ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

யாழ்ப்பாணத்தின் தூக்கத்தை கெடுக்க விரும்புவர்கள் யார்?

யாழ் குடாநாட்டிலிருந்து கிறீஸ் பூதங்கள் வெளியேறி வவுனியாவைத் தாண்டிப் போய்விட்டார்கள் என்றார்கள். கிறீஸ் பூதங்களை பொலிசாரால் தேடிப்பிடிக்க முடியவில்லை. அவர்கள் மாயமாக மறைந்து விட்டார்கள். ஆனால் கிறீஸ் பூதம் வந்தது என்று சொல்லி பாதுகாப்பு தரப்பினரிடம் அடிபட்டு கால் கை உடைந்து வாழ்வில் முடங்கிப்போனவர்கள் நீதி வேண்டிப் போராடுகிறார்கள்.
கிறீஸ்பூதத்தின் மிரட்டல் முடிந்துவிட்டது என எண்ணியபோது இனந்தெரியாதவர்களின் கொலைவெறித் தாக்குதல், கொள்ளை ஆரம்பித்துள்ளது. வீடுகளுக்குள் புகுந்து யாரோ கொள்ளையடிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள். இவர்கள் யார் என்பதை பொலிஸ் விரைவில் வெளிக்கொண்டுவர வேண்டும். அல்லாதுவிட்டால், யுத்தம் முடிந்துவிட்டது சமாதானம் நிலவுகிறது என்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். கொக்குவில் கிழக்கில் – இரண்டு வீடுகளுக்குள் நேற்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலுள்ளவர்களை வாளால் வெட்டியும் ரீப்பைத்தடிகளால் அடித்தும் காயப்படுத்திவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்னொரு வீட்டில் அதிகாலை 3 மணியளவில் ஜன்னல் கம்பியை உடைத்து உட்புகுந்து வீட்டின் உரிமையாளரை வாளால் வெட்டியுள்ளனர்.
தொலைபேசி சமிக்ஞை கிடைத்ததும் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவங்களில் காயமடைந்த வைத்தியர் என்.சிவகோணேசன் (வயது 43), எஸ்.கனகலிங்கம் (வயது 72), சபாரட்ணம் செல்வராசா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலணையில் – நேற்று அதிகாலை 12.30 மணியளவில் 2ம் வட்டாரத்திலுள்ள வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாதவர்கள் வீட்டிலுள்ளவர்களை கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர். இதில் சபரிமுத்து யேசுதாசன் (57 வயது) என்பவர் இறந்துள்ளார். இவரது மனைவி ரஞ்சனாதேவி (வயது 43) மகன் முகுந்தன் (வயது 18) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை – காளிகோவிலடியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கியநிலையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இவர் அப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஐயர் இராஜசேகரசர்மா (வயது 31) என இனங்காணப்பட்டுள்ளார். தற்கொலையா? கொலையா? சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக