் மூடி, மவுனமாக இருக்க வேண்டிய விஷயம் இல்லை. குற்றச்செயலுக்கு உடந்தையாக இருக்கும் செயல்' என, கூறியுள்ளார்.
தயாநிதி கடித விவரத்தை, தகவல் உரிமைச் சட்டம் மூலம், விவேக் கார்க் என்ற வழக்கறிஞர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக